வானில் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரம் வரும்பொழுது நைல் நதிக்கு பிரச்சனை, அது அதிக வெள்ளத்தைக் கொண்டு வந்து நம்மை மூழ்கடித்து விடும் என்று ஒரு காலத்தில் மக்கள் நம்பினர். குறிப்பிட்ட பருவ காலத்தில் மழை அதிகமாகப் பெய்யும், அந்தக் காலத்தில் தான் இந்த நட்சத்திரம் வருகிறது என்ற அறிவியல் தெரிந்த உடன் அந்தப் பயம் நீங்கியது. ஒரு செயலுக்குப் பின்னால் அது ஏன் நடைபெறுகிறது, அதனுடைய அறிவியல் என்ன என்பது தெரியாத வரை நாம் பயந்து கொண்டு தான் இருப்போம். மற்றவர்கள் கூறும் கட்டுக்கதைகளையும் காது கொடுத்து கேட்டுக் கொண்டிருப்போம்.
இதை மாற்ற வேண்டும் என்றால் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டியது மிக மிக முக்கியம். புதிதாக ஒரு மண்சட்டி செய்ய வேண்டும் என்றால், உடைந்து போன மண் சட்டியில் இருக்கும் சூடு செய்யப்பட்ட மண்ணை எடுத்துச் செய்ய இயலாது. அதே நேரத்தில் புதிய களிமண்ணை உபயோகித்து தேவையான உருவத்தில் தயாரித்து அதை சுட்டால் நமக்கு வேண்டிய மண் சட்டியை தயாரித்து விடலாம். அதுபோலத்தான் அறிவியல் மனப்பான்மையை, மூட நம்பிக்கைகளில் ஊறி திளைத்த பெரியவர்களிடம் கொண்டு செல்வது அரிது. அதற்கு பதிலாக நாளைய சமுதாயத்தின் தூண்களாக இருக்கும் குழந்தை செல்வங்களிடம் கொண்டு செல்வது எளிது. அதைவிட இந்த செயல் வளமையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கட்டாய தேவையும் கூட.
“தலைகீழாகக் கவிழ்த்து வைத்திருக்கும் பாத்திரத்தைக் கொண்டு ஒரு பொட்டு நீர் கூட கொண்டு வர முடியாது” என்பது போல், மூடப்பழக்கம் ஏன் தவறு என்பதைப் பலமுறை உரக்க கூறினாலும் காது கொடுக்காத மனிதர்களிடம் பேசி பயனில்லை. அதற்குப் பதிலாகக் கள்ளம் கபடம் இல்லாத, அனைத்தையும் ஒரே தராசில் வைத்து பார்க்கும் குழந்தைகளிடம் கொண்டு செல்ல வேண்டும்.
கோபேர்னிகஸ் சூரிய மையக் கோட்பாட்டை முன்வைத்தபோது, சமுதாயம் அதை ஏற்க மறுத்தது. ஆனால் அறிவியல் மனப்பான்மையால் இன்று அது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இப்படி பல மூட நம்பிக்கைகள் பொய்யான புனைவுகள் எப்படி அறிவியலால் தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறிக்கொண்டே செல்லலாம்.
குழந்தைகளுக்குப் புரியும் வகையில் ஒரு செய்தியை சொல்ல வேண்டும் என்றால் அது கதை வடிவில் இருக்க வேண்டும். கதையில் எந்தவித கட்டுக்கதைகளும், அறிவியலுக்கு முரணான செய்திகளும் இல்லாத கதை அமைப்பை உருவாக்க வேண்டும். இது முதல் படி என்றால், இரண்டாவது சவால் சொல்லக்கூடிய அறிவியல் கருத்துக்களை எளிமையாகப் புரியும் வகையில் உருவாக்க வேண்டியது.
இடையிடையே ஏன் இப்படி நடந்தது? என்ற ஐயத்தை உருவாக்கும் வகையில் இந்தக் கதைகள் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் கேள்வி கேட்கும் திறன் குழந்தைகளுக்கு வளரும். யார் என்ன கூறினாலும் ஏன் அப்படி இருக்க வேண்டும்? என்று பயம் இல்லாமல் கேள்வி கேட்பார்கள். சரியான பதில் கிடைக்கும் வரை, படித்தும், கேட்டும், பார்த்தும், முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள்.
மூட பழக்க வழக்கங்களுக்கு எதிராகக் கேள்வி கேட்கத் தொடங்கினாலே அதைப் பேசுபவர்கள் யோசிக்கத் தொடங்குவார்கள். ஆயிரம் பேர் கூறினால் அது உண்மையாகத்தான் இருக்கும், என்று நினைத்து போலி அறிவியல் இப்பொழுது அதி வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. கைப்பேசி போன்ற நவீன ஊடகங்களின் வரவால் இது மேலும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. எது போலி? எது உண்மை என்பதைத் தெரிந்து கொள்ள அறிவியலை அறிய வேண்டும்.
“விதையுடன் சேர்த்துப் பழங்களை உண்டு விட்டால் வயிற்றில் மரம் முளைத்து விடும்” என்று யாராவது பயபடுத்தினால், சாப்பிடும் அனைத்து பொருட்களும் ஜீரணம் ஆகி விடுமே, என்ற பதிலைத் தர வேண்டும். அறிவியலை எளிமையாக எழுதிவிட்டால் மட்டும் போதாது எழுதிய செயல்களைச் சிறிய சிறிய சோதனைகள் மூலம் நடத்திக் காட்ட வேண்டும்.
“ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம்” என்பது போல் “ஒரு பரிசோதனை ஆயிரம் படங்களுக்குச் சமம்”. அதைக் குழந்தைகளே செய்து பார்க்க தூண்ட வேண்டும். தண்ணீரில் உப்பை கரைத்து அந்த உப்பு தண்ணீரை வெயிலில் வைத்து, உப்பு எப்படி உருவாகிறது என்பதைச் செய்முறையாகக் கூறும்பொழுது உப்பளங்களில் இருந்து எப்படி உப்பு வருகிறது என்பதை எளிதில் புரிந்து கொள்வார்கள்.
நம்மைச் சுற்றி நடக்கும் செயல்களில் எது போலி என்பதைக் கண்டறிந்து அது போலி என்பதைத் தெரிவிக்கக் குழந்தைகள் தயங்க மாட்டார்கள். குழந்தைகளை அறிவியல் பக்கம் கொண்டு வந்து விட்டால் அவர்கள் மட்டுமல்ல அவர்களின் பெற்றோர்கள், தாத்தா, பாட்டி என உறவினர்கள் அனைவரும் குழந்தையின் மழலை பேச்சைக் கேட்டு அடடா இது தெரியாமல் இப்படித் தவறாகச் செய்துவிட்டோமே என்று அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வார்கள்.
தரவுகள் எவ்வளவு முக்கியம் அவை நமக்கு என்ன கற்றுத் தருகின்றன என்பதைக் கதைகளின் மூலம் வெளிப்படுத்த வேண்டும்.
அறிவியல் மனப்பான்மை என்பது, ஒரு விஷயத்தைக் கேள்வி கேட்கும் மனநிலை, பகுத்தறிவு சிந்தனை, ஆதாரங்களின் அடிப்படையில் முடிவெடுத்தல், மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்குத் திறந்த மனதுடன் இருத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இது, மூடநம்பிக்கைகளையும், போலி அறிவியலையும் எதிர்த்து, உண்மையைக் கண்டறிய உதவும் ஒரு கருவி.
அறிவியல் மனப்பான்மை, புதிய கண்டுபிடிப்புகளுக்கும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது. இது, சமூகத்தின் பொருளாதார மற்றும் கலாச்சார முன்னேற்றத்திற்கு உதவுகிறது. அறிவியல் மனப்பான்மை, சமூகத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு, ஆதாரங்களின் அடிப்படையில் தீர்வு காண உதவுகிறது.
சிறார் இலக்கியம், அறிவியல் கருத்துக்களை எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கிறது. இது, மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தைத் தூண்டுகிறது.
இன்றைய சமுதாயத்தில், ஜோதிடம், மாந்திரீகம், மற்றும் அறிவியல் அடிப்படையற்ற மருத்துவ முறைகள் போன்றவை பரவலாக நம்பப்படுகின்றன. இவை மக்களைத் தவறான பாதைகளுக்கு இட்டுச் செல்வதோடு, முன்னேற்றத்திற்குத் தடையாகவும் அமைகின்றன. இதை மாற்ற, அடுத்தத் தலைமுறையினரிடம் அறிவியல் மனப்பான்மையை விதைப்பது அவசியமாகிறது,
அறிவியல் மனப்பான்மையை வளர்க்க, சிறுவர்களுக்கு அறிவியலை சுவாரஸ்யமாகவும், எளிதில் புரியும் வகையிலும் வழங்குவது முக்கியம். உதாரணமாக, “நிலவில் ஏன் நீர் இல்லை?” அல்லது “பறவைகள் எப்படிப் பறக்கின்றன?” போன்ற கேள்விகளுக்குப் புனைகதைகள், சிறுகதைகள், அல்லது படக்கதைகள் மூலம் பதிலளிக்க முடியும். இதன் மூலம், அவர்கள் ஆர்வத்துடன் கேள்வி கேட்கவும், பதில்களை ஆராயவும் பழகுவார்கள்.
தமிழில், சிறார் இலக்கியம் மூலம் அறிவியல் கருத்துகளைப் பரப்பும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அறிவியலாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் இணைந்து, குழந்தைகளுக்கான அறிவியல் புத்தகங்கள், கதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதி வருகின்றனர். இவை குழந்தைகளின் மனதில் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க உதவுகின்றன.
வேற்று மொழி ஆங்கிலக் கதைகளைத் தமிழில் எழுதுவதற்குப் பதிலாகத் தமிழிலேயே கதைகள் எழுத வேண்டும். அப்படி எழுதும் பொழுது தொழில்நுட்ப செய்திகளையும் அறிவியல் செய்திகளையும் நம்முடைய கதைகளின் ஊடே எளிமையாக எழுத இயலும். சமகால எழுத்தாளர்கள் பலர் தமிழில் அறிவியல் எழுதத் தொடங்கியுள்ளனர். இது எளிமையான முறையில் அறிவியல் கருத்துக்களைக் குழந்தைகளிடம் கொண்டு செல்ல உதவுகிறது.
அது மட்டுமில்லாமல் தொழில்நுட்ப வார்த்தைகளைத் தமிழில் எழுதவும் பயன்படுத்தவும் ஊக்குவிக்கிறது. இதன் மூலம் மொழி அறிவு வளர்வதோடு, ஒவ்வொரு செயலுக்கும் ஏன் அந்தப் பெயர் வந்தது என்பதைப் புரிந்து கொள்ளவும் வழி வகிக்கிறது. அதனால் புதிய சிந்தனை உடையவர்களாகக் குழந்தைகளை அறிவியல் மனப்பான்மை மாற்றுகிறது.
இன்றைய நவீன தொழில்நுட்பத்துடன் போட்டி போட்டு முன்னேற வேண்டும் என்றால் இன்றைய தொழில்நுட்பம் என்ன? அறிவியல் என்ன என்பது முதலில் புரிய வேண்டும். பழைய பஞ்சாங்கத்தையே பாடிக் கொண்டிருந்தால், கண்ணை மூடிக்கொண்டு சூரிய நமஸ்காரம் செய்வது போல் ஆகிவிடும். அறிவியல் மனப்பான்மையின் மூலம் உலகம் எங்கே இருக்கிறது? என்ன தொழில்நுட்பம் எங்கே பயன்படுகிறது? என்ற புரிதல் முதலில் வரும். இரண்டாவது அடுத்து நாம் எங்கே செல்ல வேண்டும் என்ற கேள்வியைக் குழந்தைகள் உருவாக்குவார்கள். அந்தக் கனவுகளை நனைவாக்க புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிய அறிவியல் மனப்பான்மை குழந்தைகளுக்கு ஊன்றுகோலாக அமையும்.
அறிவியல் மனப்பான்மை இல்லாமல், நமது முன்னேற்றம் முடங்கி நிற்கும். இன்று நாம் சந்திக்கின்ற பல சிக்கல்களுக்கு ஒரே தீர்வு – அறிவியல் நோக்குடன் சிந்திப்பது, கேள்வி கேட்பது, உண்மையை அறிதல். சிறார் இலக்கியத்தில் அறிவியல் சார்ந்த கருத்துக்களைத் தமிழில் எழுதுவோம் புதியதொரு சிந்திக்கக் கூடிய தலைமுறை, தவறுகளைத் தவறு என்று தைரியமாகச் சுட்டிக் காட்டக்கூடிய தலைமுறை, இது ஏன் போலி? எது உண்மை என்பதைத் தெளிவாக அனைவருக்கும் விளக்கக்கூடிய குழந்தைச் செல்வங்களை உருவாக்குவோம்.
- முனைவர் பெ.சசிக்குமார்
குறிப்பு: தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் “சிறார் இலக்கியக் கருத்தரங்கம் – 2025” எனும் தலைப்பில் கட்டுரைகள் பெறப்பட்டன. அவற்றுள் தேர்வான கட்டுரைகள், ஏப்ரல் 2025 நடைபெற்ற மாநிலச் சந்திப்பில் வாசிக்கப்பட்டது.

