தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் வெளியீடான “நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் – நோக்கமும் அதன் பாதையும்” (தொகுப்பு: பஞ்சு மிட்டாய் பிரபு) நூல் குறித்து நண்பர்களின் பதிவுகள். சிறார் கலை, இலக்கியத்தின் வரலாறு மற்றும் தற்காலப் போக்கினை இந்தப் புத்தகம் ஆவணப்படுத்தியுள்ளது.
வரலாற்று மதிப்புமிக்க நூல்!
1975ஆம் ஆண்டில் குழந்தை எழுத்தாளர் சங்க வெள்ளி விழாவை ஒட்டி “தமிழில் குழந்தை இலக்கியம் – ஒரு மதிப்பீடு” என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், வாழ்க்கை வரலாறு, அறிவியல், பத்திரிகை, திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி ஆகியன குறித்த நூலை வெளியிட்டது. சுமார் 48 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் & கலைஞர்கள் சங்கம் அதற்கு ஈடான நூலை வெளியிட்டுள்ளதாகக் கருதுகிறேன்.
வரலாற்று மதிப்புமிக்க இந்நூலை எல்லோரும் படித்துப் பாதுகாக்க வேண்டும்.

சிறார் இலக்கியத்தின் வழிகாட்டி!
சிறார்களின் எதிர்காலம் வாசிப்பில் மட்டுமே உள்ளது என்பதை இச்சமூகம் உணர்ந்துள்ள காலம் இது.
அதற்கான செயல்பாடுகளுக்குள் அரசு, ஆசிரியர்கள், பெற்றோர், சிறார் எழுத்தாளர்கள், சங்கங்கள் என எல்லோரும் பயணிக்க வேண்டியுள்ளது.
சிறார் வாசிப்புப் பழக்கத்தைக் கைவரப் பெறவும் தற்கால நவீன சிறார் இலக்கியத்திற்கான வழிகாட்டியாகவும் இந்நூல் இருக்கிறது.
இந்நூலை விவாதிப்பதன் மூலம் தமிழ்ச் சிறார் இலக்கியத்தை அடுத்த நிலைக்கு நகர்த்துவதாகும். சிறார்களுக்கு உகந்த இலக்கியத்தோடு குழந்தைகளை வளர்த்தெடுத்தல் என்பது அவர்களை அற்புத உலகத்திற்குள் அழைத்துச் செல்வதாக அமையும்.

ஆய்வுகள் மேற்கொள்ள விரும்புகிறவர்களுக்கு!
இன்றைய நவீனத் தமிழ் சிறார் இலக்கியத்தினை அறிந்துகொள்ள விரும்புகின்றவர்களுக்கு நான் பரிந்துரைக்கும் நூல் இது. ‘ நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம்’ என்னும் இத் தொகுப்பு நூலைத் தொகுத்திருப்பவர் பஞ்சு மிட்டாய் பிரபு.
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கம் – நடத்திய கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது.
கூடவே தமிழில் கலத்தால் அழியாத படைப்புக்களைக் கொடுத்த பல சிறார் இலக்கிய முன்னோடிகள் பற்றிய செய்திகளையும் இந்நூல் வழி அறிந்துகொள்ள முடியும். சிறார் இலக்கியத்தில் மாற்றுத்திறனாளிகள் -என்ற எனது கட்டுரையும் இத்தொகுப்பில் உள்ளது.
தமிழில் சிறார் இலக்கியத்தின் இன்றைய பயணம் பற்றி அறிய விரும்பும் ஒவ்வொருவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய தொகுப்பு இது.
தமிழில் ஆய்வுகள் மேற்கொள்ள விரும்புகிறவர்களுக்கும் இத்தொகுப்பு நிச்சயம் பயன்படும்.
சிறார் இலக்கியம் குறித்து விவாதங்களை உருவாக்கும் நூல்.
தற்காலச் சிறார் இலக்கியத்தின் குறுக்கு வெட்டுத்தோற்றத்தையும், கடந்த காலம் பற்றிய மதிப்பீட்டையும், சிறார் இலக்கியப் போக்குகள் குறித்த அறிமுகத்தையும்,
சிறார் இலக்கியம் செல்ல வேண்டிய பாதை குறித்தும் தெரிந்து கொள்ள வாசிக்க வேண்டிய நூல்.
சிறார் இலக்கியம் குறித்து தீவிரமான விவாதங்களை உருவாக்கும் நூல்.

சரியான திசையில் சிறார் இலக்கியத்தை முன்னெடுக்க உதவும் நூல்!
தமிழ்ச் சிறார் இலக்கியம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் காலம் இது. இந்த நிலையில் வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதும், தற்போது நம்முடைய சிறார் இலக்கியம் எந்த நிலையில் இருக்கிறது என்பதும், எதிர்காலத் தேவைகள் குறித்த பார்வையும் நமக்கு அவசியம் தேவை. அப்போதுதான் சரியான திசையில் சிறார் இலக்கியத்தை முன்னெடுக்க முடியும்.
அந்த வகைகளில் தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகள் சார்ந்து இந்த நூல் கவனம் செலுத்தித் தொகுக்கப்பட்டிருப்பது சிறப்பு.

ஆவணப் பெட்டகம்!
தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் அரியத் தகவல்களோடு வரலாற்றையும், புதிய பாணியில் எழுதப்படும் சமகாலச் சிறார் இலக்கியப் படைப்புகளையும், எதிர்காலத்தில் சிறார் இலக்கியம் செல்ல வேண்டிய திசை குறித்தும் நுட்பமாக விவரிக்கிறது இந்நூல்.
இலக்கிய வாசகர்கள் முதல் ஆய்வறிஞர்கள் வரை அனைவரும் வாசிக்க வேண்டிய ஓர் ஆவணப் பதிவாகவும் விளங்குகிறது.

அறிவுக் களஞ்சியம் இந்நூல்!
நீலக்கடல் சங்கமிக்கும் சில நூறு நன்னீர் ஆறுகளின் தொடக்கமும், தடம் பதித்த பயணமும் ஆச்சரியங்கள் நிறைந்தவை.
அதுபோல, தமிழ்க் குழந்தை இலக்கிய வரலாறு, கலைச் செயல்பாடுகள், சாதனைகள், வளர்ச்சி எனக் குழந்தை எழுத்துச் சிற்பிகள் கையளித்துள்ள உரைகள் பொருள் நிறைந்தவை. வியப்பில் ஆழ்த்துபவை.
குழந்தை இலக்கிய வாசகர்களுக்குக் கிடைத்துள்ள அறிவுக் களஞ்சியம் இந்நூல்.

பல்வேறு கோணங்களில் பேசும் நூல்!
நம்முடைய அடுத்த தலைமுறையின் இலக்கிய வளர்ச்சிப் படிநிலைகளுள் ஒன்றான சிறார் இலக்கியம் கடந்து வந்த பாதை, தற்போது நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் நாம் செய்ய வேண்டிய நகர்வுகள், எவ்வாறு முன்னெடுக்கலாம்? அதில் ஒவ்வொருவருடைய பங்கு என்ன? என்பதை பல்வேறு கோணங்களில் விவரிக்கப்பட்டு எழுதப்பட்டதுதான் இந்நூல்.

ஒரு நூற்றாண்டுக் குழந்தை இலக்கிய வரலாற்றை அலசி ஆராய்ந்துள்ளனர்
ஒரு நூற்றாண்டுக் குழந்தை இலக்கிய வரலாற்றின் அனைத்து அம்சங்களும் இந்த உரைகளில் ஆராயப்பட்டிருக்கின்றன. கடந்த காலப் பணிகள், சாதனைகள், இடைக்காலத் தேக்க நிலை, இன்றைய வளர்ச்சி, பலங்கள், பலவீனங்கள், சவால்கள், செய்ய வேண்டியவை-எனப் பல்வேறு அம்சங்களையும் உரையாளர்கள் அலசி ஆராய்ந்துள்ளனர்.

முழுமையான ஆய்வு நூல்!

சிறார் இலக்கியத்திற்குள் புதிதாக வருபவற்கு இப்புத்தகம் பெரிய திறப்பாக அமையும்!
குழந்தைகள் மீது அன்பும் அக்கறையும் கொண்ட அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல். அது மட்டுமன்றி சம காலத்தில் சிறார் இலக்கியம் மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக எழும் பல சந்தேகங்களுக்கும் அச்சங்களுக்கும் விடை அளிக்கும் ஒரு அகராதியாக இப்புத்தகம் உள்ளது. நூற்றுக்கும் அதிகமான புத்தங்களின் அறிமுகம் உள்ளதால் சிறார் இலக்கியத்திற்குள் புதிதாக வருபவற்கு இப்புத்தகம் பெரிய திறப்பாக அமையும் என்பதில் ஆச்சரியமில்லை. எனக்கு இந்த நூல் நான் அறிந்திடாத புத்தகங்களையும், தகவல்களையும் வழங்கியுள்ளது. குழந்தைகளுடன் ஆற்றிக்கொண்டிருக்கும் பணியில் புகுத்தக்கூடிய உத்திகளும் கிடைக்கப்பெற்றேன்.
இவ்வளவு செம்மையான உரைகள், நிரந்தரமாக புத்தக வடிவில் வந்தது இதனை பலரிடம் கொண்டு சேர்க்க வேண்டிய சமூக பொறுப்பினை சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் ஏற்றுக்கொண்டதினால் மட்டுமே சாத்தியமாயிற்று. இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகள், வாழ்த்துகள்!

Truly a treasure!
Just finished this book !!!! It is undoubtedly a “go-to”/”refer-to” book for everyone who is concerned about children!!!!!
Personally I have got a couple of ideas to implement in my workings.. And got tons of suggestions on unread books and few interesting facts too!!!
Truly a treasure!

இந்தப் புத்தகத்தைக் கொண்டு 10Phd தாராளமாகச் செய்யலாம்!
“அழ. வள்ளியப்பாவின் காலத்திலே சிறுவர்களுக்கான எழுத்தாளர்களின் பெயர்களையெல்லாம் தொகுத்து யார்? எவர்? என்ற புத்தகம் வெளியாகியிருக்கிறது என்ற செய்தி உண்மையில் பெரும் ஆச்சரியத்தைத் தருகிறது. சிறுவர் இலக்கியத்திற்கான மாநாடுகளையும் நடத்தியிருக்கிறார்கள் என்பதை இன்றைக்குக்கூட நாம் நினைத்துப் பார்க்கமுடியாத ஒரு செயலாக இருக்கிறது. கிட்டத்தட்ட 75ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் சிறுவர் இலக்கியத்தில் ஓர் புதிய அலை வீசுகிறது என்பதையே இந்தப் புத்தகம் காட்டுகிறது. தமிழ்நாட்டில் உள்ள சிறுவர் இலக்கியம் என்பது சுமார் 180 ஆண்டுக்கால வரலாற்றைக் கொண்டுள்ளது என்பதை இந்தப் புத்தகம் மிக விரிவாக ஆவணப்படுத்துகிறது.
ஒவ்வொரு கட்டுரையும் மிகமிக நுணுக்கத்துடனும், மிக நீண்ட அனுபவத்துடனும், தெளிவான புள்ளிவிபரங்களோடுனும் இடம் பெற்றுள்ளது. சிறுவர்களை பற்றித் தெரிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்த நூல் ஒரு பொக்கிஷம் எனக் கூறலாம்.
மேற்குலக ஆங்கில சிறார் இலக்கியத்திற்கு இணையாகத் தமிழ்நாட்டிலுள்ள சிறுவர் இலக்கியத்திலும் குழந்தைகள் உளவியல் சார்ந்த விவாதங்கள் அனைத்தும் நடந்துள்ளன. விமர்சன போக்கும் நிலவியுள்ளது என்பதையே இந்தப் புத்தகம் நமக்கு உணர்த்துகிறது. தங்களது சொந்த அனுபவத்திலிருந்து தமிழ்நாட்டு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் இதனைப் பேசியிருப்பது உண்மையில் ஆச்சரியம் தருகிறது. எது சிறுவர் இலக்கியம், அதில் என்ன இருக்க வேண்டும், சிறுவர் இலக்கியத்தின் வரையறை எது, அறம் போதிக்கும் படைப்புகள் சிறுவர் இலக்கியம் ஆகுமா? போன்ற விவாதங்கள் அனைத்தும் பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் நேரடியாக நடந்திருப்பது சிறுவர் இலக்கியத்தின் வளர்ச்சிப் பாதையையே காட்டுகிறது.
இந்நூல் தமிழ்நாட்டுச் சிறுவர் இலக்கிய வரலாற்றை மட்டுமே பேசுகிறது. ஆனால் இலங்கையில் மட்டும் 175 எழுத்தாளர்கள் சிறுவர் இலக்கியத்திற்குப் பங்களித்துள்ளனர். அவர்களது கதைக் களஞ்சியம் தனியே இருக்கிறது. சிறுவர் இலக்கிய வரலாறு குறித்து மூன்று புத்தகங்கள் வெளியாகியுள்ளன. ஆஸ்திரேலியாவில் சிறுவர் நாடகங்கள் தொடர்ந்து இடம் பெறுகின்றன. ஐரோப்பாவில் குழந்தைப் பாடல்கள் வெளியாகியுள்ளன. புலம்பெயர்ந்த இடத்தில் இரண்டாவது மொழியான தமிழைக் குழந்தைகளுக்கு எடுத்துச் செல்வது குறித்தெல்லாம் நாம் பேச வேண்டும். நாம் அனைத்தையும் உள்ளடக்கிப் பேச வேண்டும். இலங்கையில் உள்ள தமிழர்களின் சிறுவர் இலக்கியம் பங்களிப்பும் இடம் பெற்றால், புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பு குறித்தும் பேசி இருந்தால் அது இன்னும் பெரிய பார்வைக்கு வழிவகுக்கும். அது தமிழ்ச் சிறுவர் இலக்கியத்திற்கு பெரும் செழுமையைச் சேர்க்கும்.
உண்மையில் பஞ்சுமிட்டாய் பிரபுவிற்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் கதை சொல்லி நான் பார்த்திருக்கிறேன், அவர் பஞ்சு மிட்டாய் என்ற இணையத்தை நடத்துகிறார், ஓங்கில் கூட்டம் என்ற பதிப்பகத்தை நடத்துகிறார். பிரபு அவர்கள் சிறுவர் இலக்கியத்தில் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. இங்குச் சிறுவர் இலக்கியத்தை யாரும் கவனிப்பதில்லை, பல்கலைக்கழகங்கள் நாவல் சிறுகதை கவிதை என இலக்கியம் பற்றிப் படிக்க பல்வேறு பாடப்பிரிவுகளைக் கொண்டுள்ளன. ஆனால், அவைகூட சிறுவர் இலக்கியம் குறித்து அறிந்துகொள்வதில்லை. ஆனால், இந்தப் புத்தகத்தைக் கொண்டு 10முனைவர் பட்டமாவது (Phd) தாராளமாகச் செய்யலாம். அந்த அளவிற்குச் சிறுவர் இலக்கியம் குறித்து மிக விரிவாக இந்நூல் பேசி இருக்கிறது. இது பெரும் முயற்சி. ஒவ்வொரு பக்கத்திலும் பிரபுவின் உழைப்பு தெரிகிறது. நமது அருகே இருந்து இப்பணியை அவர் செய்து வருகிறார் என்பது மிகவும் மகிழ்ச்சியான ஒரு விசயம்.

நூலில் எப்படியும் 400 புத்தகங்கள் வரை மேற்கோள் காட்டி உள்ளனர்!


Author
-
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் சங்கம் – சார்பாகப் பதிவு செய்யப்படும் பதிவுகள்.
View all posts

