Tamil Nadu Children Writers and Artists Association

அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுத்தல் –  ந. பெரியசாமி

Reading Time: 2 minutes

வேப்பமர உச்சியில் நின்னு

பேயொன்னு ஆடுதுன்னு

விளையாடப் போகும்போது

சொல்லி வைப்பாங்க – உந்தன்

வீரத்தை கொழுந்திலேயே

கிள்ளி வைப்பாங்க…

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் ‘சின்னப் பயலே…’  பாடல் எக்காலத்துக்குமான பாடலாக இருக்கிறது. முட்டாள்தனங்கள் நிறைந்து கிடக்கும் பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளுக்கு அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுத்தல் அவ்வளவு எளிதல்ல. ஆளுமைமிக்க சிந்தனைவாதிகளையும், தத்துவ வாதிகளையும் நம் சமூகம் கொண்டிருந்தபோதும் முட்டாள்தனங்களின் பெருக்கம் பன்மடங்காக இருக்கிறது நம் காலத்தின் துயரம். கிளி ஜோதிடம் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இப்போ கனினியில் ஜோதிடம் பார்க்கிறோம். சாதிவாரியாக ஒன்றிணைய, ஒரே சாதியில் பெண்தேட என அறிவியல் வளர்ச்சியைக் கொண்டு நடக்கும் அசிங்கத்தின் கூத்துகள் நீண்ட பட்டியலைக் கொண்டது. இத்தகைய மோசமான சூழலில்தான் குழந்தைகளிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. 

தொழிற்சாலைகளில் பொருளை உற்பத்தி செய்து முறையான பாதுகாப்பில் வைத்து வானிக்கையாளர்களின் தேவைக்கு அனுப்பிவைப்பதைப் போன்று பெரும்பாலான பெற்றோர்கள் பிள்ளைகளை கவனமாக வளர்த்து தாங்கள் விரும்பும் பள்ளியில் படிக்கவைத்து, தாங்கள் ஆசைபடும் மேற்படிப்பை கொடுத்து, தாங்கள் விரும்பும் மாப்பிள்ளைக்கோ, பெண்ணுக்கோ திருமணம் செய்விப்பதையே வாழ்வின் இலட்சியமாக கொண்டுள்ளனர். இப்படியானவர்களின் குழந்தைகளிடையே  அறிவியல் மனப்பான்மையை திட்டமிட்டு உருவாக்குவதே நம்முன் இருக்கும் பெரும் சவால்.

நமக்கு இருக்கும் ஒரே ஆதாரம் கலை இலக்கியம். குழந்தைகளிடம் கலை இலக்கியம் வழியாக கட்டாயம் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்க முடியும். பிஞ்சில் பதியச் செய்தல் நல் விளைவிப்பை உருவாக்கும். எழுத்தாளர்கள் சமூக பங்களிப்பாக கருதி ஒரு படைப்பையாவது சிறுவர்களுக்காக உருவாக்குவதை கடமையாக கொள்ள வேண்டும். சிறுவர்களுக்காக எழுதுவது எளிதல்ல. ஆயினும் முயற்சித்து படைப்புகளை உருவாக்குதல் அவசியம்.

சிறார்களுக்கான பாடல்கள், கதைகள், கவிதைகள் யாவும் தற்கால சூழலுக்கேற்ப மாற்றங்களை உருவாக்குதல் வேண்டும். புத்தி கூறுதல், நடைமுறைக்கு ஒவ்வாத சூப்பர் ஹீரோக்களை முன்னிறுத்தி சாகசங்களை புரியச் செய்தல், சாத்தியமில்லாத செயல்களை சாத்தியப்படுத்தும் தந்திரக் கதைகளை உருவாக்குவது, உண்மைக்கு மாறானவற்றை உண்மையாக்காது இருத்தல் என்பதில் மிக நுட்பமாக கவனித்து படைப்புகளை உருவாக்குதல் வேண்டும்.

அனுபவத்திலிருந்து விலகி இருத்தல், தனிமனித அந்தரங்கம், உள்ளுணர்வு வெளிச்சம், தன்னுலையைக் கூறும் படைப்புகள் எனும் போக்கை மாற்றி கற்பனைகளின் எல்லைகளைத் தாண்டி, யதார்த்தத்தை உற்று நோக்க பழக்கும் படைப்புகளை உருவாக்க வேண்டும். கலைகளும் அறிவியலும் பிணைந்து இருக்கும் படைப்புகளை உருவாக்கும் பயிற்சியை மேற்கொண்டு அதுசார்ந்த படைப்புகளை உருவாக்குதல் வேண்டும்.

சமீபத்தில் கு.ஜெயபிரகாஷ் என்பவரின் மரமும், மண்ணுத் தாத்தாவும் எனும்  நூல் ஒன்றை வாசித்தேன். ஒரு தாத்தா நிறைய்ய சிறார்களோடு பாடல்பாடி அவர்களின் போக்கில் உரையாடலை நிகழ்த்தி, அவ்வுரையாடலின் ஊடே ‘ஒளிச்சேர்க்கை’ எப்படி நிகழ்கிறது என கதையாக சொல்லப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கதாக இருந்தது. இப்படி சின்னச் சின்ன அறிவியல் விசயங்களை எடுத்துக்கொண்டு கவிதையாகவோ, பாடலாகவோ, கதையாகவோ படைப்புகளை உருவாக்கலாம். அல்லது நாடகமாகக் கூட நிகழ்த்தலாம்.

கடைசி பெஞ்ச் தொகுப்புக்காக கவிதைகள் எழுத முனைந்தபோது அறிவுரை சொல்லும் தன்மையிலான கவிதைகள் வந்தன. ஐயோ இது கூடாதென கவிதைகளை தவிர்த்து காத்திருந்தேன். மாணவர்களின் உலகு குறித்து அறிந்துகொள்ள அவர்களின் உலகத்துள் பயணிக்க, சில திறப்புகள் உருவாகிட பின் கவிதைகள் வந்தடைந்தன. புத்தி சொல்லும் கவிதைகள், பிற்போக்கான கவிதைகள் அத்தொகுப்பில் இல்லை என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. ஆசிரியர் மாணவர்கள் நெருக்கம், ஆண், பெண் குழந்தைகளிடையே சமூகம் காட்டும் பாகுபாடு, சூழல் குறித்த விழிப்புணர்வு, இழந்தவைகள் மீதான ஏக்கம், சிறார் விளையாட்டெனும் தன்மைகளில் கவிதைகள் இருந்தன. அடுத்தடுத்த தொகுப்புகளில் அறிவியல் செய்திகளை கவிதையாக்கும் நம்பிக்கைக்கான பயிற்சியாகவும் இத்தொகுப்பு எனக்கு அமைந்தது.

சிறார்களுக்கு ஏன் அறிவியல் மனப்பான்மை வேண்டும். வேதகால மூடப்பழக்கங்களுக்கு கொண்டு செல்லும் மூடர்கள் நிறைந்த உலகில் சிறார்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பிறர் சொல்வதைக் கொண்டு அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அதன்மீது மாற்றுக் கருத்தை வைக்கவும், ஆய்வு நோக்கில் அணுகவும் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுத்தல் அவசியம்.

அறிவியல் மனப்பான்மை என்பது மனப்பாட பகுதியல் மதிப்பெண் பெறுவதற்கான குறிப்பு அல்ல. அது வாழ்க்கை முறை. அன்றாட பயிற்சி. நமக்கு நன்கு பரிச்சயமான நியூட்டனின் புவியீர்ப்பு விசையை எடுத்துக் கொள்வோம். ஆப்பிள் பழம் மேலிருந்து கீழே விழுந்த நிகழ்வு குறித்த நியூட்டனின் யோசனைதானே. அந்த யோசனையை அறிவியல் முறைப்படி சோதனை செய்து உலகுக்கு உணர்த்துவது. நியூட்டன் இன்றுவரை நினைவிலிருப்பதன் அதிசயத்தை கூறி ஆர்வப்படுத்துதல் வேண்டும். அதேபோல அறிவியலில் எதும் நிலையான கருத்தும் அல்ல. தொடர்ந்து மாற்றங்களுக்கு உட்பட்டது என்பதையும் அணு ஆய்வு மூலம் விபரிக்கலாம். ஒருகாலத்தில் அணு பிளக்கமுடியாதென நம்பப்பட்டது. பின்னர் அணு பிளக்கக் கூடியதென ஒப்புக் கொண்டதுதானே.

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின்

எனும் திருக்குறளில் திருவள்ளுவர் அடிப்படையான அறிவியல் உண்மையை உலகுக்கு உணர்த்தி உள்ளார். நிலத்தில் மட்டுமல்ல, கடலிலும் நீரின் தன்மை குறித்து பேசியுள்ளது புதியது.

இன்று புதிதாய் பிறந்தோமெனும் பாரதியின் கூற்றுக்கேற்ப அறிவியல் தன்னை தினம்தோறும் புதியதாக புதுப்பித்துக் கொள்கிறது. பாம்பு தன்தோலை உரித்து கொள்வதைப்போன்று அறிவியலும் தன்னை புதிது புதிதாக பிறப்பித்துக் கொள்கிறது.

எந்தவொரு மாற்றமும் சட்னென நிகழ்ந்துவிடாது, சிறார்கள் மீது உண்மையான அக்கறையோடு இருப்பவர்கள் தங்கள் படைப்புகளில் கொண்டு வரும் சிறு சிறு மாற்றங்கள் எதிர்காலத்தில் அறிவியல் மனப்பான்மை கூடிய பெரிய வாசக வட்டத்தை உருவாக்க உதவும். வலதுசாரி அரசியல் மேலோங்கிய இக்காலத்தின் அவசியமான செயல்பாடாகவும் இது இருக்கும். 

  • ந. பெரியசாமி

குறிப்பு: தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் “சிறார் இலக்கியக் கருத்தரங்கம் – 2025” எனும் தலைப்பில் கட்டுரைகள் பெறப்பட்டன. அவற்றுள் தேர்வான கட்டுரைகள், ஏப்ரல் 2025 நடைபெற்ற மாநிலச் சந்திப்பில் வாசிக்கப்பட்டது.

More Articles & Posts