Tamil Nadu Children Writers and Artists Association

சிறார் இலக்கிய எழுத்தாளர் ரேவதி மறைவு – கண்ணீர் அஞ்சலி.

Reading Time: < 1 minute

தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளர் ரேவதி. ஹரிஹரன் எனும் இயற்பெயர் கொண்ட இவர், குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பாவின் பரிந்துரையின்படி ரேவதி எனும் புனைப்பெயர் சூட்டிக்கொண்டவர். இவர், சிறாருக்காக 90க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய சாதனையாளர்.

நீதிக்கதைகள், புராணக் கதைகள் என்றிருந்த சிறார் இலக்கியத்தின் வழித்தடத்தை மாற்றி அமைத்த பெருமைக்கு உரியவர். வரலாற்றுச் சம்பவங்களையும், அவர் வாழ்ந்த காலத்தில் நேரில் கண்டவற்றை சிறார் இலக்கியத்தில் பதிவு செய்தவர். சமகால விஷயங்கள் குறித்து சிறுவர்களுடன் தம் படைப்புகள் வழியாக பெரும் உரையாடலை நடத்தியவர். 1930களில் குற்றால அருவியில் குளிக்க வந்த காந்தியடிகள், அங்கு தலித்துகள் குளிக்கக்கூடாது என்று இருந்த தடையைத் தெரிந்துகொள்கிறார். அதனால், அவர் குளிக்காமலேயே சென்றார் எனும் சம்பவத்தை அடிப்படையாக் கொண்டு ‘கொடிகாட்ட வந்தவன்’ எனும் நாவலை 1978ஆம் ஆண்டில் எழுதினார். அந்நாவல் 9 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

சிறுகதை, நாவல், அறிவியல் கட்டுரைகள் எனச் சிறார் இலக்கியத்தில் பல்வேறு தளங்களில் சிறப்பான பங்களிப்பு செலுத்தியவர். இவர் எழுதிய ‘பவளம் தந்த பரிசு’ எனும் சிறார் சிறுகதை நூலுக்கு 2013 ஆம் ஆண்டில் இந்திய அரசின் பாலசாகித்ய புரஸ்கார் விருது அளிக்கப்பட்டது. இதுபோல 30க்கும் மேற்பட்ட விருதுகளுக்குச் சொந்தக்காரர்.

சிறார் இலக்கிய முன்னோடிகளான அழ வள்ளியப்பா, வாண்டுமாமா, பாவண்ணன், தெய்வசிகாமணி உள்ளிட்டோர்களோடு இணைந்து செயல்பட்டவர். கோகுலம், பூந்தளிர் உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றியவர்.

இத்தகு பெருமைகளுக்கு உரிய எழுத்தாளர் ரேவதி, நேற்று இரவு (09/05/25) மரணம் அடைந்தார். அவரின் இழப்பு சிறார் இலக்கியத்திற்கு பேரிழப்பு. மகத்தான எழுத்தாளரான ரேவதி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறது தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம்.

More Articles & Posts