Tamil Nadu Children Writers and Artists Association

இலக்கிய வாசிப்பும் தமிழகப் பள்ளிச் சூழலும்– வாகைசூடி

Reading Time: 3 minutes

மின் நூல்கள், ஒலி வடிவங்கள் என தொழில்நுட்ப வளர்ச்சிக் கேற்ப வாசிப்புத்தளங்கள் பெருகியிருக்கின்றன. வருடந்தோறும் புத்தகக் கண்காட்சிகளில் புத்தகங்கள் வாங்குவோர் எண்ணிக்கையும் கூடுகிறது. புதிய எழுத்தாளர்கள், கதைசொல்லிகள் உருவாகியிருக்கிறர்கள். இவையெல்லாம் ஆரோக்கியமான மாற்றங்களே!

எனினும், வாசிப்புப் பண்பைக் கொண்ட இளைய தலைமுறையினரை உருவாக்குவதில், அல்லது அந்த இலக்கை அடைவதற்கு நாம் இன்னும் நெடுந்தூரம் நடைபோட வேண்டியிருக்கிறது.

இளந்தலைமுறையினரிடம் வாசிப்புப் பண்பை உருவாக்குவதற்கு அவர்களது சமூக-பொருளாதார-கல்விச் சூழல், சமூகத்தின் வாசிப்பு பற்றிய புரிதல் என ஒரு முழுமையான பகுத்தாய்வு மேற்கொள்வதன் மூலமே சிக்கல்களைக் கண்டறிய முடியும்.

கற்பனைத் திறனைக் கொல்லும் கார்ட்டூன்கள்

வாசிப்பின் தொடக்கம் கதைகேட்பதாகும். கதைகளே கற்பனையை உருவாக்குகின்றன. இந்தக் கற்பனை ஆர்வத்தையும், தேடலையும் உருவாக்கும். இந்தத் தேடல் புத்தகங்களை நாடும்.

இங்கு கதைகள் யார் சொல்வது? இன்று கதை சொல்லிகள் இல்லை. வீட்டிலிருந்த தாத்தா-பாட்டி என்ற கதைசொல்லிகள் கூட தொலைக்காட்சி தொடர்களில் வரும் கதைகளுக்கு கண்ணீர் விடுவதால், அவர்களது கற்பனை குறைகிறது. மற்றோர்புறம் குழந்தைகளுக்கான பொழுது போக்குகளாக  கார்ட்டூன்கள் குப்பைபோல் குவிந்திருக்கின்றன. விளையாடக் கூடச் செல்லாமல் தொலைக்காட்சிகளைப் பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். இதுவும் போதாதென்று சோறு ஊட்டவும், அழாமல் வைத்திருக்கவும் திறன்பேசி-புலனங்கள் இருக்கின்றன.

 இந்தக் கார்ட்டூன் காட்சிகளைப் பார்க்கின்ற குழந்தைகளுக்கு, கற்பனைத்திறன் குறைகிறது, எதையும் காணொளிகளாகவே காண விரும்புகின்றனர்.  இவை குழந்தைகளை புத்தகங்களிலிருந்து விலகச் செய்கின்றன. இந்த அபாயத்தை முறியடிப்பது முதன்மையானதாகும்.

மதிப்பெண்களை நோக்கித் துரத்தும் கல்விச் சந்தையும் வீண்வேலையான வாசிப்பும்:

இந்தக் குழந்தைகள்தான் பள்ளிக்கு வருகின்றனர். பள்ளிகளில் வாசிப்பு என்பது என்னவாக இருக்கிறது? பள்ளிகள் என்று பொதுவாக இருந்தாலும், இதில் பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்ற பிரிவுகள் பொதுவானவையாகும்.இதிலும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பள்ளிகள், மலைகிராமப்பள்ளிகள் இருக்கின்றன. இவை ஒன்றுக்கொன்று பொருளாதாரம்-விழிப்புணர்வு –வாய்ப்புகள் என்ற வகையில் பெரும் ஏற்றத்தாழ்வு கொண்டவையாக இருக்கின்றன. 

எந்தப் பள்ளிகளாக இருந்தாலும், பள்ளிகளில் பொதுவான சூழல்தான் நிலவுகிறது. வாசிப்புப் பற்றிய புரிதல்  பெரும்பான்மை ஆசிரியர்களுக்கு இல்லாமல் இருப்பது, கூடுதல் பணிச்சுமையாகக் கருதுவது போன்றவை பள்ளிகளில் நிலவும் பொதுவான சூழலாகும்.  அதாவது, ஆசிரியர்களே புத்தகங்கள் படிக்கின்ற ஆர்வமற்றவர்களாக இருக்கின்றனர். வருடத்திற்கு ஒரு புத்தகம் படிப்பதோ அல்லது பாடத்திட்டத்திற்கு கூடுதல் நூல்களைத் தேடுவதுகூட கிடையாது.

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அவர்களது பணியைத்தாண்டி மாணவர் விவரங்களைப் பதிவிடுதல், அரசு நிர்வாகத்தில் கொடுக்கும் கூடுதல் பணிகள், போதிய ஆசிரியர்கள் இல்லாமல் இருப்பதால் ஏற்படும் கூடுதல் பணிகள் போன்றவை ஆசிரியர்களை வாசிப்பை நோக்கியோ அல்லது  பாடத்திட்டன்களை ஆக்கப்பூர்வமாக, விருப்பப்பூர்வமாக நடத்துவதற்கானஅறிவுத் தேடல்களை  நோக்கி நகர்த்துவதில்லை.   

அடுத்ததாக பள்ளிகளில், வாசிப்பு வட்டங்களை சில தன்னார்வலர்கள் உதவியுடன்  சில தனியார் பள்ளிகளில் முன்னெடுக்கின்றனர். இந்த முன்னெடுப்புகள் தனிப்பட்ட சிலரின் விருப்பம் மற்றும்  தனித்துவத்திற்கானதாகவும், கல்விச் சந்தையில் தங்களை சந்தையை நிலைநிறுத்திக் கொள்வதற்கானதாகவும் இருக்கிறது. இருந்தாலும், அவற்றை வீண் என்று கருதுகின்ற மனபோக்கே பெரும்பான்மை ஆசிரியர்களிடம் இருக்கிறது. பாடவேளையைத்  தவிர்க்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபாடு காட்டுகின்றனர் என்ற எண்ணம் ஆசிரியர்களிடம் உள்ளது. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது கதைப் புத்தகம் படிப்பதால் என்ன பயன் என்ற கருத்து பெரும்பாலானோரிடம் மேலோங்கி இருக்கிறது. மேலும், இந்த வாய்ப்பு அனைத்து மாணவர்களுக்குமானதாக இருப்பதில்லை. பொதுத்தேர்வு இல்லாத வகுப்பு மாணவர்களுக்கு, அதிலும் குறிப்பாக  நன்கு படிக்கின்ற மாணவர்களுக்குத்தான் கிடைக்கிறது.

இவையெல்லாம் வெளிப்பாடுகள்தான். இதற்கான ஆணிவேராக இருப்பது இன்றைய கல்வி முறையாகும். நமது கல்வி முறையானது மாணவர்களை அவர்களது மதிப்பெண்களைக் கொண்டு மட்டுமே  மதிப்பிடுகிறது. எத்தனை மதிப்பெண்கள் பெறுகிறார்கள், பெற வேண்டும் என்ற சிந்தனைதான் பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் மேலோங்கி இருக்கிறது.

இதற்கு அடிப்படை இந்தியாவில் கல்வி என்பது வியாபாரமாகியிருப்பதும், அதற்கான கொள்கைகளுமேயாகும். குறிப்பாக தமிழகம் அதில் முன்னேறிய மிகப்பெரும் கல்வி வியாபாரச் சந்தை கொண்டது.. இந்த கல்விச் சந்தையில்  பள்ளிகள் தங்களுக்குள் போட்டியிடுகின்றன.  100 சதவீத தேர்ச்சியை நோக்கி பள்ளிகள் ஓடுகின்றன. அரசுப் பள்ளிகளும் இந்தப் போட்டியில் இயல்பாகவே தள்ளிவிடப்பட்டுள்ளன.

இந்த சந்தைப் போட்டியில் ஆசிரியர்கள், மாணாவர்களும் பந்தயக் குதிரைகள் போல் மதிப்பெண்களை நோக்கி ஓடுகின்றனர்.  விளையாட்டு, கலை, தனித்திறன்கள், வாசிப்பு என இன்னபிற அனைத்தும்  தடைகளாகவும், தேவையற்றதாகவும் கருதப்படுகின்றன.

தேவை சிறார் இலக்கியங்கள் குறித்த விழிப்புணார்வு

இதன் தொடர்விளைவாக, புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் விற்றாலும், அவை பெரும்பாலும் சிறார் இலக்கியங்களாக இருப்பதில்லை.  குழந்தைகளை மதிப்பெண் போட்டிகளுக்குத் தயார்ப்படுத்துவதற்குரிய புத்தகங்கள், பொருட்களே விற்பனையாகின்றன.  சிறார் இலக்கியங்கள் குறித்தான அறிமுகமோ, விழிப்புணர்வோ பெற்றோர்கள்-ஆசிரியர்களிடம் இருப்பதில்லை.  க்ஷ்

குழந்தைகள், புத்தகம் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக நீதிநெறிக் கதைகள், பெரியவர்கள் படிக்கின்ற நூல்களை அறிமுகப்படுத்துவது போன்ற தவறுகள் நடைபெறுகின்றன. இவை வாசிக்க விரும்புகிற  குழந்தைகளின் ஆர்வத்தை சிதைக்கின்றன. இவற்றிற்கெல்லாம்  அடிப்படையாக இருப்பது குழந்தைகள் “குழந்தைகள்” என்பதை நம்மில் பலர் மறப்பதாகும். சிறுவயதிலேயே அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பேராசையுமாகும். எனவே, அவர்களது வயதுக்கு மீறிய புத்தகங்களைக் கொடுத்துப் படிக்கச் சொல்கிறோம்.

கிராமப்புறங்களில்  இவற்றுடன்  நிதிச்சுமையும்  சேர்ந்து கொள்கிறது. புத்தகங்கள் வாங்குவதற்குகூட சிரமப்படும் நிலை இருக்கிறது. நூலகங்கள்-பள்ளிகள் தனித்தனியாகப் பிரிந்திருக்கின்றன. நூலகங்களுக்கு புத்தகம் வாசிக்க யாரும் வருவதில்லை என்பது பெரும்பாலான நூலகர்களின் புலம்பலாக இருக்கிறது. புத்தகங்களோ பழையதாக இருக்கிறது. குழந்தைகளுக்கான நூல்களும் குறைவாகவே இருக்கின்றன.

தீவிரமான செயல்பாடுகளே மாற்றத்தைக் கொண்டுவரும் !

எனவே இதை மாற்றியமைக்க வேண்டியது மிக முக்கியமானதும், அவசியமானதும், அவசரமானதும் கூட. எனினும், ஒரே நாளில்  மந்திரம் கொண்டு மாற்றிவிட முடியாது. மேலிருந்தும், கீழிருந்தும் மாற்றங்களுக்கானப் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.

 மாணவர்கள் நாளைய சமூகத்திற்கான தரமான நல்ல விதைகள், அவர்களைப் பண்படுத்தி வளர்த்தெடுப்பதே களமே  கல்வி நிலையங்கள், பராமரித்து வளர்த்தெடுக்கிற விவசாயிகளே ஆசிரியர்கள் என்ற புரிதலை நோக்கி ஒட்டுமொத்த சமூகத்தையும் நகர்த்த வேண்டியிருக்கிறது. இந்த மாற்றம் இங்கிருந்தே தொடங்கப்பட வேண்டும். நமது சமூகத்திலே இதற்கான கூறுகளும் இருக்கத்தான் செய்கின்றன. குழந்தமையை ஆராதிக்கிற ஆசிரியர்கள்-பெற்றோர்கள்-எழுத்தாளர்கள் இந்தப் பணியை தீவிரமாக முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. பள்ளிக்கு ஒரு வாசகர் வட்டம் அமைப்பது, குழந்தைகளுக்கான நூல்களை கல்வியாளர்கள், உளவியலாளர்கள், முற்போக்காளர்கள் கொண்டு தீர்மானிப்பது, இப்புத்தகங்களை நூலகங்களுக்கு வழங்குவது,  நூலங்கங்களை –பள்ளிகளுடன் இணைப்பது, வாசிப்பு வட்டங்களை ஊக்கமுடன் செயல்படுத்த ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைப்பது, ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவது போன்றவற்றை  முன்னெடுப்பதற்கான கோரிக்கைகள் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

  • வாகைசூடி

குறிப்பு: தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் “சிறார் இலக்கியக் கருத்தரங்கம் – 2025” எனும் தலைப்பில் கட்டுரைகள் பெறப்பட்டன. அவற்றுள் தேர்வான கட்டுரைகள், ஏப்ரல் 2025 நடைபெற்ற மாநிலச் சந்திப்பில் வாசிக்கப்பட்டது.

Author

  • admin

    தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் சங்கம் – சார்பாகப் பதிவு செய்யப்படும் பதிவுகள்.

    View all posts

More Articles & Posts