Tamil Nadu Children Writers and Artists Association

கலையில் விரியும் குழந்தை மனம் – வசந்தன் சிவம்

Reading Time: 4 minutes

புதுக்கோட்டை – தஞ்சாவூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அது. எங்களது ‘நடம்’ அமைப்பின் நாடகச் செயல்பாடுகள் அங்கிருந்துதான் தொடங்கும் என அப்போது தெரியவில்லை. நான் பயின்ற தொடக்கப்பள்ளியும் அதுதான் என்பதால் எங்கள் ஆசிரியர் விருப்பப்படி ஆண்டுவிழா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கலாம் என முடிவெடுத்தோம். நடனம், பாடல் என மற்ற அனைத்தையும் நண்பர் பார்த்துக்கொள்ள நாடகத்தை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றேன்.

சரி, நாடகத்தில் நடிப்பவர்களை எப்படித் தேர்வு செய்வது? 60 மாணவர்கள் சூழ்ந்திருக்கும்போது 15 பேரை மட்டும் எப்படிப் பிரிப்பது என்ற கேள்வி எழுந்தது. 1,2,3-ம் வகுப்பு குழந்தைகளுடன் ஒரு நாள், 4,5-ம் வகுப்புக் குழந்தைகளுடன் ஒரு நாள் என இரு நாட்கள் நாங்கள் விளையாடினோம். அதன் பயனை இன்று நான் அந்தப் பள்ளிக்குச் சென்றாலும் பார்க்க முடிகிறது. நாடக விளையாட்டுகள் குழந்தைகளின் மனதில் இருந்த இறுக்கங்களை தளர்த்தின. அந்த சுதந்திர வெளியை மிகவும் விரும்பினர். ஒருவழியாக நாடகத்திற்கான குழந்தைகளை தேர்வுசெய்து பணிகளைத் தொடங்கினோம்.

இக்கட்டுரையில் இதனை குறிப்பிடுவதற்கு முக்கியக் காரணமாக ஒருவர் இருக்கிறார். அப்போது நான்காம் வகுப்பில் இருந்த அந்தக் குழந்தை மதிஇறுக்கம் (Autism) உடையவர். குழந்தைகள் நாடகம் என்றாலே விளையாட்டுகள் நிரம்பியிருக்குமல்லவா. அதனால் அவராகவே முன்வந்து விளையாட்டுகளில் இணைந்துகொண்டார். தியேட்டர் கேம்ஸ் எனப்படும் நாடக விளையாட்டுகளில் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக காட்சிகளுக்குள் சென்றோம்.

சிறார் எழுத்தாளர் விழியன் அவர்களின் ‘தேன் முட்டாயி’ கதையைத்தான் நாடகமாக்கினோம். கடந்த 2022-ஆம் ஆண்டு தென்காசி மாவட்டம் பாஞ்சாங்குளம் கிராமத்தில் பெட்டிக்கடையில் குழந்தைகளுக்கு மிட்டாய் வழங்க மறுத்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட அந்தக் கதையை அதேபோன்ற கிராமச்சூழலில், நாடகமாக்கத் தயாரானோம். கொஞ்சம் விளையாட்டு, கொஞ்சம் கதை, கொஞ்சம் நடிப்பு என குழந்தைகள் தாங்களாகவே தங்களை மெருகேற்றிக்கொண்டனர்.

ஒட்டுமொத்த நாடகத்தின் போக்கையும் தீர்மானிக்கும் பாத்திரம் கோமாளிகளுடையது. அதற்கென இருவர் தயாராகினர். அதில் ஒரு குழந்தையின் அப்பா “என் பையன் கோமாளியாலாம் நடிக்க மாட்டான்” என்று கூறி அவரை அழைத்துச் சென்றுவிட்டார். தலைமையாசிரியர் உட்பட அனைவரும் முயற்சித்தும் அவரது மனம் மாறவில்லை.

பிறகு வேறொரு குழந்தை கோமாளியானார். மீண்டும் விளையாட்டு, கதை, காட்சி, நடிப்பு என நாட்கள் நகர்ந்தன. குழந்தைகள் ஒவ்வொருவரும் எல்லோருடைய வசனம், அசைவுகள், பொருட்கள் என அனைத்தையும் தெரிந்துவைத்திருந்தனர். யாராவது எங்காவது கொஞ்சம் யோசித்தால் அவர்களையும் அந்த இடத்தையும் சரி செய்ய தயாராகவே இருந்தனர். குழந்தைகளிடம் இயல்பாகவே இருக்கும் அன்பும் ஒற்றுமைப் பண்பும் அப்படியான சூழலில் நம்மை பிரமிக்க வைக்கும். அப்படித்தான் இருந்தது எனக்கும்.

அதுதான் இந்தக் கட்டுரை எழுதத் தூண்டுகோலும்கூட. மதியிறுக்கம் உடைய ஒரு குழந்தை நான்காம் வகுப்பில் படிக்கிறார், அவரைப் பார்த்துக்கொண்டதில் பெரும் பங்கு அங்கு படித்த அத்தனை குழந்தைகளுடையதும்தான். அவர்கள்தான் எனக்கு மேலும் நம்பிக்கையூட்டினர்.

அனைவரையும் உள்ளடக்கிக்கொள்ளும் பண்பு கலைக்கே உரிய ஒன்றல்லவா! அது இங்கே நிகழ்ந்தது. நாடகத்தில் அந்தக் குழந்தை அனைத்துக் காட்சிகளிலும் இருக்கும்படிதான் கட்டமைத்தோம். அதையும் குழந்தைகள்தான் நிகழ்த்திக் காட்டினர். எல்லா காட்சிகளிலும் இந்த குழந்தையின் கைகளை ஏதாவது ஒரு குழந்தை பிடித்திருப்பார். ஓடும்போதும் விளையாடும்போதும் அவர் தவறி விழுந்து விடாமல் இருக்க கூடுதல் கவனம் செலுத்தினர்.

தொடக்கத்தில் ‘நீதிமணி’ அவர்கள் எழுதிய ‘நடைவண்டி’ பாடலைப் பாடிக்கொண்டே அனைவரும் மேடைக்கு வரவேண்டும். ஒருவர் பின் ஒருவராக முன்னிருப்பவரின் தோளில் கைகளை வைத்துக்கொண்டு அணிவகுத்து மேடைக்கு வருவார்கள். இவர்கள் அனைவரையும் அழைத்து வரும் பணி நடைவண்டி ஓட்டிவரும் கோமாளியுடையது. அனைவரும் வரத்தொடங்கினர் ஆம், அதுவரை மேடையேறாத அந்தக் குழந்தையும்தான். அப்படியொரு மகிழ்ச்சி அவரது முகத்தில் அந்தச் சிரிப்பு நாடகம் முடியும்வரை அனைத்துக் காட்சிகளிலும் படர்ந்திருந்தது. சின்னச்சின்ன செயல்களைத்தான் அவருக்கானதாக வடிவமைத்தோம். அந்த நாடகம் முடியும்வரையிலான ஒவ்வொரு நொடியும் அவரிடம் பேருற்சாகம் நிறைந்திருந்தது. இறுதியில் பார்வையாளர்களுக்கு தேன் முட்டாயி கொடுத்துவிட்டு குழந்தைகள் அனைவரும் இணைந்து நடனமாடுவார்கள். அதுவரை தூரத்தில் இருந்து நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த அந்தக் குழந்தையின் அம்மா, நாடகம் முடிந்தபிறகு என்முன் வந்து நின்றார். சொல்வதற்கு அவரிடமோ என்னிடமோ வார்த்தைகள் இல்லை, அவரது பார்வை எனக்குள் ஆயிரம் விஷயங்களைக் கடத்தியது.

அந்தக் குழந்தையை ஊர்மக்கள் அனைவரும் கொண்டாடினார்கள். அவரைப் பார்த்து மகிழ்ந்தார்கள். அந்தக் குழந்தையின் புன்னகையின் தலாட்டில்தான் அன்று இரவு நான் உறங்கினேன்.

அடுத்த அனுபவத்தையும் இங்கு பகிர விரும்புகிறேன். திருவண்ணாமலையில் உள்ள மருதம் பண்ணைப்பள்ளியில் மாணவர்களுக்கு நாடகப் பயிற்சி வழங்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. எப்போதும்போல் இந்தப் பயிற்சியிலும் ஒரு நாடகத்தை உருவாக்கி அரங்கேற்றுவதென முடிவெடுத்தோம். அதற்காக நாங்கள் தேர்வு செய்த புத்தகம்தான் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் எழுதிய ‘கயிறு’.

பள்ளி மாணவர்களிடம் ஜாதிய சிந்தனைகளை வளர்த்தெடுப்பதில் இந்தக் ‘கயிறு’ முக்கியப் பங்கு வகிக்கிறது. ஸ்டைல், மாடல், கெத்து என்று எந்தக் காரணம் சொல்லி கயிறு கட்டிக்கொண்டாலும் சுலபமாக ஜாதியவாதிகளிடம் இணக்கமாகிவிடும் சூழல்தான் இங்கு உள்ளது. அதனை மாற்றும் நோக்கில் எழுதப்பட்டு அனைவராலும் பாராட்டுகளைப் பெற்றுவரும் நூல்தான் கயிறு.

அந்தக் கதையை நாடகமாக்கும் முயற்சியில் பங்கெடுத்த குழந்தைகளில் ஒரு சிறப்புக் குழந்தையும் இருந்தார். கயிறு கதை தொடங்கும்போதே ‘செழியன்’ வீட்டிற்குள் நுழைவது போன்ற காட்சி இருக்கும். நாடகத்தில் அப்படித் தொடங்காமல், அந்தக் குழந்தைகள் வாழும் சூழலிலிருந்து ஒரு காட்சியை தயாரிக்கலாம் என்று முடிவெடுத்தோம். அந்த பள்ளி வளாகமே அவர்கள் உருவாக்கிய காடுதான். விதவிதமான மரங்கள், செடிகள், பூச்சிகள், பறவைகள் என பசுமைநிறைந்த பகுதி. அதனால், ஒவ்வொருவரும் மரம், செடி, கொடி, விலங்குகள், பறவைகள் என அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப உருமாறி மேடைக்குள் வரவேண்டும். வந்தபிறகு அனைவரும் இணைந்து ஒரு பெரிய ஆலமரத்தை உருவாக்கி பின்பு அப்படியே மேடையின் பின்புறம் சென்றுவிடுவார்கள். அதன்பிறகு கதைக்குள் நகர்வோம் என்று முடிவு செய்தோம்.

இந்த நாடக உருவாக்கத்தின்போதும் விளையாட்டுகள், கதைகள், குட்டித்தூக்கம், கற்பனைகள் என தொடர்ந்தோம். யாருக்கு என்ன கதாபாத்திரம், கோமாளி யார், என்பதையெல்லாம் குழந்தைகளே முடிவுசெய்துவிட்டனர். இதிலும் இரு கோமாளிகள் இருக்கவேண்டும் என்று முடிவெடுத்தோம். ஆனால், கோமாளியாக நடிக்கவேண்டிய ஒரு குழந்தை நாடக அரங்கேற்றத்தின்போது பங்கேற்க முடியாமல் போனதால் ஒரு பெண் குழந்தையே கோமாளியாக கலக்கினார்.

கயிறு கதையில் வரும் ‘அம்பேத்’ கதாபாத்திரத்தை அந்த சிறப்புக் குழந்தைக்கு அனைவரும் வழங்கினர். அவர் குஷியாகிவிட்டார். நாடகத்தின் இடையே அனைவரும் விளையாடுவார்கள் ‘அம்பேத்’ படித்துக்கொண்டிருப்பார். ’அம்பேத்’தான் அனைவருக்கும் பாடல்களை சொல்லிக்கொடுப்பார். அவர் சொல்வதைக்கேட்டு மற்ற அனைவரும் திருப்பிச் சொல்வார்கள். அவர் சொல்லும்போது ஏதேனும் தவறிவிட்டால்? எந்த தடங்கலும் இல்லை, எந்த சிரிப்பும் இல்லை, மற்றவர்கள் அதனை சரியாகச் சொல்வார்கள். இந்த பிணைப்பு பார்வையாளர்கள் அனைவரையுமே பிரமிக்க வைத்தது. நாடகத்தின் இறுதியில் குழந்தைகள் அனைவரும் தங்கள் கைகளில் இருந்து கயிற்றை அறுத்து எறிவார்கள். நாடகம் பார்த்த குழந்தைகள் எல்லாவற்றையும் கொண்டாடினார்கள். பெரியவர்களுக்கோ நடித்த குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளம் இருந்தது. இன்னும் இருந்துகொண்டேதான் இருக்கிறது.

மேலே நான் குறிப்பிட்ட இரண்டு நிகழ்வுகளுமே என் அனுபவத்திலிருந்து நான் நேரடியாகப் பார்த்தவை. இவை மட்டும்தானா என்றால் இல்லைதான், ஆனால், இந்தக்கட்டுரையில் இந்த இரு குழந்தைகளைப் பற்றியும் குறிப்பிடவேண்டியது அவசியம் என்றே கருதுகிறேன். இந்தக் குழந்தைகளை என்னுடன் இணைத்திருப்பது கலைதான். அதிலும் நாடகம் கலைவெளியில் தரும் சுதந்திரம் மிகமுக்கியமானது என்றே கருதுகிறேன்.

மேலே குறிப்பிட்ட இரு குழந்தைகளையும் அவர்களுக்கு விருப்பமில்லாத செயல்களில் ஈடுபடுத்துவது வன்முறைதானே! அந்த இடத்தை சரிசெய்யத்தான் நாடகம் நமக்கு உதவுகிறது. எல்லோரும் சீராக ஓடிக்கொண்டிருக்கும் காட்சியில் ஒரு குழந்தை மட்டும் அமைதியாக உட்கார்ந்து சிரிப்பதை நினைத்துப்பாருங்கள்! வசனங்கள் பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் ஒரு குழந்தை கீழே படுத்து ஓவியம் வரைவதை கற்பனை செய்து பாருங்கள்! கையில் துப்பாக்கிகளுடன் சுற்றி நிற்பவர்களுக்கு மத்தியில் ஒரு குழந்தை பேப்பரை சுருட்டிக்கொண்டிருப்பதை எண்ணிப்பாருங்கள்! இவையெல்லாம் ஒருவரால் யோசித்து எழுதப்பட்டு காட்சியாக உருவாக்கப்படும்போது தரும் ஆழமான அர்த்தத்தைவிடவும், மதியிறுக்கும் உடைய ஒரு குழந்தையோ அல்லது வேறொரு சிறப்புக் குழந்தையோ தானாக செய்யும்போது ஏற்படுத்தும் தாக்கம் பெரிது! அதைத்தான் சாத்தியப்படுத்துகிறது கலை!

அந்தக்கலையை ஒருமுறை குழந்தைகளிடம் அறிமுகப்படுத்திவிட்டால் போதும், அதன்பிறகு அவர்களாகவே அதனை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்திச் சென்றுவிடுவார்கள்.

மயிலாடுதுறை ‘குட்லக்’ பள்ளி மாணவர்களுக்கு நடிகரும் நாடகவியலாளரும் எனது இணையருமான அன்பரசி அவர்கள் நாடகப் பயிற்சி வழங்கினார். அப்போதும் ‘தேன் முட்டாயி’ கதையையே நாடகமாக்கினார். அந்தப் பள்ளி மாணவர்களின் ஈடுபாட்டுடன் உருவான அந்த நாடகம் முதலில் குறிப்பிட்டதைவிடவும் வேறுபட்டிருந்தது. அந்த நிலப்பகுதிக்கான விளையாட்டுகள் அதில் தானாக ஒட்டிக்கொண்டன. அதில் ‘கொல கொலயா முந்திரிக்கா’ விளையாட்டை வழிநடத்திய குழந்தை மற்ற நேரங்களில் அவ்வளவு அமைதியாக இருப்பவர். அந்தக் குழந்தையைத் தவிர மற்ற யாருக்கும் அந்த விளையாட்டு முழுவதுமாகத் தெரியவில்லை. நாடகம் நிகழ்த்தப்பட்ட பிறகுதான் இந்த தகவல்களெல்லாம் தெரியவருகிறது. ஒரு குழந்தையின் வாழ்க்கையில்  ஏதாவதொரு கலை வடிவம் நுழையும்போது அது அவருக்குள் இருக்கும் வேறொரு பரிமானத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பைத் தருகிறது என்பதை நம்மால் மறுக்க முடியாது.

கலையினூடாக இந்தச் சமூகத்தைப் புரிந்துகொள்ளத் தொடங்கி இப்போது அந்தக் கலைவழியாகவே இந்தச் சமூகத்துடன் உரையாடும் வாய்ப்பைப் பெற்றவனாக இருக்கும் என்னைப்போன்ற பலருக்கும் பெரும் நம்பிக்கையளிப்பது குழந்தைகள்தான்.

அனைத்தையும் பகுத்தாய்ந்து ஏற்றுக்கொள்வது குழந்தைகளின் இயல்பு. அதனை பாழாக்காமல், அவர்களை அவர்களாகவே கொண்டாடும் கலைச் செயல்பாடுகளை நம்மால் இயன்றவரை முன்னெடுப்போம். அதனை அனைவரும் இணைந்தே முன்னெடுக்கவேண்டியது மிகவும் அவசியம் என்பதுடன் நிறைவு செய்கிறேன். தொடர்ந்து பயணிப்போம், நன்றி!

  • வசந்தன் சிவம்

குறிப்பு: தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் “சிறார் இலக்கியக் கருத்தரங்கம் – 2025” எனும் தலைப்பில் கட்டுரைகள் பெறப்பட்டன. அவற்றுள் தேர்வான கட்டுரைகள், ஏப்ரல் 2025 நடைபெற்ற மாநிலச் சந்திப்பில் வாசிக்கப்பட்டது.

More Articles & Posts