நாடகக் கலை மாற்றுக் கல்வியின் நுழைவாயில். நாடகத்தை நாடு + அகம்= நாடகம் என்று சேர்த்து பிரித்து பார்த்து நாட்டு மக்களின் மன ஓட்டங்களை பிரதிபலிக்கும் கலை வடிவமே நாடகம் என பொருள் கொள்கின்றனர் அறிஞர் பெருமக்கள். நான் இதை சற்று வேறு விதமாக சிந்திக்கிறேன் “நாடு” என்னும் சொல் நாட்டத்தை, தேடும் வேட்கையை, தன் உள விருப்பத்தை, தன் அகத்தின் வழி உற்று நோக்கி அதிலிருந்து பெரும் அறிவை பகுத்தாய்ந்து பார்க்க உதவும் ஓர் உன்னதக் கருவி நாடகம் என்று புரிந்து கொள்கிறேன். இதுதான் அடிப்படைக் கல்வி. ஒவ்வொரு வகுப்பறையும் குழந்தைகளுக்கு கற்றுத் தரும் ஆரம்பக் கல்வியும் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.
குழந்தைகளின் ஆரம்பகால கல்வியில் கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதில் நாடகம் ஒரு சக்திவாய்ந்த கருவியாக செயல்படுகிறது என்பது உலக நாடுகள் ஏற்றுக் கொண்ட ஓர் உண்மை. வகுப்பறைக்குள் சிறார் நாடகத்தை இணைப்பதன் மூலம், குழந்தைகள் தங்கள் படைப்பாற்றல் (creativity), பச்சாதாபம்(Empathy) மற்றும் கலாச்சார விழிப்புணர்வை (Cultural awareness) வளர்த்துக் கொள்வார்கள், அதே நேரத்தில் கலைகள் மீதான ஆழமான பரந்துபட்ட பார்வையையும் பயிற்சியும் சிறார்களிடத்தில் வளர்ப்பதற்கு நாடகம் ஓர் சக்தி வாய்ந்த ஊடகம் ஆகும்.
உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தன்னிகரில்லா கன்னித் தமிழ் மொழி என்று நாம் தமிழை எண்ணும் போதும், எழுதும் போதும், உணர்வு ததும்ப பொருள் பொதிந்து பேசும்போதும் உயர் தனிச் செம்மொழியாகவும், நாட்டார் மொழியாகவும் பல மொழி கலப்பினும் இன்றைக்கும் இளமொழி என்றைக்கும் முதுமொழி நம் தமிழ் என்றும் தனிமொழி. தமிழ் மொழி மட்டும் இன்றைக்கும் இத்தனை சிறப்பு மிக்கதாக இருப்பதற்கு காரணம் நவீன தொழில் நுட்பங்களை அப்படியே ஏற்றுக் கொண்டு தானும் செழுமையாக தனித்து நிலைத்து நிற்பதுதான் தமிழ் மொழியின் தனிச்சிறப்பு. அதேபோல் மூன்றாம் தமிழாம் நாடகமும் இன்றளவும் எத்தனை நவீன ஊடகங்கள் மக்களிடையே விதவிதமாய் புழக்கத்தில் வந்த போதிலும் அத்தனையும் தன்னகத்தே எந்த தொய்வின்றி அப்படியே ஏற்றுக் கொள்கிற ஓர் அற்புத கலை வடிவம் நாடகம் மட்டும் தான். அது மட்டுமல்ல உலகில் உள்ள அத்துணை கலைகளையும் நாடகத்தில் பயன்படுத்தினாலும் தமிழ் போல தனித்தியங்கும் ஆற்றலுடையது நாடகம். அப்படிப்பட்ட நாடகக் கலையை தொடக்க கல்வி முதலே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.
வகுப்பறைக்குள் நாடக செயற்பாடு திறம்பட நடந்தேறினால் குழந்தைகள் பெறும் நன்மைகளில் மிக முக்கியமானது படைப்பாற்றல் திறன் வளர்தல்.இவற்றோடு குழந்தைகளின் தனித் திறன் வெளிப்பாட்டையும் ஊக்குவிக்கும் தலைமைப் பண்பை வளர்க்கும். தீவிர நாடகச் செயற்பாட்டில் தங்களை இணைத்துக் கொள்ளும் குழந்தைகள் தங்களின் வளமான கற்பனை திறன் மற்றும் படைப்பாற்றல் திறனை வளர்த்துக் கொள்கிறார்கள் , இயலில் இடம்பெற்றுள்ள கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை மீட்டுருவாக்க கற்றுக் கொள்கிறார்கள். இந்தப் படைப்பாக்கத்திறன் வெளிப்பாடானது இலக்கியம் இசை மற்றும் நாடகம் போன்ற கற்றலின் பிற பகுதிகளுக்கும் பரிணாம வளர்ச்சி அடைய உதவுகிறது.
இந்தச் செயற்பாடானது மிக எளிமையான அரங்க விளையாட்டு களின் ஊடாக இயல்பாக குழந்தைகளுக்கு கற்பிக்கப்படுகிறது. அந்த வகையில் குழந்தைகள் தங்கள் வயதிற்கு ஏற்ப,அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப பார்த்தும்,கேட்டும், படித்தும் பகுத்தறிந்தும் செயல்பாட்டு வடிவில் தனியாகவும் குழுவுடனும் இணைந்தும் கற்கும் சூழலைப் பெறுகின்றனர். இதுவே இச்சமுகத்தின் மாற்றுக் கல்வி.இக்கல்வியினால் குழந்தைகள் வெவ்வேறு கோணங்களில் பிரச்சினைகளை அணுகுவதற்கும், அவற்றிற்கான தீர்வை அவர்களே தீர்க்கமாக எடுப்பதற்கும். அதன் வழி பெறும் அனுபவத்தை தன் வாழ்நாள் முழுவதும் பொருத்திப் பார்க்க வழிவகை செய்கிறது நாடகம். குழந்தைகள் பறந்துபட்டு சிந்திக்கவும் வாசிக்கவும் இப்படியான நாடகப் பயிற்சி தொடக்க கல்வி முதலே அவசியமாகிறது.
அரங்க விளையாட்டுகளின் வழியாக கற்றலில் பெரும் மாற்றத்தை அதன் சுவாரசியத்தை குழந்தைகள் மிக விரைவாக புரிந்து கொள்கிறார்கள் அல்லது புரிந்துகொள்ள முற்படுகிறார்கள் அல்லது ஆசிரியர்களும் மாணவர்களும் ஒற்றைப் புள்ளியில் சிந்திக்கவும் அப்புள்ளியில் ஒருவரை ஒருவர் சந்திக்கவும் முயற்சிக்கிறார்கள்.
நாடகம் பல்வேறு அரங்க விளையாட்டு கூறுகள் உள்ளடங்கிய ஓர் தொகுப்பு என்று கூறலாம். நாடகத்தின் அடிப்படை பயிற்சியில் குழந்தைகளுக்கு உடல் மன இறுக்கத்தை போக்குவதற்காக உடல் தளர்த்துதல் பயிற்சி வழங்கப்படுகிறது (Ice Breaking Excercise). அவை படிப்படியாக மாணவர்களின் உடற் கூச்சம் மனக் கூச்சம் போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது.
இப்பயிற்சி நீண்டு வளர்ந்து சிறார்களுக்கு ஏற்ற வகையில் சிறு சிறு வார்த்தை விளையாட்டுகள், புதிர் விளையாட்டு, ஓவியம், கதைசொல்லல் இன்னும் பல உளக்களிப்போடு தொடர்புபெறும் கற்றல் படிநிலையை தனியாகவும் கூட்டாகவும் கற்பதற்கு சிறார் அரங்கம் எப்போதும் புதிய உலகை திறந்தே வைத்திருக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் இயக்கிய சிறார் நாடகங்களில் மிக முக்கியமானவை தண்ணீர் தண்ணீர், யானை ராஜா,அக்கப்போர், மந்திர விளக்கு மற்றும் இன்னும் பல. சிறார் நாடகம் கல்வி வளாகம் மற்றும் பொது சமூகத்தில் எவ்வித மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை என் அனுபவம் கொண்டு ஆய்வு செய்ததில் ஒன்றை மிக நுணுக்கமாக அறிய முடிந்தது. உதாரணமாக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் “யானைக்கு என்ன ஆச்சு” சிறுகதையை தழுவி உருவாக்கப்பட்ட “யானை ராஜா” சிறார் நாடகம் பெரியவர்கள் குழந்தைகளுக்காக நடித்துக் காட்டிய ஓர் நாடகம். நாடகத்தில் இசை நடனம் பாட்டு மற்றும் கதை பின்னல் ஆகியவை பார்வையாளர்களாகிய குழந்தைகளை நாடகத்தோடு பங்களிப்பு செய்யுமாறு வடிவமைக்கப்பட்டது. நாடகம் கிட்டத்தட்ட ஆயிரம் குழந்தைகளை சென்றடைந்து இருக்கிறது. நாடகம் பார்க்கும் ஒவ்வொரு முறையும் குழந்தைகள் காடு பற்றிய தகவல்களை, வனவிலங்குகள் பற்றிய அறிவையும் யானை காட்டு விலங்கு தான், வீட்டு விலங்கு அல்ல அதை பொதுவெளியில் மக்களோடு மக்களாக நாம் கொண்டு செல்லக்கூடாது என்றும் நமக்கு வீடு இருப்பதை போல யானைக்கும் வீடு இருக்கிறது.அது காடு தான் என்பதை ஒவ்வொரு முறையும் குழந்தைகள் நாடக நிறைவில் பின்னூட்டத்தில் அழுத்தமாக தெரிவிக்கும் போது இந்த நாடகம் பாட புத்தகங்கள் எளிதில் செய்திடாத மிக நுண்ணிய அறிவு பெருவெளியை எளிய வழியில் குழந்தைகளிடத்தில் கடத்துவதாக அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். அதுமட்டுமல்லாது மந்திர விளக்கு என்னும் நாடகம் முழுக்க முழுக்க குழந்தைகள் குழந்தைகளுக்காக நடித்துக் காண்பிக்கப்பட்ட ஓர் நாடகம் இதில் நாம் அனைவரும் சமம் என்கின்ற ஒற்றை கருத்தை மிக எளிமையாக குழந்தைகள் இசையோடும் பாட்டோடும் நகைச்சுவை உணர்வோடும் இச்சமூகத்தின் முன்பு நடித்துக் காட்டும்போது பெரியவர்களுக்கும் இப்பாடத்தை இச்சிறுவர்கள் மிகப் பொறுப்போடு கடத்துகிறார்கள் என்பதை இந்த சிறார் நாடகத்தின் வாயிலாக அறிய முடிகிறது.
ஆகையால் கற்றலில் நாடகக் கலையை இணைப்பதன் மூலம், கல்வியாளர்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் வெற்றிபெறத் தயாராகும் ஒரு நல்ல கல்வியை வழங்க முடியும்.கல்வி வளாகங்களில், இலக்கிய சந்திப்புகளில், புத்தகத் திருவிழாக்களில், இன்னும் பல அரசு மற்றும் அரசு சாரா நிகழ்வுகளில் சிறுவர் அரங்கம் வளம் பெற நடைபெற வேண்டும். அப்போது நம் குழந்தைகள் அறிவு பூர்வமான, ஆக்கபூர்வமான செயலை கலை மூலம் கண்டெடுப்பார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
- சிவபஞ்சவன்
குறிப்பு: தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் “சிறார் இலக்கியக் கருத்தரங்கம் – 2025” எனும் தலைப்பில் கட்டுரைகள் பெறப்பட்டன. அவற்றுள் தேர்வான கட்டுரைகள், ஏப்ரல் 2025 நடைபெற்ற மாநிலச் சந்திப்பில் வாசிக்கப்பட்டது.

