Tamil Nadu Children Writers and Artists Association

சிறார் இலக்கியக் கருத்தரங்கம் – 2025

Reading Time: 3 minutes

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் ஏப்ரல் 2025இல் மாநில அளவிலான சிறார் இலக்கியக் கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது. கருத்தரங்கிற்குக் கீழ்க்கண்ட தலைப்புகளில் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

தலைப்புகள்:

  1. சிறார் இலக்கியத்தில்‌ தமிழ்நாடு அரசின் பங்களிப்பு
  2. சிறார்களுக்கான கலைகளின்  அவசியம் – வளர்ச்சி மற்றும் மாற்றங்கள்
  3. பள்ளிக்குள் சிறார் இலக்கியம் செல்வதில் உள்ள சவால்கள்
  4. உலகச் சிறார் இலக்கியம்
  5. சிறார் இலக்கியத்தில் விமர்சன இலக்கியம்
  6. அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுத்தல்
  7. சிறார் இலக்கியம் சூழலியல் பிரச்சனைகளைச் சரிவரப் பேசுகிறதா?
  8. பெண் எழுத்தாளர்களின் படைப்புகள்
  9. குழந்தைகளின் எழுத்துலகம் : ஒரு சுதந்திர வெளி
  10. சிறார் கலை-இலக்கியம் சார்ந்து விருப்பமான தலைப்பில்

விதிமுறைகள்:

  • கட்டுரைகள் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: ஏபரல் 07, 2025
  • ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் கட்டுரைகளை அனுப்பலாம்
  • கட்டுரை 1000 முதல் 1500 சொற்கள் வரை இருக்க வேண்டும்
  • யுனிகோட் (Unicode) முறையில் தட்டச்சு செய்யப்பட்டு, மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும்.
  • கட்டுரைகள் சொந்த ஆக்கங்களாகவும், முன்னர் வேறு எங்கும் வெளிவராதவையாகவும் இருத்தல் வேண்டும்
  • contact.tncwaa@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
  • தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் – கருத்தரங்கில் வாசிக்கப்படும் – பின்னர் சங்கத்தின் இணையதளத்திலும் வெளியிடப்படும்.

கட்டுரை எதிர்பார்ப்புகள்:

  • சிறார் இலக்கியத்தில்‌ தமிழ்நாடு அரசின் பங்களிப்பு:  கடந்த காலங்களில் நடந்தவை: சிறார் இலக்கிய‌ மாநாடு, பிரத்தியேகப் புத்தகக் கண்காட்சி, சமகாலத்தில் நடப்பவை: பாடநூல் கழகம், நூலகங்கள், அரசு நடத்தும் இதழ்கள், வாசிப்பு இயக்கம், வெளி மாநிலங்களில், வெளி நாடுகளில் அரசு எடுக்கும் முயற்சிகள் ஓர் ஒப்பீட்டுப் பார்வை, எதிர்காலத்தில் மேம்படுத்தல், அதற்கான வழிமுறைகள், யோசனைகள் – சிறார் இலக்கியத்திற்கான தனி ஆய்வு நூலகம், சிறார் இலக்கியங்களை அரசுடைமை ஆக்குதல். பல்கலைக்கழகங்களில் சிறார் இலக்கியத்திற்கு முக்கியமான இடத்தினை வழங்குதல்.
  • சிறார்களுக்கான கலைகளின்  அவசியம் – வளர்ச்சி மற்றும் மாற்றங்கள்:  சிறார்களுக்கான கலைகள் குறித்து முறையாக ஆவணப்படுத்துதல், பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுத்தல், கலைகளை மாணவர்களுக்கு எடுத்துச் செல்லும் செயற்பாட்டாளர்களை உருவாக்குதல். தமிழ் நிலம் கடந்து வேறு நிலங்களிருந்து ஏற்றுக்கொண்ட கலைகள், அது நம் சிறார் உலகில் ஏற்படுத்திய மாற்றங்கள். அதன் மூலம் உலக வரலாற்றை எடுத்துக்கூறுதல். கலைகளின் வரலாறு, அதன் அவசியங்கள், அதன் வளர்ச்சி, எதிர்காலம் குறித்தும் கட்டுரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
  • பள்ளிக்குள் சிறார் இலக்கியம் செல்வதில் உள்ள சவால்கள்: வாசிப்புள்ள சமூகம் – எதிர்காலத்தின் அவசியம். வாசிப்பின் மீது மாணவர்களுக்கு, மாணவர்களைச் சுற்றியுள்ள ஆசிரியர்கள் & பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது காலத்தின் தேவை. ஆனால், தேர்வு மதிப்பெண் எனும் ஓட்டத்தில் பள்ளிக்குள் வாசிப்பு என்பது எந்த நிலையில் உள்ளது? அங்கு வாசிப்பதற்கான சூழல் நிலவுகிறதா?  வாசிப்பை வளர்த்தெடுப்பதில் பெற்றோர், ஆசிரியர், சமூகத்தின் பங்கு என்ன? அதற்கான வழிமுறைகள் என்ன?
  • உலகச் சிறார் இலக்கியம்: தமிழ்ச் சிறார் இலக்கியம் உலக இலக்கியங்களுக்கு மிக முக்கியமான இடத்தினை வழங்கியுள்ளது. ஆங்கிலம், ரஷ்ய மொழிக் கதைகள், சீனக் கதைகள், இந்தியாவிலுள்ள மற்ற மொழிப் படைப்புகள், ஐரோப்பிய மொழிக் கதைகள் எனத் தமிழில் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் அதிகளவில் வெளியாகியுள்ளன. அவை முன்னுதாரணப் படைப்புகளாகவும் விளங்குகின்றன. அதேபோல், வெளிநாடுகளில் சிறார் இலக்கியப் போக்குகள் குறித்தும், தமிழ்க் குழந்தைகள் வெளிநாடுகளில் இயல்பில் வாசிப்பை ஏற்றுக்கொண்டுள்ள சூழல் குறித்தும் நாம் கவனிப்பது அவசியம். சிறார் இலக்கியத்தில் குழந்தைகளின் வயதிற்கேற்ற வகையில் படைப்புகள் ஆங்கிலத்தில் இடம்பெறுகின்றன. அதில் சொற்களின் தேர்வு முறைகளுக்கெனப் பரிந்துரைகளும் உள்ளன. உலகச் சிறார் இலக்கியத்தில் வளர்ச்சியைப் போலவே சில தடைகளும் உள்ளன. அமெரிக்காவில் சிறார் நூல்கள் பெரும் அளவில் தடைசெய்யப்படும் செய்திகளையும் நாம் கவனிக்க வேண்டும். இவ்வாறாக உலகச் சிறார் இலக்கியப் போக்குகள் குறித்துக் கட்டுரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
  • சிறார் இலக்கியத்தில் விமர்சன இலக்கியம்: தற்காலச் சிறார் இலக்கிய எழுத்தாளர்களிடம் தென்படும் அடிப்படைச் சிக்கல்கள், AI வரவுக்குப் பின்னர் உலகளவில் எழுந்துள்ள தானியங்கிப் படைப்புகள், அதன் வழியே இலக்கியமற்ற எழுத்துகள், சிந்தனைத்தளமற்ற இலக்கியம் என நடக்கும் பாதிப்புகள், சிறார் இலக்கியத்தை விமர்சன ரீதியாக அணுகுதல், விமர்சன இலக்கியத்தை ஆக்கப்பூர்வமான தளத்திற்கு எடுத்துச் செல்லுதல். தாய்மொழிப் பயன்பாடு, தவிர்க்க வேண்டிய சொற்கள், காட்சி அமைப்புகள் என பல்வேறு விமர்சனங்கள் குறித்தும் கட்டுரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
  • அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுத்தல்: ‘ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மையோடு இருப்பது அடிப்படைக் கடமை’ என வலியுறுத்துகிறது இந்திய அரசமைப்புச் சட்டம். ஆனால் சமகாலம் என்பது மூடநம்பிக்கைகள் & போலி அறிவியலில் சிக்கித் தவிக்கிறது. இந்தச் சூழலில் அறிவியல் மனப்பான்மையை மாணவர்கள் மத்தியில் வளர்ப்பதில் சிறார் இலக்கியத்திற்கு மிக முக்கியப் பங்குள்ளது. தமிழில் நேரடியாக அறிவியலாளர்கள் தங்களது பங்களிப்பைச் செலுத்தி வரும் ஆக்கப்பூர்வமான போக்கு நம்பிக்கை தருகிறது.
  • சிறார் இலக்கியம் சூழலியல் பிரச்சனைகளைச் சரிவரப் பேசுகிறதா?: சூழலியல் பிரச்சனைகளை அறிவியல் ரீதியாகப் புரிந்துகொள்ளுதல் மிகவும் அவசியமானது. பிரச்சனைகளைத் தெளிவாக அறிந்த பின்னரே அதற்கான தீர்வைச் சொல்ல முடியும். சூழலியல் என்றதுமே மரம் வளர்த்தல் என்ற ஒற்றைத் தீர்வை வழங்கும் கதைகளே அதிகம் எழுதப்படுகின்றன. பள்ளிகளில்கூட மாணவர்களுக்கான ஓவியப் போட்டிகள் என்றாலே எரியும் பூமிப் பந்து, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை, “Save Nature” என ஒன்றுபோலவே ஓவியங்கள் வரையப்படுவதை 25 ஆண்டுகளுக்கு மேலாக நாம் காண்கிறோம். ஆனால், சூழலியல் சார்ந்த அடிப்படை புரிதல்கள் கூடக் கலை-இலக்கியங்களில் இடம்பெறவில்லை என்பதையே இவை உணர்த்துகின்றன. ஆனால், உலகச் சிறார் இலக்கியத் தளத்தில், “Eco-Ciriticism” என்ற வகைமையில் சூழலியல் எழுத்துகளைக் குறிப்பிடுகின்றனர். சூழலியல் என்ற தனித்தலைப்பிலே சிறார் இலக்கிய மாநாடுகள் நடைபெறுகின்றன.
  • பெண் எழுத்தாளர்களின் படைப்புகள்: ஒரு குழந்தையின் வளர்ப்பில் ஒரு பெண்ணின் பங்களிப்பு என்பது அதீதமானது.  ஆனால், சிறார் இலக்கிய வரலாற்றில் – ஆண்களின் பங்களிப்பே அதிகமாக இருந்துள்ளது. சமகாலத்தில் இந்நிலை மாறி வருகிறது என்பது மிகவும் ஆக்கப்பூர்வமான விசயம். சிறார் இலக்கியத்தில் பெண் எழுத்தாளர்களின் பங்களிப்பை ஆவணப்படுத்தும் வகையில் கட்டுரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
  • குழந்தைகளின் எழுதுலகம் – ஒரு சுதந்திர வெளி:கொரோனாவிற்குப் பிறகு – குழந்தைகள் எழுதும் சிறார் இலக்கியம் பெரிதாக வளர்ந்துள்ளது. சிறுகதைகள், நாவல், பாடல்கள், கட்டுரைகள் எனப் பல்வேறு பிரிவுகளில் குழந்தைகளின் படைப்புகள் வெளியாகியுள்ளன. அதே நேரம் பெற்றோர்-ஆசிரியர்கள் எனப் பெரியவர்களின் தலையீடுகளையும் இந்தப் படைப்புகளில் காண முடிகின்றன. புகழ் தேடும் வழியாகவும் புத்தகங்களைப் பயன்படுத்தும் போக்கும் நிலவுகிறது. குழந்தைகளின் படைப்புலகை ஒரு சுதந்திர வெளியாக வளர்த்தெடுத்தல் குறித்த பார்வையில் கட்டுரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

சிறார் இலக்கியம் பற்றி அறிந்துகொள்ள சிலப் பரிந்துரைகள்

நன்றி,

உதயசங்கர்(தலைவர்) & சாலை செல்வம் (செயலாளர்)

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் & கலைஞர்கள் சங்கம்

Author

  • admin

    தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் சங்கம் – சார்பாகப் பதிவு செய்யப்படும் பதிவுகள்.

    View all posts

More Articles & Posts