Tamil Nadu Children Writers and Artists Association

எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவு – த.சி.எ.க.ச. அஞ்சலி

Reading Time: 2 minutes

எழுத்தாளர், பேச்சாளர், கதைசொல்லியுமான தோழர் இரா.நாறும்பூநாதன் (64) காலமானார். இது கலை இலக்கிய உலகுக்குப் பேரிழப்பு. பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல், குழந்தைகளுக்குக் கதை சொல்வதிலும், கதை எழுதுவதிலும், கூட்டங்கள்-செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதிலும் ஆர்வம் காட்டிய அவருக்கு தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் அஞ்சலி செலுத்துகிறது.

”வாசிப்பு ஒரு நீண்ட பயணம். பரந்த வாசிப்பு மூலமாக மட்டுமே சமூகத்தை புரிந்துகொள்ள முடியும். இதுதான் நிறைய ஞானத்தை கொடுக்கும். வாசிப்பின் மூலமாக மட்டும்தான் ஒரு சமூகம் பண்பட்ட சமூகமாக மாறும்” என்று நாறும்பூநாதன் கூறுவார். அதற்கேபவே தன் வாழ்க்கை, செயல்பாடுகளை அமைத்துக்கொண்டவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க மாநில துணைச் செயலாளராக செயல்பட்டுவந்தார்.

வங்கிப் பணியில் விருப்ப ஒய்வு பெற்று, இலக்கியத் துறையில் ஈடுபட்டுவந்தவர் நாறும்பூநாதன். தொடக்கக் காலத்தில் ‘மொட்டுக்கள்’ என்னும் கையெழுத்து பத்திரிகையை கோவில்பட்டி நண்பர்களுடன் இணைந்து நடத்தியவர்.  அதில் அவரது ஓவியமும் எழுத்தாளர் உதயசங்கரின் கவிதையும், கட்டுரையும் வெளியாகிக்கொண்டிருந்தன. அவரது முதல் சிறுகதை ‘தொழில் தர்மம்’ மொட்டுக்கள் இதழிலேயே வெளியானது. ‘எண்ணங்கள்’, ‘த்வனி’ ஆகிய இதழ்களை நடத்தியுள்ளார்.

நண்பர்களுடன் இணைந்து ‘தர்சனா’ என்ற நாடகக் குழுவை உருவாக்கினார். எழுத்தாளர் தமிழ்ச்செல்வனுடன் சேர்ந்து ஸ்ருஷ்டி என்னும் நாடகக் குழுவில் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை தமிழகம் முழுவதும் சென்று நடத்தியுள்ளார்.

நாறும்பூநாதனின் முதல் புத்தகம் ‘கனவில் உதிர்ந்த பூ’ 2002ஆம் ஆண்டில் வெளிவந்தது. திருநெல்வேலியைச் சுற்றியுள்ள பல வரலாற்றுத் தகவல்களை, பிரபலங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். அவரது முகநூல் கட்டுரைகள் பெருவாரி வாசகர்களைக் கவர்ந்ததன் காரணமாக, முகநூலில் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ’கண் முன்னே விரியும் கடல்’, ’யானை சொப்பணம்’ என்ற இரு நூல்களாக வெளிவந்தன. தினமணி, இந்து தமிழ் நாளிதழ்களில் எழுதியுள்ளார். கரோனா பேரிடர் காலத்தில் தினம் ஒரு கதை என ஐம்பதற்கும் மேற்பட்ட தமிழ்ச் சிறுகதைகளை வட்டார வழக்கோடு, முகநூலில் கதை சொல்லி பதிவிட்டுள்ளார். தமிழக அரசின் உவேசா விருதை பெற்றுள்ளார்.

‘குழந்தைகளுக்காக பிரேமாவின் புத்தகங்கள்’, ‘மகாகவி பாரதி’ (மாணவர் பதிப்பு) உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். சிறார் கதைகள் சிலவற்றை ‘இந்து தமிழ்’ மாயா பஜாரிலும், தனது முகநூல் பக்கத்திலும் எழுதிவந்தார். குழந்தைகளிடம் கதைசொல்லும் முயற்சியிலும் ஈடுபட்டுவந்தார்.

நெல்லையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக புத்தகக் கண்காட்சிகளை தமிழகமே திரும்பிப்பார்க்கும் வகையில் நடத்தியதில் முக்கியப் பங்கு வகித்தவர். திருநெல்வேலியில் கலை இலக்கியக் கூட்டங்கள், செயல்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெறவும் வாசிப்புப் பண்பாடு வலுப்பெறவும் இடைவிடாது உழைத்துவந்தவர்.

மாணவர் சின்னதுரை வெட்டுப்பட்டவுடன் நேரில் சந்தித்து நிலைமையை உலகுக்கு எடுத்துச்சொல்லி ஆதரவாக மக்களைத் திரட்டுவதில் ஈடுபட்டவர். கணியான்கூத்துக் கலைஞர் நெல்லைத் தங்கராஜுக்கு வீடு கிடைக்கக் காரணமாக இருந்தவர். இப்படிக் கலை இலக்கியத் துறை மட்டுமல்லாமல் சமூகத்தின் எந்தத் தேவை, சிக்கல் எழுந்தாலும் உடனே அங்கே உதவிக்கரம் நீட்டுபவராக இருந்தார். சமூகத்துக்காகவும் மக்களுக்காகவும் செயல்படுவதற்காக அர்ப்பணித்துக்கொண்ட அவருடைய ஒவ்வொரு முயற்சியும் நாம் பின்பற்றத்தக்கது.

Author

  • admin

    தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் சங்கம் – சார்பாகப் பதிவு செய்யப்படும் பதிவுகள்.

    View all posts

More Articles & Posts