Tamil Nadu Children Writers and Artists Association

இணையதளம் அறிவிப்பு!

Reading Time: < 1 minute

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கம் ஜூன் 2021இல் துவங்கப்பட்டாலும், சங்கத்தின் செயல்பாடுகளை ஆவணப்படுத்த ஓர் இணையதளம் இல்லை என்ற குறையைத் தற்போது சங்கம் தீர்த்து வைத்துள்ளது.

நவீனத் தமிழ்ச்சிறார் இலக்கிய வரலாற்றில், இது ஒரு முக்கியமான மைல்கல் எனலாம். 2010க்கு பிறகான காலம் தமிழ்ச்சிறார் இலக்கியத்தின் மறுமலர்ச்சிக் காலம். தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் தற்போது புதிய அலை வீசுகின்றது.  புதிய எழுத்தாளர் பலர் எழுத வந்துள்ளனர். புதிய பதிப்பகங்கள் சிறுவர் நூல்களை வெளியிட ஆர்வம் காட்டுகின்றன. ஆண்டுக்கு ஐநூறு நூல்களுக்கு மேல் சிறார் நூல்கள் வெளியாகின்றன.

தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் இளந்தளிர்த் திட்டம் மூலமும், பள்ளிக்கல்வித் துறையின்   வாசிப்பு இயக்கம் மூலமும், வண்ணக் கதைப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுப் பள்ளிகளுக்கும், நூலகங்களுக்கும் அனுப்பப் பட்டுள்ளன. மாணவர் இதழ்களான ‘தேன்சிட்டு’, ‘ஊஞ்சல்’ பத்திரிக்கைகள் மாதம் இருமுறை பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

கதைக்கரு, மொழி, வயது வாரியான பகுப்பு முறை, புத்தக வடிவமைப்பு மொழிபெயர்ப்பு ஆகியவை சார்ந்து, புதிய முயற்சிகள் தொடர்ந்து நடந்தவண்ணமுள்ளன. ஆனால் சிறார் இலக்கியத்தில் புழங்குபவர்களைத் தவிர, வெளியில் உள்ளோர்க்கு இந்தத் தகவல்கள் போய்ச் சேரவில்லை. எனவே இந்தத் தகவல்களை இத்தளத்தில் ஆவணப்படுத்துவதன் மூலம், பிற துறையினரும் தெரிந்து கொள்ள வசதியேற்படும். சிறார் இலக்கியம் தொடர்பாக ஆய்வில் ஈடுபடுவோர்க்கும், இத்தகவல்கள் பெரிதும் பயன்படும்.

இந்த இணையதளத்தின் முக்கிய நோக்கங்கள்:-

  • சங்கத்தின் செயல்பாடுகளை ஆவணப்படுத்துதல்;
  • தமிழ்நாட்டில் ஆங்காங்கே சங்கத்தின் பல்வேறு கிளைகள் நடத்தும் நிகழ்வுகளை ஆவணப்படுத்துதல்;
  • நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கிய வரலாற்றை ஆவணப்படுத்துதல்;
  • தமிழ்ச் சிறார் இலக்கிய முன்னோடிகள், அவர்தம் படைப்புகள் ஆகியவற்றை ஆவணப்படுத்துதல்;
  • சிறார் நூல்களின் அறிமுகம்;
  • நாடகம், ஓவியம், சிற்பம், ஓரிகாமி, சிறார் சினிமா உள்ளிட்ட கலைகள் குறித்தும், கலைஞர்கள் குறித்தும் செய்திகளை ஆவணப்படுத்துதல்;
  • சமகால வெளியீடுகளை அறிமுகப்படுத்துதல், சிறார் கலை இலக்கிய தளங்களில் விமர்சனப் போக்கினை உருவாக்குதல்;
  • வாசிப்பு நோக்கிச் சமூகத்தை நகர்த்தும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை முன்னெடுத்தல்;
  • கலை, இலக்கியம், கல்வி எனப் பல்வேறு தலைப்புகளில் பல்வேறு ஆளுமைகள், கருத்துப் பகிர்வுகள் எனச் சிறார் உலகை மையப்படுத்தி இயங்குதல் ஆகியன.

Panchumittai.com, bookday.in, chuttiulagam.com ஆகிய இணையதளங்கள் ஏற்கெனவே தமிழ்ச் சிறார் கலை-இலக்கியப் போக்குகளை ஆவணப்படுத்தி வருகின்றன. தற்போது சங்கத்தின் இணையதளமும் இணைந்து பல்வேறு புதிய முயற்சிகளை எடுக்கும்.

தொழில்நுட்ப ரீதியாக இந்த இணையதளத்தை முன்னின்று உருவாக்கிய சங்கத்தின் பொருளாளர் பஞ்சு மிட்டாய் பிரபு அவர்களுக்கு, அன்பும் வாழ்த்தும். இந்த இணையதளம் சிறார் நலனை முன்னிறுத்தி எழுத்தாளர்களையும், கலைஞர்களையும் கருத்துகள் வழியே இணைக்கும் பாலமாக  அமையும்.

நன்றி,

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் & கலைஞர்கள் சங்கம்

More Articles & Posts