குழந்தை உலகம் மகிழ்வானது; நம்பிக்கையில் ஆழ ஊன்றியது. குழந்தைகளின் உள்ளம் விரிந்தது. அதில் உறவுக்கும் நட்புக்கும் மட்டுமல்ல, உயிர்களுக்கெல்லாம் இடமுண்டு. ஏன் கல்லுக்கும் மண்ணுக்கும் கற்பனை உலகுக்கும் இடமுண்டு. அவர்கள் காற்றோடு பேசும் கலை கற்றவர்கள்; கடலலை பேசுவதைக் கேட்டு விளங்கிக் கொள்ளும் உள்ளம் படைத்தவர்கள். சிறகடித்துப் பறக்கும் எண்ணங்களுக்கும் புதிய தேடுதலுக்கும் சொந்தக்காரர்கள்.
இன்றைய காட்சி ஊடக உலகம், குழந்தைகளை, குழந்தைகளின் இயல்புக் கற்பனையை, இயற்கையோடும் இணைந்த மக்களோடுமான உறவை, மொழியோடான தொடர்பை, குழந்தமையை மெல்ல, களவாடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் குழந்தைகளுக்காகப் பொறுப்புடன் எழுதுவதும், கலையாக்கங்கள் படைப்பதும், குழந்தைகளுடன் இணைந்து அவர்களுக்காகச் செயல்படுவதும் மிகவும் இன்றியமையாத பணிகள். தமிழ் நாட்டில் இப்பணிகளில் இணைந்து கொண்டு இவற்றைச் செழுமையாக்கும் களப்பணியில் தமிழ் நாடு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் செயல்பட்டு வருவது பெருமகிழ்வு தரும் ஒன்று.
குழந்தைகள் தளங்களில் பணியாற்றும் பலரும் இணைந்து செயல்பட, தமிழ் நாடு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க இணைய தளம் பேருதவியாக, பெரும்பயனாக இருக்கும்.
வாழ்த்தி மகிழ்கிறோம்,
வெற்றிச்செழியன்.

