“குழந்தையே, மனிதனின் தந்தை ” (The child is the father of man) என்றார் கவிஞர் வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் . குழந்தைப் பருவத்தின் பண்புகளும், நடவடிக்கைகளுமே பிற்காலத்தில் ஒரு மனிதனின் ஆளுமையையும், அடையாளத்தையும் உருவாக்குகிறது என்பது சரியே. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது தமிழ்ச் சொலவடை. அதையே “Catch them young’ என்று ஆங்கிலமும் நமக்குக் கற்பிக்கிறது.
ஆனாலும் 18- ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் ஆங்கிலத்திலேயே சிறார் இலக்கியம் தோன்றியதைக் காண்கிறோம். இருப்பினும் சிறார் இலக்கிய வகையினம் ஆங்கிலத்தில் மிக வேகமாக வளர்ந்து இன்று கோடிக்கணக்கான டாலர்களை வாரிவழங்கும் ஜே.கே. ரவ்லிங்கின் ஹாரி பாட்டராக நெடிதோங்கி நிற்கிறது.
ஆங்கிலத்திலேயே அப்படி எனும் போது, தமிழில் மிகவும் காலதாமதமாகத்தான் இந்த இலக்கியவகை மெல்ல மெல்ல உருவாகி வந்துள்ளது. தகவல் வெடிப்பு மிக்க இந்த யுகத்தில், இன்னும் பஞ்சதந்திரக் கதைகளை வைத்துக் .கொண்டே காலத்தை ஓட்ட முடியாது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது மாதா, பிதா, தொலைக்காட்சி தெய்வம் என்றாகி விட்ட காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். எனவே இந்த ஓட்டப் பந்தயத்தில் நாம் வெல்ல வேண்டுமெனில், சிறார் இலக்கிய வகையினத்தில் பெரும் பரிணாம வளர்ச்சி தேவைப்படுகிறது.
இந்த வரலாற்றுத் தேவையை உணர்ந்த காரணத்தால், காலப்பொருத்தப்பாடு கருதி 2021 – ஆம் ஆண்டில் தமிழ்நாடு சிறுவர் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் உருவாக்கப் பட்டது. அதன் தொடர்ச்சியாக இச்சங்கத்திற்கு இணையதளம் தொடங்கத் துறைசார் படைப்பாளிகள் இப்பொழுது முன்முயற்சி எடுத்து வருகின்றனர். சிறார் இலக்கிய வானில் புனைவுகளும், அல்புனைவுகளுமாக ஆற்ற வேண்டிய பணிகள் கொட்டிக் கிடக்கின்றன. இந்தச் சமகாலச் சவாலை எதிர்கொண்டு, சிறார் இலக்கிய இணையதளம் புதிய சிகரங்களை வென்றெடுக்க அனைவரும் வாழ்த்துவோம்.
கண. குறிஞ்சி

