Tamil Nadu Children Writers and Artists Association

தமிழ்நாடு குழந்தைகள் கலை இலக்கிய அறிவியல் நூல் வெளியீட்டுக் கழகம் – ஒரு முன்மொழிவு.

Reading Time: 2 minutes

  1. குழந்தைகளின் முழுமையான ஆளுமை வளர்ச்சியையும் சாதி, மத, பாகுபாடுகளைக் களைந்த பகுத்தறிவுச் சிந்தனைகளையும் குழந்தைகளிடம் வளர்ப்பதற்கு பள்ளியிலேயே அவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். அதற்கு கலை, இலக்கிய, அறிவியல் நூல்கள் உறுதுணையாக இருக்கும். எதிர்காலச் சமூகத்தை ஆரோக்கியமானதாக உருவாக்க சிறு வயதிலேயே நூல் வாசிப்பு மிகவும் அவசியம்.
  2. நம் குழந்தைகளின் வாசிப்புத்திறனை மேம்படுத்தவும், பொது அறிவையும் கற்பனை வளத்தையும் ஆய்வு மனப்பாங்கையும் விரிவுபடுத்தவும் பாடநூல்களைத் தாண்டிய வாசிப்பு மிகமிக அவசியம். அத்தகைய வாசிப்பை பள்ளிகளில் உருவாக்க குழந்தைகளுக்கான கலை இலக்கிய அறிவியல் நூல் வெளியீட்டுக் கழகத்தைத் தொடங்க வேண்டும்.
  3. கேரளாவில் இத்தகைய வெளியீட்டு நிறுவனம் 1981–ல் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது. ஒவ்வோர் ஆண்டிலும் அந்த நிறுவனம் மூலம் குழந்தைகளுக்கான ஏராளமான கலை இலக்கிய அறிவியல் நூல்களையும், குழந்தைகளுக்கான ஒரு பத்திரிகையையும் வெளியிட்டு அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்புகிறார்கள். அதன் மூலம் பள்ளிக் குழந்தைகளின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துகிறார்கள்.
  4. பள்ளியில் இவ்வாறு வாசிப்பின் ருசி கண்ட மாணவர்கள் நூல் வாசிப்பைத் தங்கள் வாழ்வின் எல்லாக் காலங்களிலும் தொடர்வார்கள். ஓர் அறிவார்ந்த எதிர்கால சமூகத்தை உருவாக்குவதற்கான முன்னெடுப்புகளை இந்த நிறுவனம் மூலம் நம்முடைய அரசு செய்யவேண்டும்.
  5. மாறிக்கொண்டிருக்கும் சமூகச்சூழலில் குழந்தைகளுக்கான தேவைகளும் அவசியங்களும், அவர்களுடைய முன்னுரிமைகளும் மாறியிருக்கின்றன. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு குழந்தைகளின் மனதில் இயல்பாக இருக்கிற அன்பையும், நேசத்தையும், வளர்க்கவும், மதச்சார்பின்மை, சாதிப்பாகுபாடின்மை ஆகிய பண்புகளை விதைக்கவும், சகிப்புத்தன்மை,  ஒற்றுமையுணர்வு ஆகியவற்றைப் பயிற்றுவிக்கவும் உதவுகிற நூல்களை வெளியிட்டு குழந்தைகளிடம் கொண்டுசெல்ல வேண்டும்.
  6. குழந்தைகள் கலை இலக்கிய அறிவியல் நூல் வெளியீட்டுக் கழகம்,  அரசு வெளியீட்டு நிறுவனங்களின் துணைஉறுப்பாக இருக்கலாம். ஆனால் அதற்கான நிர்வாக அமைப்பு சுயேச்சையானதாக இருக்கவேண்டும்.
  7. மாண்புமிகு தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் / கல்வி அமைச்சரின் தலைமையில் குழந்தைகள் கலை இலக்கிய அறிவியல் நூல் வெளியீட்டுக் கழகம் இயங்குதல் வேண்டும்
  8. அரசு நிர்வாகத்தின் சார்பில் இயக்குநர், துணை இயக்குநர், நிர்வாக அமைப்பு இருக்க வேண்டும். அதே நேரம் வெளியீட்டுக் கழகத்துக்கான ஆலோசனைக் குழுவில் சிறார் எழுத்தாளர்கள், ஓவியர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள், உளவியலாளர்கள், அறிவியலாளர்கள், கதைசொல்லிகளைக் கொண்ட ஒரு குழு இயங்க வேண்டும்.
  9. இந்த ஆலோசனைக் குழு வயதுவாரியாக குழந்தைகளுக்கான படைப்புகளை வெளியிடுவதற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
  10. ஆலோசனைக் குழு, எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிவியலாளர்கள் ஆகியோரிடமிருந்து நூல்களைப் பெறுதல், தேர்ந்தெடுத்தல், அவற்றை செம்மைப்படுத்துதல், வெளியிட்ட நூல்களுக்கான குழந்தைகளின் எதிர்வினைகளை ஆய்வுசெய்தல் போன்ற பணிகளைச் செய்ய வேண்டும்.
  11. குழந்தைகள் கலை இலக்கிய அறிவியல் வெளியீட்டுக் கழகம் புதிய படைப்புகளையும், பழைய செவ்வியல் படைப்புகளையும் குழந்தைகள் விரும்புகிற வகையில் சிறந்த முறையில் அச்சிட்டு அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும்.
  12. அனைத்துப் பள்ளிகளிலும் நூலகம் அமைத்தல், நூலக வகுப்பு, வாசிப்பு வகுப்புகளை உருவாக்குதல், நூலக வகுப்புகளில் குழந்தைகள் விரும்புகிற புத்தகங்களை எடுத்து வாசிக்க அனுமதித்தல், வாசிப்பு வகுப்புகளில் குழந்தைகளுக்கான கதை, அறிவியல் நூல் ஒன்றை உரத்த குரலில் ஆசிரியர் வாசித்தல், அவர்கள் வாசித்த புத்தகங்களைப் பற்றிய கருத்துகளை குழந்தைகளிடம் கேட்டறிதல், அவற்றைத் தொகுத்து குழந்தைகள் கலை இலக்கிய அறிவியல் நூல் வெளியீட்டுக் கழகத்துக்கு காலமுறைப்படி (ஆறு மாதங்களுக் ஒருமுறையோ, ஆண்டுக்கு ஒருமுறையோ) அனுப்பி வைத்தல் போன்ற நிர்வாக நடவடிக்கைகளை மாண்புமிகு கல்வித்துறை அமைச்சரின் தலைமையில் இயங்கும் இயக்குநரகம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
  13. ஆசிரியர்களுக்கு காலமுறைப்படி குழந்தைகளுக்குக் கதைசொல்வதற்கான பயிற்சி, சமகால சிறார் இலக்கியம் பற்றிய பார்வை, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைப் பற்றியும், அவற்றுக்கு எதிரான சட்டங்களைப் பற்றியும் விளக்கம், பள்ளிகளில் குழந்தைகளைக் கையாள்வது குறித்த உளவியல் பயிற்சிகள் ஆகியவற்றை வழங்க வேண்டும்.
  14. குழந்தைகள் கலை இலக்கிய அறிவியல் நூல் வெளியீட்டுக் கழகத்தின் வழியே கலை இலக்கிய அறிவியல் நூல்களை எழுதுகிற குழந்தைகளின் நூல்களையும் வெளியிட வேண்டும், அத்தகைய குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும்.
  15. குழந்தைகள் கலை இலக்கிய அறிவியல் நூல் வெளியீட்டுக் கழகம் குழந்தைகளின் அறிவார்ந்த செயல்பாடுகளின் களமாகவும், அவர்களுடைய பல்திறன்களைக் கண்டறியும் சோதனைச்சாலையாகவும், குழந்தைமையின் மகிழ்ச்சியை வளர்த்தெடுக்கும் பூந்தோட்டமாகவும் திகழவேண்டும்.
  16. அர்ப்பணிப்பு உள்ளம் கொண்ட ஆசிரியர்களின் உதவியுடன், குழந்தைகளின் மன உலகில் புதிய கனவுகளையும் கற்பனைகளையும் விதைக்கும் இலக்கியங்களை அறிமுகம்செய்யும் வகையில் அவ்வப்பொழுது பயிற்சிப்பட்டறைகளையும், முகாம்களையும் நடத்தித்தருவதற்கான ஏற்பாடுகளை இக்கழகம் செய்துதர வேண்டும்.
  17. தமிழ்க் குழந்தை இலக்கியத்துக்கு கடந்த காலங்களில் பங்களிப்புச் செய்த மாபெரும் படைப்பாளிகள், பத்திரிகைகள், அவற்றின் ஆசிரியர்கள், பதிப்பாளர்கள், வெளியீட்டாளர்கள், பதிப்பகங்கள் போன்ற வரலாற்றுச்செய்திகளை இயன்ற வரையில் தொகுத்து ஆவணப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டு அரசின் சார்பில் முன்னர் வெளியிடப்பட்டு வந்த ‘குழந்தை இலக்கிய நூற்றொகை’ போன்ற தொகை நூல்களாக அந்த ஆவணங்களை வெளியிட வேண்டும். இதன்மூலம், தமிழ்க் குழந்தைகளின் இலக்கிய வளர்ச்சிக்குத் தமது பெரும் பங்களிப்புகளைத் தன்னலமின்றி வழங்கிச்சென்ற மாமனிதர்களைப் பற்றி நாமும், இளம் தலைமுறைகளும் அறிய முடியும்; பின்பற்றி செயலாற்றவும் முடியும்.
  18. சிறந்த குழந்தை இலக்கிய நூல்களையும், பிற மொழிகளிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்படும் நூல்களையும் வெளியிட்டு வரும் பதிப்பகங்கள், அவற்றை எழுதிய, மொழிபெயர்த்த ஆசிரியர்கள், மூல நூல்களின் ஆசிரியர்கள் ஆகியோருக்கு ஆண்டுதோறும் குழந்தை இலக்கிய விருதுகள் வழங்கி இக்கழகம் மூலம் கவுரவிக்க வேண்டும்.
  19. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குழந்தை இலக்கிய மாநாடுகளை நடத்தி, இரண்டாண்டு காலப் பணிகளைப் பரிசீலித்து, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான செயல்திட்டங்களை வகுக்க வேண்டும். பிற மாநிலங்களின், நாடுகளின் குழந்தை இலக்கிய எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோருடன் தமிழ்ப் படைப்பாளிகளும் கலைஞர்களுமான சந்திப்புகளை ஏற்பாடு செய்யலாம். பண்பாட்டுப் பரிமாற்றம், பிற பண்பாடுகளைப் புரிந்துகொள்ளல், பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்தல் போன்ற பண்புகளை வளர்த்தெடுக்க இந்தச் சந்திப்புகள் உதவும்.  

நன்றி,

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம்ம்

Author

  • admin

    தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் சங்கம் – சார்பாகப் பதிவு செய்யப்படும் பதிவுகள்.

    View all posts

More Articles & Posts