Tamil Nadu Children Writers and Artists Association

தமிழக அரசின் அறிவிப்பிற்கு தசிஎகசவின் வாழ்த்துகளும் ஆலோசனைகளும்.

Reading Time: 2 minutes

சிறுவர்களுக்கான 100 புத்தகங்களை வெளியிடுவதாக தமிழக அரசின் அறிவிப்பிற்கு தமிழக சிறுவர் எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் வாழ்த்துகளும் ஆலோசனைகளும்.

வணக்கம்,

கொரானா தாக்குதலில் பள்ளி மூடப்பட்டு 15 மாதங்களைக் கடக்கும் இன்றைய சூழலில் மாணவர்களின் கல்வி குறித்து வெவ்வேறு தளங்களில் உரையாடுவதும் வெவ்வேறு திட்டங்கள் குறித்து பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக சிறுவர்களுக்கான 100 புத்தகங்களை வெளியிடுவது என்னும் அறிவிப்பினை மிக முக்கியமான ஒன்றாக இருப்பதை ‘தமிழக சிறுவர் எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம்’ சார்பாக வரவேற்கிறோம். சிறு நூல்கள் குழந்தைகளின் வாசிப்பில் பெரும் பங்கு வகிக்கின்றன. தொடர்ந்து குழந்தைகளின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த முடியாத சூழலைப் பற்றி பல்வேறு ஆய்வுகள் வெளிப்படுத்தும் அதே நேரம் சிறு நூல்கள் மற்றும் சிறுவர் இலக்கியத்தின் பங்களிப்பைப் பற்றி பேசியும் வருகின்றனர்.  அதோடு கலைஞர் ஆட்சியில் குழந்தைகள் வாசிப்பிற்காக தமிழக அரசால் வெளியிடப்பட்ட புத்தகப்பூங்கொத்து புத்தகங்கள் மாணவர்களின் வாசிப்பில் பெரும்பங்கு வகித்ததை நினைவு கூறுகிறோம். தற்போது வெளியிட உள்ள புத்தகங்கள் சிறார்களை பயணுள்ள வகையில் சென்றடைய சில ஆலோசனைகளை முன் வைப்பதில் ‘தமிழக சிறுவர் எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம்’ மகிழ்ச்சியடைகிறோம்.

இப்புத்தகங்கள் மாணவர்களுக்கு பயன்படும் வகையிலானதாக மாறுவதற்கு சில ஆலோசனைகள் வழங்கக் கடமைப்பட்டுள்ளோம்.  புத்தகங்கள் மாணவர்களை கவர்ந்திழுக்கும்படியானதாகவும் வாசிப்பில் ஈடுபடுத்தும் தன்மையைக் கொண்டும் இருக்க வேண்டியதைப் பற்றி குழந்தை பதிப்பகங்கள் உலகம் முழுக்க அக்கறை செலுத்தி வருகின்றனர். தமிழகத்திலும் அது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் நிலையில் அரசு வெளியிட இருக்கும் புத்தகங்களின் குழந்தமை சார்ந்த விஷயங்களை முக்கியப்படுத்துவது அவசியம் . புத்தகங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற மொழியில் இருத்தல்,  வன்னமயமாக இருத்தல், நல்ல ஓவியக்களை உள்ளடக்கியிருத்தல், புத்தக வடிவமைப்பு, புத்தகம் மாணவர்களை சென்றடைதல், புத்தகத்தை மாணவர்கள் பயன்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்களிப்பு… என எங்கள் ஆலோசனைகளை இங்கு விவரித்துள்ளோம்.

புத்தகங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற மொழியில் இருத்தல்:

    2005 தேசிய பாடத்திட்ட வரைவு மொழி பற்றி குறிப்பிட்டுள்ள விஷயங்களான

    1. ஆரம்பக்கல்வியில் குழந்தைகளின் பேசும் மொழியை வாசிப்பிற்கானதாக ஆக்குதல்.
    2. குழந்தைகளின் அனுபவம் சார்ந்த விஷயங்களை வாசிப்பிற்கும் எழுதுவதற்கும் பயன்படுத்துதல்.
    3. வாசிப்பிற்குப் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கும் பேசும் மொழியும் ஒருங்கே இருத்தல்.
    4. சிறு சொற்கள் சொற்றொடர்களை பயன்படுத்துதல்.
    5. வாசிப்பைப் புரிந்து கொள்வதற்கேற்ப காட்சிகளை முதன்மைப்படுத்துதல்
    6. கதை, பாடல், விளையாட்டு… என வெவ்வேறு வடிவங்களில் வாசிப்பை இட்டு செல்லுதல்.
    7. பொதுத்தமிழுக்கும் குழந்தை மொழிக்குமான வேறுபாடுகளை அறிந்து செயல்படல்.
    8. குழந்தைகள் விரும்பும் மற்றும் குழந்தைகளுக்குத் தொடர்புடைய விஷயங்களில் கவனம் செலுத்துதல்
    9. படிப்படியாக அடுத்த நிலையை அடைய உதவுதல்.

    போன்ற மொழி தொடர்பான கருத்துகள் குறித்து தமிழகக் கல்வித்துறை நீண்டகாலமாக உரையாடி வருகிறது. இருந்தபோதும் பொதுத்தமிழ் என்ற வடிவத்திற்குள் சிக்கியிருக்கும் நிலையில் இருந்து விடுபட்டு குழந்தைமை சார்ந்த மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் செயல்பாடுகள் உதவியாக இருக்கும். 

    வண்ணமயமாக இருத்தல்:

      15 ஆண்டுகளுக்கு முன் அல்லது நம் சமச்சீர் பாடப்புத்தகத்திற்கு முன் பாடப்புத்தகங்கள் கருப்பு வெள்ளையாக இருந்ததும் பாடப்புத்தகம் வண்ணத்தாள்களில் அச்சடிக்கப்பட்டபொழுது குழந்தைகள் விரும்பும் புத்தகமாக இருந்ததையும் நாம் மறக்கமுடியாது. அதை வாசிப்பு நூல்களுக்கும் பொறுத்தி வண்ணப்புத்தகங்களாக உருவாக்குவது

      நல்ல ஓவியக்களை உள்ளடக்கியிருத்தல்:

        நல்ல ஓவியங்கள் குழந்தைகளின் வாசிப்பிற்கு மட்டுமல்ல புரிதலுக்கு, கற்பனையாற்றலை வளர்த்தெடுக்க என வரிவடிவத்தில் உள்ள கருத்துக்களைப்போல கருத்துக்களை வளப்படுத்த என உதவக்கூடியவை. ஓவியங்களை மையப்படுத்திய எழுத்தும் எழுத்தை மையப்படுத்திய ஓவியங்கள் என புத்தகங்களை கொண்டு செல்லுதல் அவசியம்.

        புத்தக வடிவமைப்பு:

        1. குழந்தைகள் வயதுக்கேற்ற எழுத்துக்களின் அளவு
        2. பக்கங்கள் முழுக்க எழுத்துக்கள் இல்லாமை
        3. காலி இடங்கள்
        4. வாசிப்பை ஈர்க்கும்படியான வண்ணம்

        போன்ற வாசிப்பைத்தூண்டும்படியான நவீன வடிவமைப்பு சித்தாந்தங்களின் துணையோடு வாசிப்பு நூல்களை உருவாக்குதல்.

        புத்தகங்கள் மாணவர்களை சென்றடைதல்:

          இந்தியக்குழந்தைகளில் இன்னும் ஒரு புத்தகங்கள் கூட எட்டாத நிலை பற்றி சில ஆய்வுகள் முன் வைக்கின்றன. இம்முயற்சி அப்படி ஒரு சூழலை தகர்க்க உதவும் என்பது உறுதி. அதற்காக மாணவர்களை சென்றடைவத்ற்கான திட்டங்கள் அவசியம்.

          • இப்புத்தகங்கள் ஒவ்வொரு குழந்தைகளையும் சென்றடையவா? வகுப்பறை நூலகத்திற்கானதா? … என்பதை முடிவு செய்து அதற்கான எண்ணிக்கைகளில் அச்சடிப்பது மற்றும் அச்சடித்த புத்தகங்கள் விணியோகிக்கப்படுவதும் அவசியம்.

          புத்தகங்களை மாணவர்கள் வாசிப்பதில் ஆசிரியர்களின் பங்களிப்பு தொடர்பாக:

            1. புத்தகங்களை மாணவர்கள் வாசிப்பதற்கு ஆர்வம் ஏற்படுத்தும் விதமாக அறிமுகத்தை ஆசிரியர் செய்யலாம்.

            2. தலைப்பு, உள்ளடக்கம், புத்தக ஆசிரியர் பற்றியதாக அறிமுகம் அமைய வேண்டும்.

            3. தொடக்கப் பள்ளியில் பாலர் சபை, உயர்நிலைப் பள்ளியில் மாணவர் மன்றம் ஆகியவற்றை மீண்டும் ஏற்படுத்த வேண்டும்.

             4. பாலர் சபை, மாணவர் மன்றம் கூட்டங்களில் புத்தகம் பற்றி மாணவர்களை பேச வைக்கலாம்.

            5. வாரம் ஒரு புத்தகத்தை ஒவ்வொரு மாணவரும் வாசித்து வகுப்பறையில் கூறுவதற்கு பாடவேளை அட்டவணையில் ஏற்பாடு வேண்டும்.

            நன்றி,

            தசிஎகச

            Author

            • admin

              தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் சங்கம் – சார்பாகப் பதிவு செய்யப்படும் பதிவுகள்.

              View all posts

            More Articles & Posts