தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க அமைப்பு உருவான நிகழ்வு என்பதே சிறார் எழுத்துகள் பற்றிய ஓர் உரையாடலிலிருந்தே தொடங்கி நடந்தது என்பதை நினைவு கூர்வதிலிருந்தே இந்த முன்னுரையைத் தொடங்கலாம் என எண்ணுகிறேன். அவ்வுரையாடல் இன்று இந்தப் புத்தகமாக உருப் பெறுகிறது என்பதுவும் ஒரு மகிழ்ச்சியான அனுபவம்.
சிறாருக்கான எழுத்துகளை நவீனப் பார்வையுடன் முன்னெடுத்துச் செல்வது என்பது ஒரு சவாலான விஷயம்தான். சிறார் எழுத்து என்பது அவர்களுக்கு ஒரு கருத்து அல்லது ஓர் அறிவுரையைச் சொல்வதல்ல! அவர்கள் கடினமான ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்வதற்கான வழிகாட்டும் செயலும் அல்ல. புலமை மிக்க தமிழை வாசிக்க வைக்கும் முயற்சியல்ல. மொழிபெயர்ப்புகளை அள்ளி வழங்குவதல்ல – என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஓர் எழுத்தாளராக இருந்து புரிந்து கொள்வது, குழந்தைகளின் கற்பனைகளுக்குள் நுழைந்து உடன் பயணித்து வெளியே வருவது, இயல்பான வாசிப்பிற்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லும் முயற்சி. சிறார்களுடைய மொழியனுபவங்களைப் புரிந்து கவனமாகச் செயல்படுவது. தன் வயதொத்தவர்களுடன் சுதந்திரமாக விளையாடுகையில் இருக்கும் மகிழ்ச்சியான மனநிலையைப் புத்தகத்தின் மூலம் உருவாக்கித் தருவது. வயதுக்கேற்பவும், வாசிப்பிற்கேற்பவும் பல்வேறு படிநிலைகளை அமைத்துத் தருவது…இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
அப்படியான ஒரு வாசிப்பனுபவத்தையும், கலைச் செயல்பாடுகளையும் சிறார்களைச் சென்றடைவதற்கேற்ப முன்வைக்க உதவும் வெவ்வேறு செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டியிருந்தது, அவற்றை வரிசைப்படுத்திப் பார்க்கும் நேரமிது. நவீன சிறார் இலக்கியம் படைத்தல், சிறாரை வாசிப்பிற்கு அழைத்துச் செல்லுதல், சிறாருடன் வெவ்வேறு கலைச் செயல்பாடுகளில் ஈடுபடுதல், பெற்றோருடனும், ஆசிரியர்களுடனும் உரையாடுதல், சிறார்களின் தேவைகள் பற்றிய புரிதலை அரசாங்கத்திற்கு எடுத்துச் செல்லுதல், அதை வளர்த்தெடுத்தல், மற்றும் அவர்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்தல், பதிப்பகங்களுடன் புத்தகக் கண்காட்சிகளில், பொது மேடைகளில், பொது வெளிகளில் என விதம் விதமான செயல்பாடுகளுக்கானவையாகச் சங்கச் செயல்பாடுகள் தம்மைத் தாமே வளர்த்தெடுக்கத் தொடங்கியுள்ளன.
நேரடியாகவும், இணையத்தின் மூலமாகவும் சிறார்கள் சார்ந்த உரையாடலை நாங்கள் முன்னெடுத்த போது அது பெரும் வரவேற்பைப் பெற்றது. புத்தகக் கண்காட்சியில் அழ.வள்ளியப்பாவின் நூறாவது ஆண்டுக் கொண்டாட்ட மேடை என்பதும், அழ.வள்ளியப்பாவின் படைப்புகள் குறித்து இணையவழி மாநாடு என்பதும் சிறார்களின் செயல்பாடுகளுக்குப் பெரும் உந்துதலைத் தருவதாக இருந்தது. இந்த ஆண்டு தமிழ் மாநில அளவிலும், கிளைச் சங்கங்கள் மூலமாகவும் எல்லா மாவட்டங்களிலும் செயல்பாடுகளை முன்னெடுக்கத் தயாராகிக் கொண்டிருப்பதையும் முனைப்புடன் செய்து வருகின்றனர்.
பாடப்புத்தகங்களில் ஏற்படுத்த வேண்டிய மாற்றம் குறித்து, இலக்கியத்தை முக்கியமான பாடத் திட்டமாக எடுத்துச் செல்வது பற்றி, சிறார்கள் மீது நடத்தப்படும் வன்முறை குறித்து, சிறார் இலக்கியங்கள் முதன்மையாகப் பார்க்கப்பட வேண்டிய அவசியம் குறித்து, நாங்குநேரியில் நடந்த சாதிய வன்முறை குழந்தைகளை இலக்காகக் கொண்டிருந்ததைக் குறித்து – அரசாங்கத்திற்குத் தொடர் கோரிக்கைகளை முன் வைத்துக் கொண்டேதான் இருக்கிறோம்.
பாடநூல் கழகத்தின் இளந்தளிர் இலக்கியத்திட்டம், சம்ரக்ஷக சிக்ஷானின் வாசிப்பு இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்து சிறார் இலக்கியத்திற்கான நவீன வடிவத்தை உருவாக்கித் தருவதில் சங்க உறுப்பினர்கள் பெரும் பங்காற்றியிருப்பதை மகிழ்ச்சியுடன் முன் வைக்கிறோம்.
குழந்தைகள் பதிப்பகங்களுடன் இணைந்து சிறார் புத்தகங்களில் மொழி, வண்ணங்கள், வடிவம் ஆகியவை குறித்து உரையாடி வருகிறோம்.
சிறார் இலக்கியம் பற்றிய பார்வை, சிறார் இலக்கியம் செல்ல வேண்டிய பாதை, குழந்தைகளின் வாசிப்பிற்கு உதவும் வழிமுறைகள் குறித்துப் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களுடன் உரையாடி வருகிறோம்.
கிளைச் சங்கங்ளை வழி நடத்துதல், கிளைச் சங்கங்கள் மூலம் சிறார்களைப் பற்றிய பார்வையை, வாசிப்பை முன்னெடுத்தல், சிறார்களுக்கான கதை சொல்லல் நிகழ்வு, சிறார்களுக்கான நாடகங்கள் என மாவட்டந்தோறும் நடைபெறும் செயல்பாடுகள் சமூக மாற்றத்திற்கானவையாக அமையும் என்ற நம்பிக்கையை அளித்து வருகின்றன.
சங்க உறுப்பினர்கள் சங்க நெறிமுறைகளை வளர்த்துக் கொள்ளுவதற்கான தொடர் உரையாடல்களை முன்னெடுத்தோம். மாநில அளவில் செயல்படும் வெவ்வேறு இயக்கப்பணிகளை முன்னெடுத்தவர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டது சங்கச் செயல்பாடுகளை வலுப்படுத்தியது.
நம்பிக்கையளிக்கும் செயல்பாடுகளின் ஊடாகச் சங்கப்பணிகளை வலுவாக முன்னெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. சிறார் இலக்கியம் மற்றும் சிறார்கள் சார்ந்து பெரியவர்களுடன் செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்தல், எங்களைப் புதுப்பித்துக் கொள்ளும் பணிகளை மேற்கொள்வதையும், கூடிச் செயல்படும் பாங்கை வளர்த்துக் கொள்வது என எங்களை நாங்களே செயல்பாடுகளுக்கேற்றவர்களாக மாற்றிக் கொள்ளும் முயற்சியிலும் ஈடுபடுகிறோம். சிறார் இலக்கியப்பணி இன்றைய சமூகத்தின் தேவை என்பதை உணர்தல் எங்களின் செயல்பாடுகளுக்கான அடித்தளமாக இருந்து வருகிறது.
சாலை செல்வம்,
செயலாளர், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கம்

