உலகத்தில் உள்ள மிகச்சிறந்த அனைத்தையும் மிகச்சிறந்த முறையில் சிறார்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது சிறார் கலை இலக்கிய செயல்பாட்டாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்களின் கடமை. சிறார் செயல்பாட்டாளர் என்று வரும்போது கூடுதலான, நுட்பமான பார்வையும், சிறார்களின் நூதன உலகம் குறித்த புரிதலும் பன்மடங்காக இருத்தல் அவசியமாகிறது.
ஐம்பதுகள் அறுபதுகளில் அண்டரண்டப்பட்சியின் சிறகுகளைக் கொண்ட சிறார் செயல்பாட்டாளர்கள் தமிழ் சூழலில் இருந்ததை நாம் அறிய முடிகிறது. கூட்டுப்புழு, வண்ணத்துப்பூச்சி என பயணித்து உருக்கொள்ளும் சிறார்களின் உலகை அன்றைய சிறார் செயல்பாட்டாளர்கள் உன்னதமான உலகமாக கட்டமைத்துள்ளார்கள். பின் வந்த காலங்களில் ‘அண்டரண்டப் பட்சியின்’ சிறகுகள் தேய்ந்து விட்டில் பூச்சியின் இறகுகளாக சுருங்கிப் போன அவலம் தமிழ்ச் சூழலில் நிகழ்ந்துள்ளது.
மாஸ்கோ நகரத்தில் நடத்தப்படும் கிளாசிக்கல் நாடகங்கள் உலக இலக்கியத்தைத் திறந்து காட்டும் வாயில்களாகக் குழந்தைகளுக்கு அமைந்திருப்பது போன்ற நிகழ்வுகள் தமிழக் சூழலில் அரங்கேற வேண்டும்.
தற்போது மாணவர்களுக்கு மனப்பாடம் செய்வது மட்டுமே இலக்காக இருக்கும் நேரத்தில் அவர்களின் திறன் மேம்படவும் சுயச்சிந்தனைத் திறன் மேம்படவும் விளையாட்டுக் கல்வி, கலைக் கல்வி, கதைக் கல்விப் போன்றவற்றின் தேவையை விளக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருந்து வருகிறோம்.
பின்லாந்து, சுவிட்சர்லாந்து போன்ற மேற்கத்திய நாடுகளின் கல்வி முறையை நாமும் புரிந்து கொண்டு செயல்படுத்த வேண்டும். எப்படி தம் மாணவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும், கல்வி அளிக்க வேண்டும் என்பதுதான் ஒரு பள்ளியின் நோக்கமாக இருக்க வேண்டும். எப்படி மாணவர்களை வடிகட்ட வேண்டும் என்பதாக இருக்கக் கூடாது என்கிறார் சுவீடனில் நானோ தொழில்நுட்பம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் விஜய் அசோகன்.
மாணவர்களின் திறனை மேம்படுத்துவது போலத்தான் பின்லாந்து கல்வி முறை உள்ளதே அன்றி மாணவர்களையே மதிப்பிடுவது போல இல்லை என்கிறார் பின்லாந்தில் பணியாற்றி வரும் செந்தில்கண்ணன். சுவீடன் கல்வி முறையும் இப்படியானதாகவே உள்ளது.
“குழந்தைகளுக்கான உணவு, உடை, படிப்பு ஆகியவற்றுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு பகுதியை, சிறார் கலை இலக்கியத்துக்கும் நாம் கொடுக்க வேண்டும். நம்மையறியாமலேயே சிறாரின் எல்லையற்ற படைப்பூக்கத்தை இல்லாமற்செய்து, அவர்கள் இயல்பின் மகிமைகளை நாம் அழித்துவிடுகிறோம். இந்தியாவில் இருக்கும் ஒரே சிறார் இலக்கிய அரசு நிறுவனம், கேரளத்தின் ‘பாலசாகித்ய இன்ஸ்டிட்யூட்’ மட்டுமே. அதுபோல் தமிழகத்திலும் ஒரு சிறார் இலக்கிய அரசு நிறுவனம் அமைதல் சிறப்புமிக்கதாகும்.
பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் நவீன இலக்கியம், சிறார் கலை இலக்கியம் முக்கிய பாடப்பகுதிகளில் ஒன்றாக மாற வேண்டும். அதை நடத்துவதற்கு ஆசிரியர்கள் தகுதி பெற பயிற்சி வகுப்புகள் தேவை. “வாசிப்பு என்பது வெறும் மதிப்பெண் சமாச்சாரம் அல்ல. அது அன்புக்கும் சக மனித உறவுக்கும் சமூக, பிரபஞ்சப் புரிதலுக்குமான தோற்றுவாய்; அரசியல், சுற்றுச்சூழல், இலக்கியம், மனித வாழ்க்கை என அனைத்திலும் ஊடாடி, செல்வாக்கு செலுத்தக்கூடியது. எல்லையற்று வளரும் சாத்தியம் கொண்டது.” என்று ஒரு நேர்காணலில் யூமா வாசுகி முன்பு சொல்லியுள்ளார்.
உலக கல்வி முறையை மட்டும் அல்லாமல் உலக இலக்கிய வளங்களையும் நுட்பமாக அவதானித்து செயல்பட்ட தொடக்ககால குழந்தை எழுத்தாளர் சங்கம் மற்றும் அதன் செயப்பாடு குறித்த புரிதல், சமகாலத்தில் ஒரு சிறந்த சிறார் கலை இலக்கிய செயல்பாட்டிற்கு திறவுகோலாக அமையும் என்பது திண்ணம்.
1950-ஆம் ஆண்டு, குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் முன்முயற்சியில், குழந்தை எழுத்தாளர் சங்கம் மலர்ந்தது. இச்சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ‘வை.கோவிந்தன்’ அவர்களும், துணைத் தலைமைப் பொறுப்பை அன்றைய சிறுவர் இதழான ‘கல்கண்டின்’ ஆசிரியர் ‘தமிழ்வாணன்’ அவர்களும் ஏற்றனர். சங்கத்தின் செயலாளர்களாக, ‘அழ.வள்ளியாப்பா’ மற்றும் ‘வானதி திருநாவுக்கரசர்’ ஆகியோர்கள் பொறுப்பேற்றனர்.
குழந்தை எழுத்தாளர் சங்கம், குழந்தை இலக்கிய வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டது. சிறுவர் புத்தகக் கண்காட்சி, குழந்தை எழுத்தாளர்கள் புகைப்படக் கண்காட்சி, நாடக விழாக்கள், நூல்கள் வெளியீடு எனப் பல்வகை செயல்பாடுகளை மேற்கொண்டது. 1951-ல் சென்னையில், குழந்தை எழுத்தாளர் சங்கம், முதல் புத்தகக் கண்காட்சியை நடத்தியது.
1956-ஆம் ஆண்டு டில்லியில், ‘சாகித்திய அகாதெமி’ ஏற்பாடு செய்த அனைத்திந்திய புத்தகக் கண்காட்சி, 1959-ஆம் ஆண்டு கொழும்பு நகரில் ‘இலங்கை குழந்தை எழுத்தாளர் சங்கம்’ ஏற்பாடு செய்த அனைத்துலக புத்தகக் கண்காட்சி, 1961-ஆம் ஆண்டு ‘பம்பாய் தமிழ்ச் சங்கம்’ நடத்திய குழந்தை புத்தகக் கண்காட்சி போன்ற பல்வேறு புத்தகக் கண்காட்சிகளில் குழந்தை எழுத்தாளர் சங்கம் பங்கேற்று தமிழ் குழந்தைப் புத்தகங்களை காட்சிப் படுத்தியது.
“கருத்துக்களைக் காட்சிப்படுத்தும் சக்தி வாய்ந்த கலையினால்தான், அதுவும் நாடகம், திரைப்படம் ஆகிய கலைககளினால்தான் பண்பாட்டு விழுமியங்கள் வளரும் ” என்ற மாபெரும் நாடகக் கலைஞர் அவ்வை டி.கே. சண்முகத்தின் வார்த்தைகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டது குழந்தை எழுத்தாளர் சங்கம். 1955-ஆம் ஆண்டு குழந்தைகள் நாடக விழாவை நடத்தியது. ஒரு மணி நேரம் கொண்ட குழந்தைகளுக்கான, நிகழ்த்துக்கலையான நாடகங்கள் ஆறு சிறுவர் குழுவினரால் மேடை கண்டன.
நேரு மகானின் பிறந்த தினத்தை 1957-ஆம் ஆண்டு முதல் குழந்தை இலக்கியத் திருநாளாக, குழந்தை எழுத்தாளர் சங்கம் நடதத் தொடங்கியது. குழந்தைப் புத்தகங்கள் வெளியீடு காணத் தொடங்கின. 1979-ஆம் ஆண்டு ஒரே நாளில் 77 குழந்தைகளுக்கான நூல்கள் வெளியீடு கண்டன. பிற மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் உள்ள அறிஞர் பெருமக்கள், தமிழ் குழந்தை எழுத்தாளர்களை அறிந்து கொள்ளும் வகையில், “who’s who of Tamil Writers for Children” எனும் நூலை வெளியிட்டது. மேலும் அச்சிடப்பட்ட நூல்களுக்கே பரிசுகள் வழங்கப்பட்டு வந்த நாட்களில், குழந்தைகளுக்கான படைப்புகளின் கையெழுத்துப் பிரதிகளுக்கு பதக்கங்கள், பரிசுகள் வழங்கிப் புதுமையைப் புகுத்தியது குழந்தை எழுத்தாளர் சங்கம்.
குழந்தை எழுத்தாளர் சங்கம், எட்டு இலக்கிய மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இம்மாநாட்டு அரங்கங்களில் பெருமைமிகு நிகழ்வாக அந்நாட்களில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, ஆளுநர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், சான்றோர்கள் என பன்முனை ஆளுமைகளின் குரல்கள் ஒலித்தன.
1976-ஆம் ஆண்டு கிண்டி ஆளுனர் மாளிகையில், அன்றைய பாரதக் குடியரசுத் தலைவர் ‘பக்ருதீண் அலி’ தலைமையில் ‘குழந்தை எழுத்தாளர் சங்கம்’ தன் வெள்ளி விழாவைக் கொண்டாடியது. 1957 முதல் 1991 வரை மொத்தம் 783 நூல்கள் ‘குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் மூலமாக வெளிவந்துள்ளது.
இடைப்பட்ட காலத்தில் ஒரு தொய்வு ஏற்பட்டிருந்தாலும் குழந்தை எழுத்தாளர் சங்கம் செயல்பட்ட பொற்காலம் மீண்டும் தற்சமயம் திரும்பத் தொடங்கி இருப்பது மகிழ்ச்சிக்குரியது. தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் தமிழகம் எங்கும் முப்பதிற்கும் மேற்பட்ட கிளைகள் விரித்து சிறப்பான செயல்பாட்டில் தன்னை ஈடுபடுத்தி வருகிறது. பல்வேறு தனிப்பட்ட அமைப்பினர்களும் சிறார்களுக்கான செயல்பாட்டில் தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள். முன்பு குழந்தை எழுத்தாளர் சங்கம் என்று அழைக்கப்பட்டதன் சாராம்சத்தைக் கொண்டே இன்றைய சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் செயல்படுகிறது.
பாடப்புத்தகங்கள் தாண்டிய வாசிப்பு குழந்தைகளின் உலகத்தை விசாலமாக்கும்; அறிவை ஆழமாக்கும். அந்த வகையில் குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்தவும் மதிப்பீடுகளைக் கடத்தவும் தமிழ்நாடு அரசு சார்பில் ‘இளந்தளிர் இலக்கியத் திட்டம்’ சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 5-8 வயது வயது வரையிலான குழந்தைகளுக்கு 100-150 சொற்களிலான கதைகள், 9-11 வயது வயது வரையிலான குழந்தைகளுக்கு 500 சொற்களிலான கதைகள், 12 – 14 வயதுவரையிலான குழந்தைகளுக்கு அதிகபட்சமாக 750 சொற்களிலான கதைகள் ஆகியவைகளை தனித்தனி நூல்களாக வெளியிடப்பட்டன. முதல்கட்டமாக வெளியீடு கண்ட இவ்வகையிலான 119 நூல்கள் 48-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி, 2025–யில் காட்சிப்படுத்தப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றன. ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக, வயது வாரியாக சிறார் நூல்களை வெளியிட்ட இம்முயற்சி பெரும் பாராட்டுக்குரியதாகும். மேலும் நூற்றாண்டு காணும் ஆளுமைகள் வரிசையில் குழந்தைக் கவிஞர் ‘அழ.வள்ளியப்பா’ நினைவுத்தடம், திரு.முத்தையா வெள்ளையன் அவர்களால் தொகுக்கப்பட்டு, 848 பக்கங்களில் கெட்டி அட்டை பைண்டிங்கில் வெளியீடு கண்டது.
இவைகள் மட்டுமே போதுமானதில்லை.
* தமிழக அரசின் ஆதரவுடன் சிறார் புத்தக டிரஸ்ட் நிறுவப்பட வேண்டும்.
* ஒவ்வொரு பெரிய நகரங்களிலும் சிறுவர் கலையரங்கம் நிறுவப்பட வேண்டும். சிறுவர் கலை விழாக்கள் தொய்வில்லாமல் நடைபெற ஆவண செய்யப்பட வேண்டு.
* சிறார் நூல்களுக்கான புத்தகக் கண்காட்சி சென்னையில் ஆண்டுதோறும் நடைபெற வேண்டும். சிறார் எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள், பதிப்பகத்தார்கள் கௌரவிக்கப்பட வேண்டும்.
* சிறார் நூல்கள் வெளியிட அரசு உதவித் தொகை வழங்க வேண்டும்.
* பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் நவீன இலக்கியம், சிறார் கலை இலக்கியம் முக்கிய பாடப்பகுதிகளில் ஒன்றாக மாற வேண்டும். அதற்கான ஆசிரியர்கள் தகுதி பெற, பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
* சிறார் நூல்களை வெளியிடவும் அதை சிறார்களிடம் கொண்டு சேர்க்கவும் அரசு பதிப்பகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
* மாஸ்கோவில் இருப்பது போல் தமிழகத்திலும் சிறார்களுக்கான அரங்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். உலக கலை இலக்கியங்களை திறந்து காட்டும் வாயிலாக அது செயல்பட வேண்டும்.குழந்தைகளுக்கு அழகியலை கற்பிக்கும் அரங்கமாகவும் இது செயல்பட வேண்டும்.
* சிறார்களுக்கான இசை – நாட்டிய நாடகங்களை சிறார்களே எழுதி நடத்துவதற்கான வழிகாட்டுதல்களைக் கொடுக்க வேண்டும். அதற்கான மேடை அமைத்துக் கொடுக்க வேண்டும்.
* இரண்டு முதல் நான்கு வயதிலான குழந்தைகளின் மனவளர்ச்சிக்கும், படைப்பூக்கத்திற்கும், ரசனையை வளர்ப்பதற்குமான அரசு பாலர் பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும். குழந்தைகளிடம் இருக்கும் அதிசய சக்திகளை கண்டுபிடிக்கும் வகையில் இப்பள்ளிகள் செயல்பட வேண்டும்.
2024-ல் இளந்தளிர் இலக்கியத் திட்டத்தின் கீழ் ‘மகிழ் – பதின் படைப்பாளர் படைப்பரங்கு மூன்று நாட்கள் சென்னையில் நடைபெற்றது. இது ஒரு சீரிய முயற்சி. தொடர வேண்டும்.
இறுதியாக, தங்களை முன்னிறுத்திக் கொள்ளாமல் சிறார்களுக்கான செயல்பாட்டை முன்னிறுத்தி அனைத்து சிறார் செயல்பாட்டாளர்களும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். நம் சமூகத்தின் கூட்டுப் பிரக்ஞை உணர்வு மேலோங்கி இருக்க வேண்டும். குழு மனப்பான்மை இல்லாத மெய்யான உணர்வுச் செயல்பாடே சிறார் கலை இலக்கியத்தில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கும்.
தமிழில் சிறார் இலக்கியம் சிறகு விரித்திருப்பது மகிழ்ச்சியே; ஆனாலும் அச்சிறகுகள் பிற மொழிகள், உலக செயல்பாடுகள் ஆகிய எல்லையற்ற எல்லையைத் தொட வேண்டும். அதற்கான கூட்டு உழைப்பில் நாம் ஈடுபட வேண்டியது காலம் நம்முன் நிறுத்தியுள்ள கடமை மற்றும் பொறுப்பாகும். அரசு மற்றும் பிற தனிப்பட்ட செயல்பாட்டாளர்களின் பங்களிப்பைவிடவும் மிக முக்கியமான ஒன்று தமிழ் சிறார் எழுத்தாளர்களின் படைப்பாளுமை.
இன்றைய காலகட்டத்தில் அதிகமான சிறார் எழுத்தாளர்களின் பங்களிப்புகளால் தமிழ்ச்சிறார் இலக்கியம் நம்பிக்கையான திசையில் பயணிக்கிறது. என்றாலும் உன்னதங்களை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் இங்கே மேலும் மேலும் வலுப்பட வேண்டும்.
சமீபத்தில் சிறார் இலக்கிய கூட்டம் ஒன்றிற்கு வந்திருந்தார் நவீன இலக்கியத்தின் நம்பிக்கைதரும் படைப்பாளி ஒருவர். நிகழ்வில் அவர் முன் வைத்த கேள்வி முக்கியமாகப்படுகிறது.
“பிரெஞ்சு எழுத்தாளர் எக்சுபெரியின் ‘குட்டி இளவரசன்’ போன்றோ நார்வே எழுத்தாளர் யொஸ்டைன் கார்டெரின்’சோஃபியின் உலகம்’போன்றோ தமிழில் சிறார் நாவல்கள் ஏன் வரவில்லை?”
குழந்தைகள் புத்தகம் என்று அடையாளப்படுத்தப்படும் ‘குட்டி இளவரசன்’ நாவல் வாழ்வின் ஆழமான உண்மைகளை எடுத்துச் சொல்கிறது. குட்டி இளவரசன் கேட்கும் கேள்விகள் தத்துவார்த்தமானவை. வாழ்வின் புதிர்தன்மையையும் அபத்தத்தையும் விவரிப்பவை. உலக ரகசியங்களை எளிமையாக நம்மை நெருங்கச் செய்பவை.இயற்கை மனிதனுக்கு என்னவெல்லாம் தந்திருக்கிறது. அதை மனிதர்கள் எப்படி கண்டுகொள்ளாமல் சிதைக்கிறார்கள் என்பதையே இந்நாவல் விவரிக்கிறது
பதினான்கு வயதுச் சிறுமி சோஃபிக்குள் எழும் கேள்விகளும் அதற்கான விடைதேடலும்தான் ‘சோஃபியின் உலகம்’. ஒரு நாவலின் சுவாரசியத்தோடு எழுதப்பட்ட இந்நூலில் மனிதனின் ஆதிகால நம்பிக்கைகள் முதல் தத்துவமேதைகளாகிய சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், ஹ்யூம், ஹெகல், மார்க்ஸ், லெனின், சார்த்தர், டார்வின், ஃப்ராய்டு என உலகத் தத்துவவாதிகள், கலிலியோ, கோபர்நிகஸ் எனும் வானவியலாளர்கள், நியூட்டன் போன்ற அறிவியல் விஞ்ஞானிகள், ஒற்றைப் பெருவெடிப்பைப்பற்றிப் பேசும் நவீன அறிவியலாளர்கள் வரை அனைத்து சிந்தனைகளும்வரை அறிமுகமாகின்றார்கள். 1950, 60-களில் தத்துவம் ஒரு கட்டாயக் கல்லூரிப்பாடமாக இருந்து வந்துள்ளதையும் அதுவே இன்று தேர்ந்தெடுத்து கற்கப்படும் ஒரு துறையாக மாறியுள்ளது என்பதையும் இந்நூலின் முன்னுரையின் வழியாக அறிய முடிகிறது.
2009 ஆம் ஆண்டில், ஸ்வீடன் ஒரு புரட்சிகரமான கல்வி சீர்திருத்தத்தை மேற்கொண்டது. பாரம்பரிய பாடப்புத்தகங்களை வகுப்பறைகளில் கணினிகள் மற்றும் டிஜிட்டல் கருவிகளால் மாற்றியது. இந்த துணிச்சலான முயற்சி நாட்டின் கல்வி முறையை நவீனமயமாக்குவதையும், அதிகரித்து வரும் டிஜிட்டல் உலகத்திற்கு மாணவர்களை தயார்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது. இருப்பினும், 15 ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்வீடிஷ் அரசாங்கம் தனது உத்தியை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, பள்ளிகளில் காகிதப் பாடப்புத்தகங்கள் இப்போது மீண்டும் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
கணினிகள் மற்றும் டிஜிட்டல் கருவிகளின் பயன்பாட்டால் மாணவர்களின், வாசிப்பு மற்றும் எழுதுதல் போன்ற அடிப்படைத் திறன்கள் சரிவு கண்டன; மேலும் நினைவாற்றல் திறனிலும் குறைபாட்டை அடைந்தனர். ஸ்வீடிஷ் ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வு, ‘அதிகப்படியான திரை நேரம் மாணவர்களின் சிக்கலான நூல்களை திறம்பட புரிந்துகொள்ளும் திறனைத் தடுக்கின்றன’ எனும் உண்மையை வெளிச்சப்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் ஸ்வீடன், பாரம்பரிய கற்றல் முறைகளுக்கு மீண்டும் திரும்பும் முடிவிற்கு வந்துள்ளது. நூல் வாசிப்பு மாணவர்களின் அறிவாற்றலையும், படைப்பூக்கத் திறனையும் மேம்படுத்தும் என்ற உண்மையைத்தான் ஸ்வீடன் அரசின் கல்வி சீர்திருத்தம் நமக்கு உணர்த்துகிறது.
சமகாலத்தில், தமிழக அரசு மாணவர்களுக்கான நூல் வாசிப்பு இயக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் செயல்படுகிறது. இது வரவேற்று கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாகும். வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்படும் நூல்களை சிறார்களுக்குப் பெரியவர்கள் அடையாளம் காட்ட வேண்டும். அதற்கான திறனைப் பெற்றவர்களாக பெரியவர்கள் இருக்க வேண்டும். நம் சூழல், குழந்தைகள், சிறார்கள், வளரிளம் பருவத்தினர் மற்றும் வளர்ந்த பெரியவர்கள் என அனைவரிடமும் வாசிப்பு ‘பிரக்ஞை’யை எதிர்நோக்கி நிற்கிறது. வழிகாட்டலுக்கு அரிதாக, சிலர் மட்டுமே உள்ளனர்.
‘நித்ய சைதன்ய யதி’ அவர்களின் மூல நூலினை, தமிழ் மொழியில் “சின்னச் சின்ன ஞானங்கள்” என சாகித்திய அகாதெமி விருதாளர் ‘யூமா வாசுகி’ நமக்கு அளித்துள்ளார்.
“குழந்தைகளின் படைப்பாற்றல்” குறித்து ‘ஈஸ்ட் வெஸ்ட்’ பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலுடன் ‘சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தில்’ ஆய்வு செய்த “ஜோஸி” எனும் “ஜோஸலைன் வாரன்ஸரஸீனோ” சொல்வது “சின்னச் சின்ன ஞானங்கள்” நூலில் மிக முக்கிய பதிவாகும். “கதை சொல்வது, கதை உருவாக்குவது, கவிதை எழுதுவது, ஓவியம் வரைவது ஆகிய திறமையெல்லாம் பெரும்பான்மையான குழந்தைகளிடம் உள்ளது. ஊக்கப்படுத்தினால் பெரும்பான்மையான குழந்தைகளிடம் இருந்து இது போன்ற திறன்களை வெளிக்கொணராம்”. ஒரு ஆய்வு ஆசிரியரின் இக்கருத்து நம் தேசத்து கல்வியியல் அறிஞர்களின் கருத்தோட்ட அடித்தளத்தில் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்கும் என்பது உறுதி.
இந்நூலில் பெரியவர்கள் படிக்க வேண்டிய தமிழ் எழுத்தாளர்களில் சிலரை பட்டியலிட்டுள்ளார் ‘யூமா வாசுகி’. மகாகவி பாரதி தொடங்கி, மணிக்கொடி எழுத்தாளர்கள் தொடர, சமகால எழுத்தாளர்கள் ஜெயமோகன், பெருமாள் முருகன் வரை இதில் இடம்பெற்றுள்ளனர். இன்றைய பெண் சிறார் எழுத்தாளர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய எழுத்தாளர்கள் என சு. தமிழ்செல்வி, ஹெப்ஸிபா ஜேசுதாசன், ஆர். சூடாமணி, அம்பை, ஸெல்மா லாகர்லேவ் ஆகிய சிலரை குறிப்பிடலாம். உலக சிறார் இலக்கிய நூல்களின் சிறு பட்டியலையும் “சின்னச் சின்ன ஞானங்கள்” நூலில் கொடுத்துள்ளார் ‘யூமா வாசுகி’.
ஆகவே சிறார்களோடு இணைந்து பெரியவர்களும் தேர்ந்த வாசிப்பிற்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லா “குழந்தையும் மேதைதான்” என ஒரு சொற்றொடர் உண்டு. கற்பனை விரிவையும் மொழி வளமையையும் உருவாக்கும் கதைகளே, நல்ல சிறுவர் கதைகள். தமிழ் சிறார் கலை இலக்கியப் படைப்பாளிகள் செயல்பாட்டாளர்கள் இதை மெய்யான அர்த்தத்துடன் உணர்ந்து செயல்பட வேண்டும். ஒரு மொழியின் மிகச்சிறந்த எழுத்தாளன்தான் அங்குள்ள குழந்தைகளுக்கான படைப்பாளியாக மாற முடியும் என்பார்கள். கி ராஜநாராயணன் எழுதிய ‘பிஞ்சுகள் ‘ என்ற குறு நாவல்தான் தமிழில் தீவிர இலக்கியவாதியால் எழுதப்பட்ட முதல் குழந்தை இலக்கியம் ஆகும் . ஒரு பயிரங்கில் மூத்த எழுத்தாளர் ச. தமிழ்செல்வன் அவர்கள் இரண்டு சிறுகதைகளை மொழி வளத்திற்கு உதாரணமாகச் சொன்னார். ஒன்று பிரபஞ்சனின் ‘மரி என்றொரு ஆட்டுக்குட்டி’. மற்றொன்று பூமணியின் ‘கோலி’.
வாண்டுமாமா அவர்கள் குழந்தைகள் விரும்பும் மந்திரக் கதைகள் மட்டுமல்லாது அறிவியல் நூல்களையும் எழுதும் வல்லமை பெற்றவர். வாண்டுமாமா, அழ.வள்ளியப்பா ஆகிய ஆளுமைகளின் படைப்பு எல்லைகளை இன்னும் நாம் கடக்கவில்லையோ? என்கிற சந்தேகம் எழுகிறது.
குழந்தைமையை இழந்துவிடாத ‘பஷீரின்’ கதைகள், ஸ்காண்டிநேவிய இலக்கியத்தின் மேன்மையை வெளிப்படுத்திய ‘ஸெல்மா லாகர்லே’வின் ‘விரோதி’, ‘தேவமலர்’ போன்ற படைப்புகள், வங்க எழுத்தாளர் ‘அதீன் பந்தோபாத்யாயா’வின் ‘நீலகண்டப் பறவையைத் தேடி’, பிரெஞ்சு எழுத்தாளர் ‘எக்சுபரி’யின் ‘குட்டி இளவரசன்’, போன்ற எழுத்துக்களை உணர்ந்து படித்த ஒருவரால் மட்டுமே ‘அண்டரண்டப் பட்சியின்’ சிறகுகளைப் பெற முடியும்.
சிறார் மொழியின் அடர்த்தியையும், அழகியலையும், கதா உத்தியையும், குழந்தைகளின் உளவியலோடு கலந்து ஒரு பிரதி உருவாகும் போது அது தமிழ் சிறார் இலக்கிய உலகில் ஒரு புது உண்மையான சிறார் படைப்பாக அடையாளம் கொள்ளும்; கனவினை சொல்லும் கலை பூரணத்துவம் பெற்ற அப்பிரதி “லூயி கரோலின்’ உருவாக்கிய ‘ஆலிஸின் அற்புத உலகம்’ போன்று தமிழ் சிறார் இலக்கியத்தில் நிலைத்து நின்று பேசப்படும் இலக்கிய படைப்பாக அமையும் என உறுதியாகச் சொல்லலாம். அதுவே சிறார் இலக்கிய சிறகுகள் விரிய வேண்டிய திசை.
- துரை. அறிவழகன்
குறிப்பு: தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் “சிறார் இலக்கியக் கருத்தரங்கம் – 2025” எனும் தலைப்பில் கட்டுரைகள் பெறப்பட்டன. அவற்றுள் தேர்வான கட்டுரைகள், ஏப்ரல் 2025 நடைபெற்ற மாநிலச் சந்திப்பில் வாசிக்கப்பட்டது.

