சிறார் இலக்கிய முன்னோடி குறிஞ்சிச்செல்வர் கொ.மா.கோதண்டம் மறைவு – த.சி.எ.க.ச. அஞ்சலி
எழுத்தாளர், சிறார் இலக்கிய முன்னோடியான கொ.மா. கோதண்டம் அவர்கள் புதினம், சிறுகதை, நாடகம், கவிதை, கட்டுரை என 95 நூல்களை எழுதியுள்ளார். இவரது முதல் நூலான “ஆரண்ய காண்டம்” குடியரசுத் தலைவர் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. 2022 ஆம் ஆண்டில், தமிழ்நாடு அரசு வழங்கும் “இலக்கிய மாமணி” விருதையும் பெற்றுள்ளார். மேலும், இவரது படைப்புகள் அனைத்தும் தமிழ்நாடு அரசால் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன என்பது பெருமைக்குரியது.
இவரது சிறார் இலக்கிய நூலான “காட்டுக்குள்ளே இசைவிழா” 2012 ஆம் ஆண்டுக்கான பால சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளது. அவர் உருவாக்கிய ‘நீலன்’ என்ற கதாப்பாத்திரத்தின் வழியே வன அனுபவங்களையும் இயற்கைச் சிறப்புகளையும் சிறார் இலக்கியத்தில் பதிவு செய்தவர். இவர் வாழ்ந்த இராஜபாளையம் நகரில், மணிமேகலை மன்றம் என்ற அமைப்பின் வழியே கடந்த ஐம்பது ஆண்டுகளாகச் சமூகப்பணி செய்து வந்துள்ளார்.
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர் சங்கம் தொடங்கிய காலம் முதலே அதன் பல்வேறு பணிகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்தவர். அவர் மாநில உறுப்பினராகவும், இராஜபாளையம் தசிஎகச கிளையின் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றியவர். இவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஒரு பெரிய இழப்பாகும்.
அவரது துணைவர் திருமதி ராஜேஸ்வரி அவர்களுக்கும், மகன் சிறார் எழுத்தாளர் கொ.மா.கோ. இளங்கோ (தசிஎகச செயற்குழு உறுப்பினர்) அவர்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
குறிஞ்சிச்செல்வர் கொ.மா. கோதண்டம் அவர்களின் மறைவிற்கு, தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் சார்பாக
கண்ணீர் அஞ்சலியையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
- தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்


