முன்னுரை
இவ்வுலகின் உயிர்ப்புக்கு மிக முக்கிய காரணம் மொழி கண்டுபிடிக்கப்பட்டதே. மொழியினும் எழுத்து வடிவம் கண்டுபிடிக்கப்பட்டதே நாகரிகம் தொடர்ந்து வளர்ந்து இன்றைக்கு செயற்கை நுண்ணறிவாய் இயந்திர மொழியோடு இயங்கி கொண்டிருக்கிறது. இந்த எழுத்து வடிவ மொழியால் படைக்கப்படும் இலக்கிய வகைமைகள் பலவாய் அமைந்திருப்பதை காண முடிகிறது. அவ்வகையில் சிறார் இலக்கிய வகையும் தோன்றி தழைத்து வருகிறது. எனினும் பெரியோருக்கான இலக்கிய வகைமைகள் போல சிறாருக்கான இலக்கிய வகைமைகள் பல்கி பெருகி வேரூன்றவில்லை என்பதை அறிய முடிகிறது. இதற்கான காரணம் வளர்க்கும் பெற்றோரா, பள்ளிகளா, சமூகம் எனப்படும் அரசா என்பதை ஆய்ந்து கண்டறிவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இத்தலைப்பானது சிறார் இலக்கியம் பள்ளிக்குள் செல்வதில் உள்ள சிக்கல்களை குறித்து ஆராய்வதாகவே அமைந்துள்ளன. ஆனால் உண்மையில் பள்ளிகளே கூட சிக்கலை ஏற்படுத்தும் இடத்தில் இருக்கலாம் என்ற அடிப்படையில் ஆய்வை அலச வேண்டியதும் அவசியமாகிறது.
யார் சிறார்
சிறார்கள் எனப்படுபவர் யார் என்பதை அறிந்தாலே சிறாருக்கான இலக்கியம் எது என்பதை அறிய முடியும். அவ்வகையில் பார்ப்போமேயானால் பல்வேறு அறிவியல் அறிஞர்களும், தத்துவவாதிகளும் சிறார் என்பதற்கு பல்வேறு வயது நிலையை குறிப்பிடுகின்றனர். இலக்கிய வகைமை சார்ந்தும் சிறார் வயது மாறுபடலாம் என்கின்றர். அதாவது பாடலை 3 வயதில் இருந்தே கற்று கொடுக்க முடியும், கட்டுரையை 8 வயதிற்கு பிறகு, நாடகத்தை எட்டு வயதிற்கு பிறகு, பேச்சாற்றலை 5 வயது முதல் என வகைப்படுத்துவதை அறிய முடிகிறது. பொதுவாக சிறார்களை 00-03 வயதினர் குழந்தைப் பருவம், 03-05 வயதினர் முன்பிள்ளைப் பருவம், 05-11 வயதினர் பிள்ளைப் பருவம், 11-15 வயதினர் முன்குமரப் பருவம், 15-18 வயதினர் குமரப் பருவம் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
எனினும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படியும், ஐக்கிய நாடுகள் சபையின் படியும் சிறார் என்பவர் 0-18 வயது வரை உள்ளவர்கள் என அறிய முடிகிறது.
எது சிறார் இலக்கியம், எப்படி தோன்றியது
எந்த ஒரு இலக்கிய வகைமையும் நாட்டுப்புற இலக்கியங்களில் இருந்தே தோன்றியிருக்கிறது. வாய்மொழி இலக்கியங்களாய் இருந்து பின்னர் எழுதப்பட்ட இலக்கிய வகைமையாய் வளர்ந்திருப்பதைக் காண முடிகிறது. அவ்வகையில் சிறார் இலக்கியமும் நாட்டுப்புற இலக்கியங்களில் இருந்தே தோன்றியிருக்க வேண்டும். சிறுவர்களுக்காக சிறுவர்களே படைப்பதும், சிறுவர்களுக்காக பெரியவர்கள் படைப்பதும் சிறார் இலக்கியம் எனப்படுகிறது. அதே போல் நீதிக்தைகள், அறநெறி போதனைகள் தவிர்த்து சிறார்களின் மகிழ்ச்சி, ஆர்வம், கொண்டாட்டத்திற்கும் அவை இடம் அளிப்பதாக அமைபவை சிறார் இலக்கியம் எனப்படுகிறது.
”சிறுவர் இலக்கியம் உள்ளத்தைப் பண்படுத்தி அறிவூட்டுவதாக இருக்க வேண்டும். விவேகத்தைத் தருவதாக இருக்க வேண்டும். வேற்றுமை, பகைமை முதலிய தீமை சேராததாக இருக்க வேண்டும். கற்பனையைத் தூண்டிச் சிந்தனையைப் பெருக்குவதாக இருக்க வேண்டும். மனத்துக்கு மலர்ச்சியையும் மகிழ்ச்சியையும் தருவதாக இருக்க வேண்டும். மனிதப் பண்புகளைச் சிறக்கச் செய்வதாய் இருக்க வேண்டும். ஆற்றலையும் தீரத்தையும் நேர்மையையும் நெஞ்சுறுதியையும் வளர்ப்பதாக இருக்க வேண்டும். இறையுணர்ச்சியையும் தன்னம்பிக்கையையும் தருவதாக இருக்க வேண்டும்”1 இதுவே சிறார் இலக்கியம் என்கிறார் குழந்தை எழுத்தாளர்அஆர். வி.
“காலத்தால் அலசப்பட்டுத் தெளிந்தெடுக்கப்பட்ட அறச்சான்றுகளையே நேரடியாகவோ, மறைமுகமாகவோ பொருத்திச் சிறுவர் இலக்கியம் படைப்போமானால் வருங்காலச் சமுதாயம் நம் நாட்டைக் பொன்னாடாக மாற்றிவிடும் என்பது உறுதி. நீதியை – நெறியை எழுத வேண்டும். அது அப்பட்டமான நீதியுபதேசமாகத் தோன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.”2 என்கிறார் நாரா. நாச்சியப்பன்.
சிறார் இலக்கியத்தின் தோற்றம் குறித்து ஆயும்போது வாய்மொழி இலக்கியத்திலிருந்து தோன்றியிருக்கலாம் என்பதை தெளிவாய் உணர முடிகிறது. உதாரணமாக மழை வருது மழை வருது…. ஒரு குடம் தண்ணீ ஊத்தி…. போன்றவற்றை குறிப்பிடலாம். இதனை குழந்தை எழுத்தாளர் நாரா. நாச்சியப்பன் அவர்கள் “தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் என்று கருதப்பட்ட சங்க காலத்திலோ, அதற்குப் பின்னதோ, இடைக்காலத்திலோ, மேற்கத்திய இலக்கியங்களின் தாக்குதல் ஏற்பட்ட வெள்ளையர் ஆட்சிக் காலத்திலோ சிறுவர் இலக்கியம் அல்லது குழந்தைகள் இலக்கியம் என்று ஒரு தனிப்பிரிவு இருக்கவில்லை. அந்தச் சிந்தனையே ஏற்பட்டதில்லை. தொடக்க காலத்தில் இலக்கியம் படைத்தவர்கள் யாரும் சிறுவர்களுக்கென்று தனியாக இலக்கியம் உருவாக்க வேண்டும் என்று கருதவில்லை. பள்ளிக்கூடம் நடத்தியவர்களும், பாடப்புத்தகம் தொகுத்தவர்களும்தாம் சிறுவர்களுக்குப் பயன்படுத்தத்தக்கவை எவை என்று தேடினார்கள். அவர்களும் சிறுவர்களுக்கென்று தனிப்படைப்புகள் வேண்டும் என்றோ நினைத்துப் பார்க்கவில்லை. அவர்கள் நடப்பில் இருக்கின்ற இலக்கியங்களில் சிறுவர்களுக்கு ஏற்றவை எவை என்று தேடிப்பிடித்துத் தங்கள் தொகுப்புகளில் சேர்த்துக் கொண்டார்கள். இப்படி தேர்ந்தெடுக்கும்போது, பெரியவர்கள் பிள்ளைகளுக்கு சொல்லித் தரவேண்டியது நீதி ஒன்றுதான் என்று அக்காலத்தில் கருதினார்கள்.”3 என்ற நாரா. நாச்சியப்பன் அவர்களின் கருததில் இருந்து வாய்மொழி இலக்கியத்திற்கு பின்னார் சிறுவர் இலக்கியமானது வாய்மொழியாய் வளர்ந்து நீதி நூல்கள் அற நூல்கள் வழியாக வளர்ச்சி பெற்று பின்னர் தனித்த துறையாக வளர்ந்தது என்பதை அறிய முடிகிறது.
சிறுவர் இலக்கியங்களும் பெரியோர் இலக்கிய வகைமைகளைப் போலவே பல்வேறு வகைகளைக் கொண்டுள்ளது. அவை “தன் பிற்கால வளர்ச்சிக்கேற்ப பாடல், கதை, கட்டுரை, நாடகம், திரைபடம், பத்திரிகை முதலிய பல பகுதிகளாகப் பல்கிப் பெருகியுள்ளது”4 என்கிறார் சிறார் இலக்கிய எழுத்தாளர் பூ வண்ணன் அவர்கள். இவை தவிர்த்து விடுகதை, கதைப்பாடல், சித்திரக்கதைகள், நாவல்கள் என கிளை பிரிவுகளையும் கொண்டு இயங்குகிறது சிறார் இலக்கியங்கள்.
சிறார் இலக்கியத்தின் தேவை
சிறார்கள் மிகுந்த நாடாக இந்தியா விளங்குகிறது. உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடாகிய இந்தியாவில் “18 வயதிற்கு கீழ் 472 மில்லியன் குழந்தைகள் உள்ளனர் என்பதும் இதிலும் தமிழ் நாட்டில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை என்பது இதில்22.29 சதவிதம்”5 என்கிறது அரசு குறிப்பு. இது சிறார் இலக்கியத்தின் தேவையை நமக்கு உணர்த்துகிறது.
‘சிறுவர்களுக்கு நல்ல உணவு அளித்து, உடையளித்து, ஒழுக்கங்களைக் கற்பித்து கல்வியறிவு பெறச் செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் அக்கறையுடன் கவனித்துச் செய்யாவிட்டால் சிறுவர்கள் மனிதர்களாகலாம். ஆனால் நல்ல குடிமக்களாக, வருங்கால உலகை வாழ்விக்கும் சான்றோர்களாக திகழ முடியாது”6 என்கிறார் பூவண்ணன். எனவே சிறார்கள் மீது அக்கறை செலுத்த வேண்டியது நமது கடமையாகும். எனவே அதிக அளவில் சிறார் இலக்கியங்கள் படைக்கப்படுவதும் படிக்கப்படுவதும் அவசியமான ஒன்றாகும்.
சிறார் இலக்கியம் சிறார்களிடம் செல்வதில் உள்ள சிக்கல்கள்
சிறார் இலக்கியம் சிறார்களிடம் செல்வதில் பல்வேறு நிலைகளில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. அந்த நிலைகளைக் கொண்டு 5 வகையாக பிரிக்கப்படுகிறது. அவை
- சிறார்களிடம் உள்ள சிக்கல்கள்
- பெற்றோர்களிடம் உள்ள சிக்கல்கள்
- பள்ளிகளில் ஏற்படும் சிக்கல்கள்
- சமூகம்/ அரசு சார்ந்த சிக்கல்கள்
- படைப்பாளர் சார்ந்த சிக்கல்கள்
எனலாம்.
சிறார்களிடம் உள்ள சிக்கல்கள்
- தனது விருப்பத்தை சில நேரங்களில் சரியாக தேர்ந்தெடுக்க இயலாமை ஏற்படலாம்.
- பெற்றோர்களின் திணிப்பு விருப்பத்தை முடிவு செய்யலாம்.
- பெற்றோர்களை சாரந்தே இயங்க வேண்டி உள்ளதால் அவர்களின் ஒத்துழைப்பு தேவைபடலாம். (எங்கு செல்லவும்)
- நவீன ஊடகத்தின் அடிமைத்தனத்தால் இலக்கியங்களோடு இயங்க முடியா நிலை ஏற்படலாம். (புலனம், முகநூல், படவரி, வலையொளி)
- விளையாடும் வாய்ப்பு குறைந்து வருவதும் அவர்களின் முக்கிய சிக்கலே.(வகுப்பறை தாண்டி ஒத்த சிறார்களோடு விளையாடும் வாய்ப்பு மிகவும் குறைவு. அப்படி விளையாடினாலும் அவை கிரிக்கேட், செஸ், என்று அதுவும் இன்னொரு அழுத்தம் தரும் ஒன்றாகவே சிறார்களிடம் மாறி நிற்பதைக் காண முடிகிறது)
- புத்தகம் வாங்க வேண்டும் என்றாலும் பெற்றோர் தேர்ந்தெடுக்கும் புத்தகத்தையே வாங்க வேண்டி வரலாம்.
“படிக்கத் தெரியாத குழந்தை புத்தகத்தை வைத்துக் கொண்டு விளையாடத் தொடங்கும். உடனே “அப்படிச் செய்யக் கூடாது” என்று சிலர் தடுப்பதுண்டு. அது தேவையன்று. குழந்தைகளைப் புத்தகங்களுடன் விளையாட விட வேண்டும். முதலில் விளையாடும் குழந்தைதான் பிறகு விரும்பிக் படிக்கும். படிக்கும் பழக்கம் ஏற்படக் குழந்தைகளைப் புத்தகங்களுடன் பழக விட வேண்டும்”7என்றும் மேலும்
“எதைக் கற்கவும் ஏற்ற பருவம் இளமையே! மொழியைப் பொறுத்த வரையில் ஒருவன் சிறுவனாக இருக்கும்போது கற்கும் அறிவே பெரிது என்று மொழி நூல் அறிஞர்கள் கூறுகின்றனர். இளமையில் கற்பது எளிதில் மனதில் பதியும்; பெரியவர்களாக மாறிய பிறகும் மறக்காமல் இருப்பவை இளமையில் கற்றவையே.
இதனால்தான் “இளமையில் கல்” என்று புலவர்கள் கூறிச் சென்றனர். இளமையில் கற்கத் தவறுபவன் முதுமையில் கற்பது அரிது. கற்றல் என்பது வெறும் எழுத்தறிவை மட்டும் குறிக்கவில்லை; அது நற்பண்பையும் குறிக்கிறது. படிப்பையும் பண்பையும் இளமையில் பெறவில்லையேல் வாழ்க்கை பயனற்றதாகும். நல்லொழுக்கத்தை இளமையில் பயின்றால் அது இறக்கும் வரை இருக்கும். இதைத்தான் “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்னும் பழமொழி குறிக்கிறது. இளமை கழிந்த பிறகு முதுமையில் அவற்றைக் கற்றல் அரிது என்பதைத்தான் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? என்னும் முதுமொழி எடுத்து இயம்புகிறது.
நற்குணங்களையும், விரத்தையும், விவேகத்தையும் இளமையில் சிறுவர்களுக்கு எளிதாகக் கற்றுத் தருவது ஒன்று உண்டு. அதுதான் நல்ல முறையில் உருவாகும் சிறுவர் இலக்கியம்.”8 என்பது சிறார்களை நாம் எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பதை காட்டுகிறது.
பெற்றோர்களிடம் காணப்படும் சிக்கல்கள்
- சிறார்களின் விருப்பத்தை புரிந்துக் கொள்ளாமை
- பிற சிறார்களுடன் தங்கள் பிள்ளைகளை ஒப்பிட்டு மனஅழுத்தம் பெறுதல்
- டியூசன் என்ற பெயரில் நசுக்குதல்
- கல்வி என்பது பாடப்புத்தகத்தை படிப்பதும் மதிப்பெண் எடுப்பதும் என்று நினைப்பது.
- அவர்களின் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் சிறார்களின் மேல் திணிப்பது.
- நாடகம், நடிப்பு, இசை, பாட்டு போன்றவை அவர்களின் படிப்பிற்கு எதிரானவை என்ற மனப்போக்கு
- போதுமான வசதியின்மை, குடும்ப சூழல் (பெற்றோர் புத்தகங்களை வாங்கித் தர
இயலாத நிலை)
“தம்மில்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது
தம் மக்கள் தம்மினும் அறிவுடையவரானால் அது உலகத்து உயிர்கட்கெல்லாம் இனிதாகும் என்று திருவள்ளுவர் கூறினார். தம்மைக் காட்டிலும் தம் மக்கள் அறிவு பெற வேண்டும் என்றே பெற்றோர் விரும்புவர். அத்தகைய அறிவோ அவர்களைக் காட்டிலும் இந்த உலக உயிர்களுக்கெல்லாம் இனிது என்றது தமிழ் மறை. தம் மக்கள் அறிவு பெற வேண்டுமானால் அவர்களுக்குரிய இலக்கியம் வளர்ச்சியுற வேண்டும். செம்மை பெற வேண்டும் – இதனைப் பெற்றோர் மறத்தலாகாது. சிறுவர் இலக்கியத்தை உண்டாக்குபவர்கள் எழுத்தாளர்களே; அதற்கு புத்தக உருவளிப்பவர்கள் பதிப்பாளர்கள்; அதனைப் படித்து பயனைபவர்கள் சிறுவர்கள். ஆனால் அதற்கு வாழ்வு அளிப்பவர்கள் பெற்றோர்களே.
சிறுவர்களுக்கான புத்தகங்களை வாங்கி கொடுக்காவிடில் நூல்கள் எவ்வாறு விற்பனையாகும்? நூல்கள் விற்பனையாகாவிடில் யாரோ அவற்றை வெளியிடுவார்? வெளியிட எவரும் முன்வராவிடில் எந்த எழுத்தாளர் தொடர்ந்து எழுதுவார்? எனவே புத்தகங்களை வாங்கித் தரும் பெற்றோர்களேதாம் சிறுவர்களாக இருந்தபோது பார்க்க முடியாத உயர்ந்த புத்தகங்கள், தங்கள் குழந்தைகளுக்குக் கிடைப்பதைக் கண்டு பூரிப்படைய வேண்டும். குறைந்தது மாதம் ஒரு புத்தகத்தையாவது தம் பிள்ளைகளுக்கு வாங்கித் தர வேண்டும்.
பெற்றோர்களின் முழு ஆதரவு என்று கிடைக்கிறதோ அன்றுதான் சிறுவர் இலக்கியம் இலக்கிய அரங்கில் தன்னிகரற்று திகழும்! பெற்றோர்களே வருங்காலக் குடிமக்களாக உங்கள் குழந்தைகளைப் பண்படுத்தும் சிறுவர்இலக்கியத்தை வளரச் செய்ய வேண்டும். சிறுவர்களின் பிறந்த நாளின் போதும், திருவிழாக்களின் போதும் அவர்களுக்குச் சிறுவர் புத்தகங்களை வாங்தித் தர வேண்டும். சிறுவர் பத்திரிக்கைகளுக்குச் சந்தா செலுத்திட வேண்டும். இவற்றைப் பெற்றோர்கள் தங்கள் கடமையாக கருத வேண்டும்.”9 vன்று பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார் குழந்தை கவிஞர் பூ வண்ணன் அவர்கள்.
பள்ளிகளில் காணப்படும் சிக்கல்கள்
- மதிப்பெண்களை விரும்பும் பெற்றோர்களால் மதிப்பெண்களை நோக்கியே மாணவர்களை திசை திருப்புதல்
- எல்லாவற்றையும் கலை இலக்கிய வடிவங்களைக் கொண்டே கற்பிக்க இயலாது.
- ஒரு வேளை படிப்பை படிக்காமல் கொண்டாட்ட மனநிலையிலே சிறார்கள் நின்றுவிடுவார் என்ற பயம்.
- கொடுக்கப்படும் வீட்டுப்பாடங்கள்
- போதிய கால அவகாசமின்மை
- கலை விழாக்களை கண் துடைப்பிற்காக செய்தல்
- ஆசிரியர்களின் ஆர்வமின்மை
- நிர்வாகத்தினரின் நெருக்கடிகள்
- சிறார் இலக்கியம் குறித்த போதுமான அவதானிப்பு இல்லாமை
- ஆர்வமாய் செயல்படும் ஆசிரியர்களை இருட்டடிப்பு அல்லது சக ஆசிரியர்களே கேலி பேசுவது
- செயல்படும் ஆசிரியர்களுக்கும் போதிய ஊக்கமின்மை
“தமிழ் நாட்டு உயர் நிலைப் பள்ளிகளில் நூலகம் இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவு இருக்கிறது. பள்ளிகளும் நூலகத்திற்கென்று ஒதுக்கப்பட்ட பணத்தில் நூல்கள் வாங்குகின்றன. இப்பொறுப்பு தலைமையாசிரியரிடம் உள்ளது. பொதுவாக இத்தலைமை ஆசிரியர்கள் பாதிப்பாளர்களிடமிருந்து நூல்கள் வாங்கும் முறை திருப்தியாக இல்லை என்று கேள்விப்படுகிறேன். இத்தகவல் பொய்யாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இப்போதுள்ள தலைமை ஆசிிரியர்கள் இவற்றைப் பொய்யாக்க வேண்டும் என்றும் விரும்புகின்றேன்.
பொது நூலகங்களைவிட இந்தப் பள்ளி நூலகங்கள் தாம் சிறுவர் நூல்களை ஆதரிக்க வேண்டும். இவை உண்மையான அக்கறையோடு சிறுவர் நூல்கள் வாங்க ஒதுக்கப்பட்ட தொகைக்கு நல்ல தரமான சிறுவர் நூல்களை வாங்கத் தொடங்கினால் போதும். சிறுவர் இலக்கியம் வளம் பெற்று விடும்.
பள்ளி நூலகங்களைத் தலைமை ஆசிரியரின் அறைக்குள்ளே அடக்கி வைக்காமல் தனி அறையில் அமைக்க வேண்டும். அதோடு ஒவ்வொரு பள்ளிக்கும் தனி நூலகரை நியமிக்க வேண்டும். அப்போதுதான் பள்ளி நூலகம் எதிர்பார்த்த பலனைக் கொடுக்கும்.”10 என்று பள்ளிகளின் சிக்கலையும் காட்டுகிறார் கவிஞர்.
சமூகம் / அரசு சார்ந்த சிக்கல்கள்
- அரசு சிறார் இலக்கியத்தின் மீது தனித்த கவனம் செலுத்த வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
- சிறார் படைப்பாளர்களுக்கு தேவையான ஊக்கத்தையும் ஊத்வேகத்தையும் அளித்திட முன் வர வேண்டும்.
- போதி காலமின்மை என்பதை தவிர்க்க அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் (உதாரணமாக மாதத்தின் முதல் சனிக்கிழமை அரை நாள் சிறார் இலக்கியம் சார்ந்த செயல்பாடுகளுக்கு என்பதாக)
- சிறார்களின் உடல்/ உள்ள நலன்களுக்கு பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் இன்றைய சிறார்களே நாளைய குடிமக்கள் என்பதால் சிறார்களின் நலனில் முதலீடு செய்வது அவசியமான ஒன்றாகும்.
- ஆண்டிற்கு ஒரு முறை சிறார்களுக்கான மாபெரும் நிகழ்வை முன்னெடுக்க வேண்டியதும் அவசியமான ஒன்றாகும்.
“சிறுவர் நூலகங்களை ஊருக்கு ஒன்றாய்த் தோற்றுவிக்கப் பொது நூலக இயக்கம் முன் வர வேண்டும். இவ்வாறு அமையும் சிறுவுர் நூலகங்கள் வெறும் நூல்களை மட்டுமே கொண்டதாக அமைவது கூடாது. சிறுவர் நூலகத்தில் சிறுவர் விளையாட்டிற்கு இடம் இருக்க வேண்டும். சிறுவர்கள் பாட்டுப் பாட ஆடல், நாடகம் நிகழ்த்த வசதியிருக்க வேண்டும். சிறுவர் திரைப்படங்கள் அவ்வப்போது திரையிட்டுக் காட்டவும் ஏற்பாடு செய்ய வேண்டும். இவை அனைத்தையும் செய்ய முடியாவிட்டாலும் நிச்சயம் கதை சொல்லும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
பொது நூலாக இயக்கம் நிறுவும் சிறுவர் நூலகங்களும் பள்ளிக் கூடத்து நூலகங்களும் மட்டும் போதுமானவை அல்ல. அறப்பணிகளுக்காக இருக்கும் அறக்கட்டளைகளும், பெருஞ்செல்வர்களும் ஊர்கள் தோறும் செயல்படும் இலக்கிய – பொது நல மன்றங்களும் கூட சிறுவர் நூலகங்களை அமைக்க முன்வர வேண்டும். குக்கிராமங்களும் சிறுவர் நூலகங்களின் பயனைப் பெற இயங்கும் (Mobile Childrens libraries) சிறுவர் நூலகங்கள் அமைய வேண்டும்.”)11 என்று தீர்வும் சொல்கிறார் குழந்தை எழுத்தாளர் பூவண்ணன் அவர்கள்.
படைப்பாளர் சந்திக்கும் சிக்கல்கள்
- 29% சிறார்களைக் கொண்ட தமிழகத்தில் அவர்களுக்கான படைப்புகளை வழங்க போதுமான படைப்பாளர்கள் இல்லை
- படைக்கும் படைப்பாளர்களின் படைப்புகளையும் பதிப்பகம் பதிக்க முன்வர தயங்குதல்( விற்பனை நிலைக் கருதி)
- படைப்பாளர்களுக்கு தேவையான பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்காமை
- படைப்பாளர்களுக்குள்ளும் ஒன்றுபட்டு வழிநடக்கும் நிலை ஏற்படாமை
- இன்னும் பல வகைமை சார்ந்த படைப்புகளுக்கு படைப்பாளர் இன்மை
- பெரியவர்களுக்கான எழுத்தாளர்கள் கொண்டாடப்படும் அளவிற்கு சிறார் எழுத்தாளர்கள் கொண்டாடபடாமை.
“சிறுவர்களுக்கு எழுதுவது கடினம். சிறுவர்கள் நிறைந்த அறிவு பெறாதவர்கள். அவர்கள் அறிந்த சொற்கள் மிகக் குறைவே. அவர்கள் உள்ளமோ எதையும் நம்பும் இயல்புடையது. தீயவை நல்லவை என்று பகுத்தறிய முடியாதது. இவை அனைத்தையும் நினைவில் வைத்துக் கொண்டு சிறுவர்களுக்கு எழுத முன்வரவேண்டும். சிறுவர்களுக்காக எழுதப்படும் எழுத்தோவியம்; எளிமை இனிமை என்ற இரண்டு குணங்களை பெற்றிருக்க வேண்டும். இவர்களின் கல்வி அறிவு எத்தகையது என்பதை உணர்ந்து அவர்களுக்கு ஏற்ற வகையில் எதையும் எழுத வேண்டும். எளிமையாக எழுதினால் மட்டும் போதாது? அதில் இனிமையும் இருக்க வேண்டும். விஷயத்தை சொல்லும் முறையில் ஒரு வேகமும் விறுவிறுப்பும் இருக்க வேண்டும். இதையே “இனிமை” என்று குறிப்பிடுகின்றேன். படித்தால் சுவை தருவதும், எளிதில் புரியக் கூடியதுமான கதை, கட்டுரை, பாடல்களை சிறுவர்களுக்காக எழுத வேண்டும்” என்ற பூவண்ணன் அவர்களின் கூற்றை நினைவில் நிறுத்த வேண்டும்.“12 என்று நீண்ட நெடிய விளக்கத்தையும் படைப்பாளர்களுக்கு வழங்குகிறார் கவிஞர்.
வாசிப்பை இயக்கமாக்கி மாணவர்களிடம் கொண்டு செல்வதற்கு முன்பாக முதலில் கொண்டு சொல்லப்பட வேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரிய பெருமக்களிடமே. பள்ளி படிப்பிற்கு பிறகு பிற புத்தகங்களை படிக்காத பல ஆசிரியர்கள் தமிழகத்தில் இருப்பதை காண முடிகிறது. ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்துவதுடன் ஆசிரியர்களை கொண்டு அந்த பள்ளியின் பெற்றோர்களுக்கான ஒரு நாள் பட்டறையை முன்னேடுத்தால் நலமாய் இருக்கும். இந்த பட்டறையானது அவர்களுக்கு வாசிப்பின் அவசியத்தையும் சிறார் இலக்கியத்தின் அவசியத்தையும் தெள்ளிதாய் உணர்துவதாக அமைய வேண்டும்.
ஆசிரியர் /பெற்றோர், சிறார்கள், கலை/அறிவியல் என்று முக்கூட்டு சிறப்பாய் அமைவதே எதிர்காலத்திற்கு நலம் பயக்கும். ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை அவர்களின் மனஅழுத்தம், அதனை அதிகரிக்கும் குடும்ப உறுப்பினர், உறவினர் நிலைபாடுகள் ஆசிரியர்களை தேர்வுக்கான புத்தகங்களை வாசிக்க சொல்கிறதே அன்றி பிற புத்தகங்களை தொடவே மறுக்கின்றனர்.
”எந்த தனியார் பள்ளி ஆவது ஒராசிரியர் பள்ளி அல்லது ஈராசிரியர் பள்ளி என்று அறிவிக்கப்பட்டு இயங்குவதை பார்த்திருக்கிறீர்களா? என்னங்க கிறுக்குத்தனமா கேட்கிறீர்கள் என்று தானே தோன்றுகிறது ஆனால் அரசு பள்ளியில் அப்படி நிறைய இருக்கிறது அதுவும் அதிகாரப்பூர்வமாய் அரசாலேயே ஓராசிரியர் பள்ளி ஈராசிரியர் பள்ளி என்று அறிவிக்கப்பட்ட பள்ளிகள் ஆயிரக்கணக்கில் இருக்கிறது என்றால் நீங்களே சொல்லுங்கள் அரசின் இந்த அறிவிப்பை கிறுக்குத்தனம் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்ல என்கிறார்.
2013ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் 20253 பள்ளிகளில் ஒரு ஆசிரியர்தான் பணியில் இருக்கிறார் அப்பள்ளிகளில் மட்டும் 83 ஆயிரத்து 641 மாணவர்கள் படிக்கிறார்கள். மேலும் 16,421 பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் தான் உள்ளனர் அதுமட்டுமல்ல 16 அரசு பள்ளிகளில் ஆசிரியரே இல்லை எனில் இதை அரசின் திட்டமிட்ட புறக்கணிப்பு என்று தானே சொல்ல முடியும்….. விளக்கி அவர் “அரசு பள்ளிகளில் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக ஒரு கணக்கு வைத்துக்கொள்ளலாம் மாணவர்கள் குறைவாகத்தானே உள்ளனர் என்ற காரணம் பொருத்தமற்ற வாதம் ஆகும்.”13 என்பதும் சிறார்கள் குறித்து அக்கறையுடன் நாம் சிந்திக்க வேண்டிய இடத்தை காட்டுகிறது.
இப்படிப்பட்ட பள்ளிகளில் எல்லாம் ஒரு சிறார் செயற்பாட்டாளரை அரசு நியமித்தாலும் மாணவர்களின் நலன் மேம்படும் என்பதை தெரிவிக்கவே இந்த விளக்கங்களை இங்கே பதிவிட செய்தேன்.
மாதத்தில் ஆசிரியர் வாசித்த புத்தகத்தை பதிவிட சொல்லலாம் அதன் வழி சிறார்களுக்கும் செய்தி சென்று சேரும் பொழுது அவர்களுக்கும் வாசிக்க வேண்டும் என்ற அவா எழும்.
அதிகமான அளவில் தன்னார்வ சிறார் செயற்பாட்டாளர்களை உருவாக்க வேண்டியதும் அவசியமானதாகும். (காந்தியானாலும் காமராசர் ஆனாலும் அவர்களை போல் சிறப்பான தலைமை இல்லாமல் தடுமாறி இருக்கிறது தமிழகம். சிறந்த ஆளுமைகள் தங்களுக்கு பிறகு குழுவை அல்லது செயற்பாட்டை வழிநடத்தி முன்னேடுத்து செல்ல அடுத்த தலைமுறை செயற்பாட்டாளர்களை உருவாக்க வேண்டிய அவசியத்தையும் உணர்ந்து உருவாக்க முயல வேண்டும்.)
செயற்பாட்டாளர்களுக்கான பயிற்சிகளும், பயிற்சிக்கு பின்பான வாய்ப்பும் வழங்கப்பட வேண்டியது அவசியமானதாகும்.
முடிவுரை
சிறார்இலக்கியம் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களை இக்கட்டுரை வழி கண்டோம். இதன் வழி படைப்பாளரும் பள்ளிகளும் பெற்றோரும் கைக்கோர்த்து வழிநடத்தினால் மட்டுமே சிறார் இலக்கியம் சிறப்பு பெறும் என்பதை அறிய முடிகிறது.
சிறுவயதில் வாசிக்கும் பழக்கம் இருந்தாலே பெரியவர்கள் ஆகும்போதும் அவர்கள் வாசிக்க தொடங்குவார்கள் என்பதால் சிறுவயதிலே சிறார்களை வாசிக்க செய்ய வேண்டும். ஒவ்வொரு கிராமம் தோறும் அரசால் நூலகங்கள் தொடங்கப்பட வேண்டும் என்பதும் அறங்காவலர், பெருஞ்செல்வர் போன்றோரும் நூலகம் தொடங்க உதவிட வேண்டும் என்பதையும் அறிய முடிகிறது.
திருவிழாக்களின் போதும் அவர்களுக்குச் சிறுவர் புத்தகங்களை வாங்தித் தர வேண்டும். சிறுவர் பத்திரிக்கைகளுக்குச் சந்தா செலுத்திட வேண்டும். இவற்றைப் பெற்றோர்கள் தங்கள் கடமையாக கருத வேண்டும்
சிறார் செயற்பாட்டாளர்கள்கள் அதிக அளவில் செயல்பட வேண்டியது அவசியம் என்பதை உணர முடிகிறது. கதைச்சொல்லி, நாடகாசிரியர், பாடலாசிரியர், ஒவியர் என அனைவருக்குமாய் பள்ளி அமைந்திட வேண்டியது அவசியம் என்பதை உணர்த்துகிறது. பள்ளிக்கு நூலகம் அவசியம் என்பதும் அவை நூலகமாய் நூலகரோடு இயங்க வேண்டியது அவசியம் என்பதையும் அறிய முடிகிறது.
அரசு பல்வேறு சிறார் மாநாடுகளை நடத்த வேண்டியதும், சிறார் புத்தக வெளியீட்டிற்கு உதவிடுவதும், சிறந்த படைப்பாளர்களை ஊக்கப்படுத்துவதும் அவசியம் என்பதையும் உணர முடிகிறது. ஆசிரியர்களிடையே வாசிப்பை ஊக்கப்படுத்த வேண்டும். ஊக்கப்படுத்தும் போது சிறார்களின் வாசிப்பும் மேம்படும். ஏனெனில் எதைக்குறித்து வாசிக்கிறோமோ அதைக் குறித்து நாம் உரையாடவும் செய்வோம்.
சிறார் இலக்கியம் வளர்ப்போம் சீர்மிகு சிந்தனை பெறுவோம்!
ஏற்றமிகு எதிர்காலம் கொள்வோம் எல்லோரும் இன்புறுவோம்!
வாசிப்போம் வாசிப்போம் வாசிப்பை சுவாசிப்போம்!
துணை நூற்பட்டியல்
- ஆர்.வி. எழுதுவது எப்படி? தொகுதி I மகரம்(தொ.ஆ), ப -379
- நரா. நாச்சியப்பன். எழுதுவது எப்படி தொகுதி III மகரம்(தொ.ஆ), பக் 382-83
- மேலது பக் 373
- சிறுவர் இலக்கிய வரலாறு, பூவண்ணன், வானதி பதிப்பகம்
- சமூக நலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை, தமிழ்நாடு, ப – 21
- சிறுவர் இலக்கிய வரலாறு, பூவண்ணன், வானதி பதிப்பகம்
- மேலது
- மேலது
- மேலது
- மேலது
- மேலது
- மேலது
- இல சண்முகசுந்தரம் – எதுநல்ல பள்ளி வாங்க பேசலாம், பாரதி புத்தகாலயம
- இந்துமதி
குறிப்பு: தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் “சிறார் இலக்கியக் கருத்தரங்கம் – 2025” எனும் தலைப்பில் கட்டுரைகள் பெறப்பட்டன. அவற்றுள் தேர்வான கட்டுரைகள், ஏப்ரல் 2025 நடைபெற்ற மாநிலச் சந்திப்பில் வாசிக்கப்பட்டது.

