மிகவும் ஆழமாகத் திட்டமிட்டு, தமிழ்நாடு குழந்தைகள் எழுத்தாளர்கள் சங்கத்தைத் துவக்கினீர்கள். இப்போது அதற்கான இணைய தளத்தையும் தொடங்க இருக்கிறீர்கள். இப்படி சமூக நோக்குள்ள மனித இதயங்கள் இணைந்து இதனைத் துவக்குவது என்பது ஒரு வரலாற்று நிகழ்வு. பெரியவர்களுக்குக் கதை எழுதும் இந்த கால கட்டத்தில், எதிர்கால குடிமகன்கள்,குடிமகள்கள், எதிர்கால விஞ்ஞானிகள், எதிர்கால வரலாற்றாளர்கள், எதிர்கால சமூகவியலாளர்களைக்
கருத்தில் கொண்டு அவர்களுக்காக எழுதும் மனிதர்கள் அற்புதமானவர்கள். குழந்தைகளை மனதில் வைத்து எழுதுவது என்பது பெரியவர்களுக்காக எழுதுவதை விடக் கடினமானது,நிறையக் கற்பனை வளம் கொண்டு, குழந்தைகள் மனப்பாங்கில், குழந்தைகளாகவே மாறி எழுதினால்தான் அதன் தன்மையும், உண்மை நிலையும் குழந்தைகளை ஈர்க்க முடியும். அப்படிப்பட்ட ஒரு சிலர்களில் என் மனக்கண் முன்னே வருவது உதயசங்கர், விழியன், பிரபு ராஜேந்திரன், பாலபாரதி, விஷ்ணுபுரம் சரவணன் போன்றோர். நானும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின், விஞ்ஞான துளிர் பத்திரிக்கைக்கு எழுதுவதால், அதிலுள்ள சூட்சுமம் தெரியும். மேலும் தாங்கள் கிட்டத்தட்டத் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கிளைகளை வைத்துள்ளதும், அதில் 200க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்கள் என்பதும் ஆகப் பெருஞ்செயல்கள்தாம். வாழ்த்துகள்!
குழந்தை எழுத்தாளர்களே! இனி நானும் உங்களோடு இணைந்து பயணிப்பேன். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் இணையதளம், சீரோடும், சிறப்போடும், பெருமை மிக்க நடை போடும் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் வாழ்த்துகள் குழந்தை எழுத்தாளர்களே.
என்றைக்கும் அன்புடன்
சோ.மோகனா,
பழனி,
19.10.24

