Tamil Nadu Children Writers and Artists Association

தசிஎகச கோரிக்கை

Reading Time: 2 minutes

பொருள்: மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பைக் கைவிட வேண்டும் – தசிஎகச கோரிக்கை

வணக்கம்,

9-5-2022 அன்று மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் பள்ளி மாணவர்கள் குறித்து சட்டசபையில் பேசியிருக்கிறார். இந்தப் பின்னணியில் சில விஷயங்களை நாம் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.

குழந்தைகள் சமூகத்தைப் பிரதிபலிப்பவர்கள். கரோனா கால சமூகநிலை பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கரோனா தாக்குதலை ஒட்டி பள்ளிகள் மூடப்பட்டன. தொலைக்காட்சி, சிறுசிறு தொழில்களில் ஈடுபடுதல், சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிடுதல், இணையவழியில் கல்வி கற்றல், வெவ்வேறு வேலைகளில் ஈடுபடுதல், எந்நேரமும் பெரியவர்களுடன் இணைந்திருத்தல் உள்ளிட்டவற்றுக்கு குழந்தைகள் நிர்பந்திக்கப்பட்டனர். அதோடு பெற்றோர் மற்றும் உறவினர் கரோனாவால் பாதிக்கப்பட்டபொழுதும், வேலையை இழந்தபொழுதும் அவர்கள் உடனிருந்தனர். இதனால் மாணவர்கள் சீரான வளர்ச்சியின்றி பாதிக்கப்பட்டனர், கல்வியில் பின்னடைவு ஏற்பட்டது, மனரீதியாக பாதிக்கப்பட்டனர், வெவ்வேறு சமூகப்பழக்கவழக்கங்களில் அவர்கள் தங்களை இணைத்துக்கொள்ள நேரிட்டது. உலகம் முழுக்க குழந்தைகளின் கல்வி, வளர்ச்சி, பாதுகாப்பில் பின்னடைவு ஏற்பட்டது.

சில நாடுகள் குழந்தைகளை மீட்டெடுக்கும் பணியை வெவ்வேறு திட்டங்கள் மூலம் ஈடுகட்டி வருகின்றன. மாணவர்களை விளையாட்டில் ஈடுபடுத்துதல், மாணவர்களை மதித்து பயனுள்ள உரையாடல்களில் ஈடுபடுதல், கற்றல் இழப்பை சரிசெய்தல், திறன் வளர்ப்புப் பயிற்சி, வாசிப்பில் ஈடுபடுத்துதல் என வெவ்வேறு தொடர் செயல்பாடுகளின் மூலமாக மாணவர்களை மீட்டெடுக்க வேண்டிய தேவை உள்ளது.

கரோனாவிற்கு பிந்தைய நிலையை புரிந்துகொள்ள, கூடுதல் அக்கறையோடு செயல்பட ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல், பெற்றோர்கள் தங்களை புரிந்துகொள்ளவும் வழிகாட்டவும் பயிற்சியளித்தல், சமூக வலைதளங்களைக் கட்டுப்படுத்துதல், சினிமாவின் கதாநாயகர்களை முன்மாதிரியாகக் கொள்வது தின வாழ்வில் அதைப் பிரதிபலிப்பது சார்ந்த அணுகுமுறை மாற்றத்தைக் கையாள்வது, தேவையற்ற பழக்கங்களில் சிக்குவதைத் தவிர்த்தல், ஆண்- பெண் உறவு சார்ந்து மதிப்புமிக்க புரிதலுக்கு வழிவகை செய்தல், சாதி பற்றிய பார்வையை மாற்றியமைத்தல், போதைப் பொருட்கள் மாணவர்களை அடையா வண்ணம் நெறிப்படுத்துதல் எனக் கல்வியின் பகுதியாக நாம் செய்ய வேண்டிய வேலைகள் இந்தக் காலக்கட்டத்தில் அதிகரித்துள்ளன. மாணவவர்களின் கல்வி வளர்ச்சி மேம்பாடு குறித்து புதுமையான செயல்பாடுகளுடன் இயங்க வேண்டிய பொறுப்பு கல்வித் துறைக்கு உள்ளது.

மாணவர்களை தண்டிப்பதற்கு எதிரான சட்டத்தை இயற்றி ஆசிரியர்களுக்கு பல்வேறு வகையான விழிப்புணர்வை வழங்கியது கலைஞர் கருணநிதி தலைமையிலான அரசு. அச்சட்டத்திற்கு எதிரான கருத்து (மாணவர்கள் தவறு செய்யும்பொழுது சான்றிதழில் குறிப்பிடுதல், பள்ளியை விட்டு அனுப்புதல்) சட்டப்பேரவையில் வெளியிட்டிருப்பது துரதிர்ஷ்டம். அமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் முன்மொழிந்த கருத்துக்களால் ஆசிரியர் பணி அதிகாரமிக்கதாக ஆக்கப்பட்டுள்ளது. பயத்தின் மூலம் கற்றல் நடைபெறாது என்ற ஆராய்ச்சி உண்மையைப் புறந்தள்ளுவதாக உள்ளது. ஆசிரிய – மாணவ இடைவெளி அதிகரிக்கும்பொழுது கல்விச் செயல்பாடு அர்த்தமற்றதாக மாறுகிறது. 

மாணவர்கள் நலன் சார்ந்து நவீன கருத்துக்களுடன் ஒரு செயல்பாட்டையும் பிற்போக்கான கருத்துடன் மற்றொரு செயல்பாட்டையும் மேற்கொள்வது அவர்களுடைய நலனை கடுமையாக பாதிக்கும். இந்த நிலையில் கல்வியின் மூலம் மட்டுமே இச்சமூகத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற உண்மையை வலியுறுத்துகிறோம். கரோனாவிற்கு பிந்தைய மனநிலை மாற்றங்கள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்பட வேண்டும். அதே போல் மாணவர்களிடையே இன்று ஏற்பட்டுள்ள பின்னடைவுகளில் இருந்து விடுபட பள்ளிகளில் வயதுக்கேற்ப பல்வேறு திட்டங்களை செயல்பட வேண்டும்.

•           பள்ளி வகுப்பறையில் மாணவர்களுடன் உரையாடல் நடத்தப்பட வேண்டும். இதில் ஆசிரியர்கள், பெற்றோர், மனநல ஆலோசகர்கள் உள்ளிட்டோரை ஈடுபடுத்த வேண்டும்.

•           விளையாட்டு மற்றும் கலைகளில் அதிகமாக ஈடுபடுத்த வேண்டும்.

•           சிறார் இலக்கிய வாசிப்பையும் அதிகப்படுத்த வேண்டும்.

•           மாணவர்களுக்கான இலக்கியக் குழு, சமூக செயல்பாட்டுக்குழு, சுற்றுச்சூழல் குழு போன்றவற்றை உருவாக்க வேண்டும்.

இது சார்ந்த பணிகளில் வழி நடத்துவதற்கு அக்கறையுள்ள பெரியவர்கள், ஆசிரியர்கள், வல்லுநர்களை இணைத்துக்கொள்ள வேண்டும். தவறான செயல்பாடுகளுக்குக் காரணமானவற்றைக் களையவும், மாணவர்களுக்கு பயனுள்ள செயல்பாடுகளை அறிமுகப்படுத்தவும் அரசு முன்முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம். இது சார்ந்த பணிகளில் உற்ற வழிகளில் சங்கம் துணை நிற்கும், இணைந்து செயல்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம்

Author

  • admin

    தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் சங்கம் – சார்பாகப் பதிவு செய்யப்படும் பதிவுகள்.

    View all posts

More Articles & Posts