குழந்தைகளின் மகிழ்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் வழிவகுக்கும் கலை இலக்கியப்படைப்புகளை உருவாக்கித் தருதல்.
முன்னோடி எழுத்தாளர்கள் உருவாக்கித் தந்திருக்கும் சிறந்த சிறார் இலக்கிய, கலைப்படைப்புகளை தமிழ் வழியாகவும், பிற இந்திய மொழிகள், ஆங்கிலம் உள்ளிட்ட முக்கிய அயல்மொழிகளிலிருந்து மொழிபெயர்ப்புகளின் வாயிலாகவும் தமிழ்க் குழந்தைகள் படிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுதல்.
தரமான தமிழ்ச் சிறார் படைப்புகளை அயல் மொழிகளுக்கு மொழிபெயர்ப்பதை ஊக்குவித்தல்.
புதிய, துடிப்பான சிறார் இலக்கியப் படைப்பாளிகளை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துதல்; அவர்களின் படைப்புகளைப் பரவலாக மக்கள் மத்தியில் கொண்டுசெல்லுதல்.
குழந்தைகளுக்கு, அவர்களின் பிஞ்சுப்பருவம் முதலே நல்ல கதைகளை, வயதுக்கேற்ற படைப்புகளை அறிமுகப்படுத்தி தொடர்ந்து வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கிடுதல். அவ்வாறு வாசிக்கும் குழந்தைகளிடமிருந்து எழுதவும், கலைப்படைப்புகளை உருவாக்கவும், படிக்கவும் ஆர்வமும் கொண்ட திறனுமுள்ள இளம் படைப்பாளிகளை இனம் காணுதல்; அவர்கள் திறன்களை வளர்த்துக்கொள்ள வழிகாட்டுதல்.
சிறார் கலை, இலக்கியப்படைப்புகளின் முக்கியத்துவத்தை வாசகர்களுக்கும், குறிப்பாகப் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் உணர்த்துவதற்கான சாத்தியமான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வது.
சிறார் கலை, இலக்கியம் சார்ந்த பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்குதல், அவற்றை முன்னெடுத்துச் செல்வதில் ஆசிரியர்களுடன் இணைந்து செயல்படுதல்,
கல்வியில் – சிறார் இலக்கியம், கலையின் பங்கை மேம்படுத்த உழைத்தல்.
தமிழகக் சிறார் இலக்கியத்துக்கு 75 ஆண்டு கால வளமான வரலாறு உண்டு. அது சார்ந்த இலக்கியப் படைப்புகள், சிறார் இலக்கிய இதழ்கள், எழுத்தாளர்கள் பற்றிய வரலாற்றைத் தொகுத்து ஆவணப்படுத்துதல்; நூல்களாக வெளியிடுவதற்கு முயற்சி மேற்கொள்ளுதல்.
சிறார் இலக்கிய, கலைப் படைப்பாளிகள், தமது படைப்புகளைப் பகிர்ந்துகொள்ளவும், ஒன்றிணைந்து செயல்படவும், படைப்பாளிகள் தங்களை மேம்படுத்திக்கொள்ள உதவும் பயிலரங்குகளை ஒருங்கிணைக்கவும் சங்கம் ஒரு களமாகச் செயலாற்றுதல்.
சிறாருக்கான சிறுகதை, கவிதை, நாவல், நாடகம், பாடல்கள், திரைப்படம், ஓவியம், பிற நுண்கலைகள், விளையாட்டு, அறிவியல், சூழலியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் குழந்தைகளுடைய படைப்பூக்கத்தையும், திறன்களையும் வளர்க்க வழிகாட்டும் படைப்புகளை உருவாக்குதல்.
ஆர்வமிக்க இளம் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள், குழந்தைகளுக்கு அவ்வப்பொழுது பயிலரங்குகளை நடத்தி திறன்களை மேம்படுத்த தொடர் முயற்சிகளை மேம்படுத்துதல்.
களத்தில் உள்ள சிறார் நலச் செயற்பாட்டாளர்களை ஊக்குவித்து பாடல்கள், கதைகள் சொல்லுதல் உள்ளிட்ட நிகழ்த்துகலை வடிவங்களில் தேர்ச்சி பெறச் செய்தல்.
சிறார் இலக்கிய, கலைப் படைப்புகளுக்கான ஓர் இணையத்தளத்தை சங்கத்தின் சார்பில் உருவாக்கி, நிர்வகித்தல் .
சிறார் இலக்கிய இதழ்களின், பதிப்பகங்களின் வளர்ச்சிக்கு இயன்ற வழிகளில் உதவுதல்.
தேசிய அளவில் நேஷனல் புக் டிரஸ்ட், கேரளத்தின் பால சாகித்திய இன்ஸ்டிட்யூட் போல் தமிழ்ச்சிறார் கலை இலக்கியக் வெளியீட்டு கழகம் ஒன்றை நிறுவுமாறு தமிழக அரசை வலியுறுத்தி, அது செயல்வடிவம் பெறத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுதல்.
ஆண்டுக்கு ஒரு முறை மாநிலத்தலைநகரில் சிறார் புத்தகக்கண்காட்சியை அரசே எடுத்து நடத்த வலியுறுத்துதல்.
ஆண்டுக்கு ஒருமுறை மாவட்டத் தலைநகரங்களில் அரசே சிறார் புத்தகக் கண்காட்சி நடத்த வலியுறுத்துதல்.
அரசு சார்பில் சிறார் நூலகங்களை ஏற்படுத்துதல், பொது நூலகங்களில் சிறார் பகுதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்துதல்.
பள்ளிக்கல்விக் காலத்தில் சிறு நூல்களை வாசிக்கவும், நூலகங்களைப் பயன்படுத்தவும் குழந்தைகளுக்குப் பயிற்றுவித்து, வாசிப்பில் ஆர்வத்தைத் தூண்ட வாரத்தில் இரண்டு பாடவேளைகளில் நூலகப் பாட வகுப்புகளை ஏற்படுத்த அரசிடம் வலியுறுத்துதல்.
பாடநூல் உருவாக்கத்தில், சிறார் கலை இலக்கியப் படைப்பாளிகளின் ஆலோசனைகளையும் கவனத்தில் கொள்ளச்செய்தல்;
பாடநூல்களில் தரமான, புகழ்பெற்ற சிறார் இலக்கியப் படைப்புகள் இடம்பெறச் செய்தல்;
பள்ளிவிழாக்களில் சினிமா சாராத இசைப்பாடல்கள், நாடகங்கள் அரங்கேற்றச்செய்தல்-போன்ற குழந்தைகளின் சுயமான படைப்பூக்கத்தை வளரச்செய்யும் நடவடிக்கைகளை ஊக்குவித்தல்.
நூலகங்களுக்கு சிறார் இலக்கிய நூல்கள் வாங்குவதற்குத் தனியாக பிரத்யேகமான விதிகளை உருவாக்குதல்.
நூலகங்களுக்கு வாங்கப்படும் சிறார் நூல்களுக்கு உரிய விலை கொடுக்க வலியுறுத்துதல்,
வயதுவாரியான சிறந்த சிறார் இலக்கியப் படைப்புகளைத் தேர்வுசெய்து வாங்கச்செய்தல்.
நூல்களைத் தேர்வுசெய்யும் குழுவில் சிறார் இலக்கிய எழுத்தாளர்கள், கலைஞர்களின் பிரதிநிதிகள் இடம்பெறச்செய்தல்.
சிறார் இலக்கிய முன்னோடிகளின் நூற்றாண்டு விழா, பவள விழா, பொன் விழா உள்ளிட்டவற்றை விமரிசையாகக் கொண்டாட வேண்டுமென தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தல்,
சங்கமும் தன்னளவில் முன்னோடிகளை நினைவு கூரும் விழாக்களைக் கொண்டாட முயற்சி செய்வது
அரசு விருதுகளில் சிறார் எழுத்தாளர்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கக் கோருதல்.
அரசு அறிவித்திருக்கும் மூன்று இலக்கியமாமணி விருதுகளில் ஒரு விருதை சிறந்த சிறார் இலக்கியப்படைப்பாளிக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கோருதல்.
கனவு இல்லம் – எழுத்தாளர்களுக்கான வீடு வழங்கும் திட்டத்தில் மத்திய அரசின் பாலபுரஸ்கார் விருது வாங்கிய எல்லா எழுத்தாளர்களுக்கும் வீடு வழங்கக்கோருதல்
சங்கத்தின் கொள்கைகள், நோக்கங்கள் – செயல்திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட எல்லாச் செயல்பாடுகளையும் தொடர்ந்து நடைமுறைப்படுத்த சங்கம் பாடுபடும்.
இதே நோக்கங்களுக்காகச் செயல்படும் ஒத்த கருத்துள்ள கலை இலக்கிய அமைப்புகளுடனும் கரம்கோத்துச் செயலாற்றும்.

