நமது சமூகத்தில் எல்லாவிதமான மக்களும் ஏதோ ஒரு அமைப்பில் ஒன்று சேர்ந்து தங்களுக்கான கோரிக்கைகளை பொதுச்சமூகத்தின் முன்னால் வைக்கிறார்கள். அதற்கான ஆதரவைத் திரட்டுகிறார்கள். இயக்கம் நடத்துகிறார்கள். அதிகாரத்தின் கதவுகளைத் தட்டுகிறார்கள். பல சமயங்களில் வெற்றியும் பெற்று விடுகிறார்கள்.
அமைப்பு என்பது கூட்டுக்கனவு. கூடிக் கனவு காண்பது. அந்தக் கனவை நனவாக்குவதற்காக கூடிச் சிந்திப்பது. அப்படிச் சிந்தித்து அந்தக் கனவை இன்னும் அழகாக்கி, விரிவுபடுத்தி, ஆழமும் நுட்பமும் கூட்டி, சமூகத்தின் முன்னால் அந்தக் கனவின் நியாயங்களை, அந்தக் கனவை நனவாக்க வேண்டியதின் அவசியத்தை, அதனால் விளையப்போகும் நன்மைகளை முன்வைப்பது. அந்தக் கனவை நிறைவேற்றப் போராடுவது, கனவு நனவாகும்வரைப் போராடுவது, யாருக்காகக் கனவு கண்டோமா அவர்களுக்கு அதன் பலன்கள் கிடைக்கச் செய்வது. எனவே தான் தனிமனிதர்களின் கனவை விட வலுவானதாக கூட்டுக்கனவு இருக்கிறது.
எல்லாத்தரப்பினருக்கும் அவர்களுடைய கோரிக்கைகளுக்காகக் குரல் கொடுக்க பல்லாயிரம் அமைப்புகள் இருந்தாலும் சமூகத்தின் மிக முக்கியமான பகுதியினரான குழந்தைகளின் நிலைமையைச் சொல்வதற்கு எந்த அமைப்புமில்லை. ஏனெனில் குழந்தைகளின் மீது எதை வேண்டுமானாலும் திணிக்கலாம். எதை வேண்டுமானாலும் சொல்லலாம். எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற பழமையான சிந்தனைகள் இன்றுவரை தொடர்கிற சமூகமாக நம்முடைய சமூகம் இருக்கிறது.
குழந்தைகள் குட்டி மனிதர்கள் என்பதை நமது சமூகம் எப்போதும் மறந்து விடுகிறது. அவர்களுடைய மறுப்பை மதிப்பதில்லை. அவர்களுடைய கோரிக்கைகளுக்குக் காது கொடுப்பதில்லை. அவர்களுடைய உணர்ச்சிகளை மதிப்பதில்லை. அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றுவதில்லை. குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சிக்குத் தேவையான கலை, இலக்கியம், விளையாட்டு, போன்றவை குறித்து பெரிதாகக் கவலைப்படுவதில்லை.
1950-ல் குழந்தை இலக்கிய முன்னோடி அழ.வள்ளியப்பா தொடங்கிய குழந்தை எழுத்தாளர் சங்கம் மிகப்பெரிய மாற்றத்தை குழந்தை இலக்கியத்தில் ஏற்படுத்தியது. தமிழ்க் குழந்தை இலக்கியத்தின் பொற்காலம் என்று சொல்லலாம். ஆனால் அதன்பிறகு சமூகத்தில் நடந்த மிகப்பெரிய மாற்றங்கள் தமிழ்க் குழந்தை இலக்கியத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது.
2000-க்குப் பிறகு தமிழ்ச் சிறார் இலக்கியம் தன் நீண்டகால உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக பல முயற்சிகள் நடந்தாலும் அவை பெரிதான பாதிப்பை உருவாக்கவில்லை. 2017-ஆம் ஆண்டு தமிழ்ச்சிறார் இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்கள் பதினைந்து பேர் கூடி தமிழ்ச் சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்களுக்கான அமைப்பு தொடங்குவதைப் பற்றி விவாதித்தார்கள். அன்று தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் என்ற அமைப்பு தொடங்குவதற்கான விதை ஊன்றப்பட்டது. தொடர்ந்து நடந்த உரையாடல்கள், விவாதங்களின் விளைவாக அதன்பிறகு 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 –ஆம் தேதி நமது அமைப்பு தொடங்கப்பட்டது.
அமைப்பு என்ன செய்யும் என்பதை இப்போது சிறார்களிடம் நுகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றமே சாட்சி சொல்லும். அரசு, ஆசிரியர்கள், பெற்றோர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், குழந்தை நலச்செயற்பாட்டாளர்கள், அனைவரிடமும் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது. அரசுக்குக் கொடுத்த கோரிக்கை மனுக்களின் விளைவாக அரசு, குழந்தைகளுக்காக பத்திரிகைகள், வண்ணப்படக்கதைப் புத்தகங்கள், நூலகவகுப்பு, வாசிப்பு, என்று மிகப்பெரும் மாற்றங்கள் உருவாகியிருக்கின்றன.
மிக முக்கியமான பிரச்னைகளில் அரசின் கவனத்தைக் கோரியிருக்கிறது. பல இடங்களில் பயிலரங்குகளை நடத்திக் கொண்டிருக்கிறது. புதிய எழுத்தாளர்களை, உருவாக்கியிருக்கிறது. குழந்தைப் படைப்பாளிகளை உருவாக்கியிருக்கிறது. இன்னும் சமூகத்தில் குழந்தைகளின் நலன்களைப் பற்றி சிறு சலனத்தை ஏற்படுத்தும் பல்வேறு முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறது.
இவையெல்லாம் நாம் அமைப்பாகச் சேர்ந்ததால் நிகழ்ந்த மாற்றங்கள். தனிமனிதர்களின் முயற்சிகளை விட கூட்டு முயற்சி என்பது வலிமையானதென்பதை காலம் நமக்கு உணர்த்திக் கொண்டேயிருக்கிறது. இன்னும் போக வேண்டியதூரம் அதிகம். அதற்கு நாமனைவரும் இணைய வேண்டும்.
குழந்தைகள் இந்த பூவுலகின் எதிர்காலம்.
எனவே அமைப்பாய் இணைவோம்.
உதயசங்கர்
தலைவர், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கம்

