Tamil Nadu Children Writers and Artists Association

நோக்கங்கள்

Reading Time: 2 minutes

முக்கிய நோக்கங்கள்

1. குழந்தைகளின் முழுமையான ஆளுமை வளர்ச்சி சார்ந்தும், குறிப்பாகக் கலை, இலக்கிய மேம்பாடு சார்ந்தும் செயல்படுவதே தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் முதன்மையான நோக்கம்.

2. அனைத்துக் குழந்தைகளும் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான அடிப்படை உரிமைகள் கிடைக்க வேண்டும். இந்த அடிப்படையில் எழுத்து, கலை சார்ந்த முயற்சிகளில் சங்கம் தொடர்ந்து முனைப்புடன்  ஈடுபடுதல்.

3. குழந்தைகளின் மீது செலுத்தப்படும் வன்முறை, ஒடுக்குமுறை, பாரபட்ச அணுகுமுறை ஆகியவற்றுக்கு எதிராக எழுத்து, கலை சார்ந்த செயல்பாடுகளில் சங்கம் ஈடுபடுதல்.

4. மரபு, வரலாறு, பொருளியல், அறிவியல், சூழலியல், அரசியல், பண்பாடு, கலைகள்  சார்ந்து கடந்தகாலம், மற்றும் சமகாலத்தை வெளிப்படுத்தும் கலை, இலக்கியப் படைப்புகளைப் படைப்பது,   வாசிப்பது, பரவலாக்குவது உள்ளிட்ட முயற்சிகளை  முன்னெடுத்தல்.

5. படைப்பாளர்கள், கலைஞர்கள், கதைசொல்லிகள், செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், குழந்தைகள் ஆகியோரின் படைப்பூக்கத்தை வளர்ப்பதற்கு  பாடுபடுதல்.

6. மூடநம்பிக்கைகள், சாதிப் பாகுபாடு, மதப் பாகுபாடு, இன வேறுபாடு, இன-மொழிவெறி போன்ற பாகுபாடுகளுக்கு எதிராக எழுத்து, மற்றும் கலைச் செயல்பாடுகள் வழியாகக் குரல்கொடுத்தல்.

7. அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமான வாய்ப்பு, பாகுபாடில்லாத மகிழ்ச்சியான வாழ்க்கை உள்ளிட்டவற்றை உத்தரவாதப்படுத்த கலைப்படைப்புகளின் வழியாக பாடுபடுதல்.

8. அனைத்துக் குழந்தைகளும்  தாய்மொழியில் தவறில்லாமல் பேச, வாசிக்க, எழுதுவதற்குக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்குத் தேவையான முயற்சிகளைச்  செய்தல்.

9. குழந்தைகளின் நலன்களுக்காகவும், அவர்களுடைய அடிப்படையான  உரிமைகளுக்காகவும் போராடுகிற அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து செயல்படுதல்.

10. சங்கச் செயல்பாடுகளில் குழந்தைகளின் நலன்களுக்கு எதிரான வணிக நோக்கங்கள் நுழைவதையோ, நோக்கங்களை நீர்த்துப் போகச்செய்வதையோ, மலினமாக்கிவிடுவதையோ  அனுமதிக்காமல் இருப்பது.

11. குழந்தைகளுக்கான கலை, இலக்கியப் படைப்புகள் கலாபூர்வமாக, கற்பனைவளமிக்கதாக, சுதந்திர சிந்தனையை ஊக்குவிப்பதாக, அறிவியல் பார்வை உடையதாக, பகுத்தறிவுபூர்வமானதாகப் படைக்கப்படுவதை ஊக்குவித்தல்.

12. போர், இனக் கலவரம், சாதிய-மத மோதல், இயற்கைச்சீற்றம், பெருந்தொற்று,  வறுமை, வேலையின்மை உள்ளிட்ட சூழல்களில் குழந்தைகளுக்கு முன்னுரிமையளித்துக் காப்பாற்றவும் பாதுகாக்கவும் தேவையான ஏற்பாடுகளை அரசு செய்வதற்கு தொடர்ந்து குரல் கொடுத்தல்.

13. சமூக – பாலினப் பாகுபாடற்ற, சுதந்திரமான, சமத்துவமான, சமநிலைச் சூழல் கொண்ட எதிர்கால உலகத்தை குழந்தைகளுக்கு உருவாக்கவும், எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையளிக்கவும்  அயராது பாடுபடுதல்.

14. ஒன்று முதல் பதினெட்டு வயது நிறைந்த அனைத்துக் குழந்தைகளும், இலவச தாய்மொழிவழிக் கல்வி பெறுவதை அரசு, சமூகம், பெற்றோர் ஆகிய முத்தரப்பினரும் உறுதிசெய்ய வேண்டும்.

15. குழந்தைகளின் மனநிலைக்கேற்ற கலை, இலக்கியத்தை உள்ளடக்கிய செயல்வழிக் கற்றல் முறையாக கற்பிக்கும் முறை அமைய வேண்டும்.

16. வட்டாரங்களுக்கான தனித்தன்மை, பண்பாடு, மொழி, பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை உள்ளிட்டவற்றை மையமாகக் கொண்ட, நெகிழ்வுத்தன்மையான பாடத்திட்டத்தை மாநில அளவில் உருவாக்கி, நடைமுறைப்படுத்த வேண்டும்.

17. சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் உள்ளிட்டோருக்கு சிறப்புக் கல்வித்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அவர்கள் மையநீரோட்டத்தில் கலந்து இணையான முன்னேற்றத்தை அடையும்வரை, இந்த ஏற்பாடு நீடிக்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை ஒத்த கருத்துடைய அமைப்புகளுடன் இணைந்து அரசிடம் வலியுறுத்திக் கொண்டே இருப்பது, போன்ற நடவடிக்கைகளைச் செய்ய சங்கம் உறுதி ஏற்கிறது.

Author

  • admin

    தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் சங்கம் – சார்பாகப் பதிவு செய்யப்படும் பதிவுகள்.

    View all posts

More Articles & Posts